உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ

Spread the love

அழகர்சாமி சக்திவேல்

பொதுவாய், இலக்கியங்களை திரைப்படமாக எடுப்பது என்பது, மிகுந்த சிரமமான ஒன்றாகும். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இலக்கியங்கள், வெற்றிகரமான திரைப்படம் ஆக எடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம், அந்த இலக்கியக்கதைகள், வழிவழியாக சொல்லப்பட்ட வாய்மொழிக்கதைகள் என்பதாலேயே. ஆனால், சாண்டில்யன் போன்றோர் எழுதிய வரலாற்று இலக்கியங்களைச் சுருக்கி, ஒரு திரைப்பட வடிவம் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நான் இதுவரை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்தது இல்லை. சமீபத்தில், பொன்னியின் செல்வன் கதையை, நாடக வடிவில், சிங்கப்பூரில் நான் பார்க்க நேர்ந்தது. பல்வேறு முக்கிய கதாபாத்திரங்கள் கொண்ட அந்த நீண்ட நெடிய கதையை, நாடகத்தின் வாயிலாக புரிந்து கொள்வது எனக்குச் சிரமமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில், பொன்னியின் செல்வன் புத்தகங்களை ஏற்கனவே படித்து வந்தோரால், நாடகத்தை நன்கு ரசித்துப் பார்க்க முடிந்தது. இலக்கியங்களை, நாடக வடிவமோ அல்லது திரைப்பட வடிவமோ கொடுப்பது என்பது சிரமம் என்பதற்கு இது ஒரு உதாரணம். வேண்டுமென்றால் தொலைக்காட்சியின் நெடுந்தொடர்களாக கொடுக்க முயற்சி செய்யலாம். ஒர்லாண்டோ என்ற இந்த திரைப்படம் 1928-இல் எழுதப்பட்ட “Orlando – A Biography”  என்ற ஆங்கில இலக்கிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். நான்கு நூற்றாண்டுகள் வாழும் ஒரு மனிதனின் கதையை, நாவலாசிரியர் திருமதி வர்ஜினியா வுல்ப், கவிதை சார்ந்த இலக்கிய நடையில் திறம்படச் சொல்லி இருப்பதால், ஒர்லாண்டோ என்ற அந்த இலக்கிய நாவல், பல்வேறு பல்கலைக்கழகங்களில், ஒரு ஆங்கிலப் பாடமாக வைக்கப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நீண்ட நாவலை, அதன் இலக்கியத்தரம் மாறாமல் திரைப்படம் ஆக்கி, வர்த்தக ரீதியாக வெற்றி பெற்று, பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்து இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் திருமதி சாலி பாட்டர். சாலி பாட்டரின் இலக்கிய ஆர்வம், இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது என்று நான் சொன்னால் அது மிகையாகாது.

ஒர்லாண்டோ என்ற இந்தப் படம் சொல்லும் விஷயத்தை ஒரு வரியில் சொல்லவேண்டுமா?  ‘ஆண் இனம், பெண் இனம், ஆண்-பெண்ணுக்கு இடைப்பட்ட இனம் என இந்த எல்லா இனங்களிலும் வித்தியாசம் ஒன்றும் இல்லை’ என்பதே இந்தப்படம் சொல்லும் முக்கியமான விசயம் ஆகும். ஒரு நூற்றாண்டில் பெண் தன்மையுடைய ஆணாய்ப் பிறக்கும் ஒருவன், அடுத்த நூற்றாண்டில் ஆண் தன்மையுடைய பெண்ணாய் மாறி,  அதற்கடுத்த நூற்றாண்டில் ஒரு குழந்தைக்குத் தாயாய் மாறி எப்படி வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுகிறான் என்பதே படத்தின் கதைச் சுருக்கம். இந்தப்படம் வெறும் பெண்ணுரிமை மட்டுமே பேசிவிட்டுப் போகாமல், ஆணில் இருந்து வேறுபடும் எல்லா மனித உரிமைகளையும் ஆதரித்துப் பேசுகிறது என்பது படத்தின் ஒரு சிறப்பு ஆகும். இன நீர்ப்பு (Gender fluidity) என்பதை இன்று வரை சரியாய்ப் புரிந்து கொள்ளாத எத்தனையோ பேருக்கு, சரியாய்ப் பாடம் கற்பிக்கும் ஒரு படமாக ஒர்லாண்டோ திரைப்படத்தைச் சொல்லலாம். இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில், இங்கிலாந்தை ஆட்சி செய்த எலிசபெத் ராணியின் அரண்மனையில் வாழும் கதாநாயகனில் இருந்து தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில், அவனே கதாநாயகியாய், தான் பெற்ற குழந்தையோடு மோட்டார் பைக்கில் செல்லும் வரை நீளுகிறது. படத்தில் நடித்து இருப்பவர்களை ஆராய்ந்து பார்த்தால் நமக்கு நிறைய ஆச்சரியமான விஷயங்கள் புலப்படுகின்றன. இந்தப்படத்தில், எலிசபெத் மகாராணியாக நடித்து இருப்பவர் ஒரு ஆண். படத்தில் கதாநாயகனாய் வேடம் ஏற்று இருப்பவர் ஒரு பெண். இப்படி படத்தின் ஆச்சரியங்கள் நீளுகிறது. இந்தப்படம் ஒரு கற்பனைக்கதையை அடிப்படையாகக்கொண்டு இருந்தாலும், பல உண்மை வரலாற்றுச் சம்பவங்களை அங்கங்கே கோர்த்து இருக்கிறது என்பதால், படத்தை ஒரு வரலாற்றுப் படமாகவே ரசிக்க முடிகிறது. பதினாறாம் நூற்றாண்டில், இங்கிலாந்தின், தேம்ஸ் நதிமேல் நடந்த பனி விழா, ஒன்றாம் எலிசபத் மகாராணியின் ஆட்சி மற்றும் அவரது மரணம், பதினேழாம் நூற்றாண்டில், துருக்கியின் கான்ஸ்டன்டைன் நோபிளில் நடந்த கலவரம்,  பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல ஆங்கிலக்கவிஞர் அலெக்ஸ்சாண்டர் போப்புடன் சந்திப்பு என பல்வேறு வரலாற்று விசயங்களையும் உள்ளடக்கிய விசயமாக இந்தப்படம் இருக்கிறது.

இந்தப் படத்தின் கதை, ஒரு கவிதைச் செறிவுள்ள பின்புலம் கொண்டுள்ளதால், படத்தில் நிறைய கவிதைகளும், பாடல்களும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. பாடல்கள் அத்தனையையும் ஒருங்கிணைத்து ஒரு ரம்மியமான மற்றும் அற்புதமான இசைஅமைத்திருக்கும் இசையமைப்பாளர் குழுவைப் பாராட்டியே ஆகவேண்டும். முக்கியமாய், படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவராய், படத்தின் இயக்குனர் திருமதி சாலி பாட்டரே பணியாற்றி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் மூலக்கதை பிறந்த விதமே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி ஆகும். மூலக்கதையை எழுதிய திருமதி வெர்ஜினியா ஒரு லெஸ்பியன் ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். அவரது காதலி திருமதி விட்டா ஒரு பரம்பரை பணக்காரி. விட்டாவின் பரம்பரை எப்படி பணக்காரப் பரம்பரை ஆனது என்பதற்கு, விட்டாவின் குடும்பத்தில் வழிவழியாய் சொல்லப்படும் கதை ஒன்று இருந்தது. அந்தக் கதையை, திருமதி விட்டா, தனது காதலி வெர்ஜினியாவிடம் சொல்ல, அதைக்கொண்டு வெர்ஜினியா எழுதிய கதையே ஒர்லாண்டோவின் மூலக்கதை ஆகும். படத்தின் சில காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டு இருந்தாலும், கதையின் நடுப்பகுதி, பதினெட்டாம் நூற்றாண்டின் இஸ்லாமியப் பின்புலம் கொண்டுள்ளதால், படத்தின் ஒரு பகுதியாய், உஸ்பெகிஸ்தான் நாட்டின் பிரமிப்பை ஊட்டும் ஜும்மா மசூதியையும், அந்நாட்டின் அழகிய காடுகளையும் படமாக்கிக் காட்டியிருப்பது படத்தின் இன்னொரு சிறப்பு அம்சமாகும். ஆங்கில இலக்கியம் படித்த அத்தனை பேரும் மகிழும் வண்ணம், புகழ்பெற்ற ஆங்கிலக்கவிஞர்களான ஷெல்லி, ஷேக்ஸ்பியர் போன்றோர் எழுதிய பல கவிதைகள், இந்தப்படத்தில் இடம்பெற்று இருக்கின்றன.

இனி படத்தின் கதையை அடுத்துப் பார்ப்போம்.

1992-இல் வெளிவந்த ஒர்லாண்டோ என்ற இந்தத் திரைப்படம், 2010-இல் மறுவெளியீடு செய்யப்பட்டது. வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் என்ற பெருமையுடைய இந்தப்படம் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட படம் ஆகும். முக்கியமாய் இந்தப்படத்தில் வேலை பார்த்த சிறந்த இரண்டு பேரை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒன்று படத்தின் ஆர்ட் டைரக்டர். பதினேழாம் நூற்றாண்டு காலத்திய ராணியின் மாளிகை, பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய துருக்கிய அரண்மனை, பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்திய இங்கிலாந்து தெருக்கள் என ஒவ்வொரு விசயத்தையும், நம் கண்முன் கொண்டு வருவதற்கு, அரும்பாடு பட்டுள்ளார் இந்தப் படத்தின் கலை இயக்குனர். கலைநயம் மிகுந்த, எனக்குப்பிடித்த சில காட்சிகளாகச் சொல்லவேண்டுமென்றால், முதலில் அந்த பனிச்சறுக்கு நடனத்தைச் சொல்லுவேன். கடுமையான குளிரில், லண்டனின் தேம்ஸ் நதி உறைந்து போக, அந்த பனியின் மீது, இரவில் ஆடும் அந்தப் பனிச்சறுக்கு நடனக் காட்சி கண்கொள்ளாக் காட்சி ஆகும். அப்புறம், அதே குளிர்காலத்தில், எலிசபத் ராணி இறந்து போக, அவரை பெட்டியில் வைத்து சுமந்து செல்லும் காட்சியும் நம் மனதைக் கொள்ளைகொள்ளும் இன்னொரு காட்சி ஆகும்.  இந்தத் திரைப்படத்தில் பாராட்டுக்குரிய இன்னொருவர் படத்தின் ஆடை வடிவமைப்பாளர். ஒரே பெண்ணை படத்தின் கதாநாயகனாகவும் காட்டி, கதாநாயகியாகவும் காட்டிய பெருமையின் ஒரு பகுதி,  நிச்சயம் ஆடை வடிவமைத்தவரைப் போய்ச் சேரும். அந்தக்கால வெள்ளைக் காரர்களுக்கு என்றே, ஒரு வித உடைஅமைப்பும், ஒரு வித கூந்தல் அமைப்பும் இருக்கும். இது போன்ற உடை விசயங்களை, நான்கு நூற்றாண்டுகளுக்கு வித்தியாசப்படுத்தி காட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. படத்தின் பின்புலமாய், ப்ராடேஸ்டான்டு கிறித்துவ முறைகளும், இஸ்லாமிய முறைகளும் இருப்பதால், அதற்கேற்பவும் உடைகள் தயார் செய்து இருப்பது நிச்சயம் வடிவமைப்பாளரின் ஒரு சாதனையே.

படத்தின் கதைக்கு வருவோம். படத்தின் கதாநாயகனான ஒர்லாண்டோ, ஒன்றாம் எலிசபத் மகாராணியின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு பணியாள். கவிதை வாசிப்பதில் வல்லவனான ஒர்லாண்டோ, ஒரு பெண்மை நிறைந்த ஆண். சாகப்போகும் காலத்தில் இருக்கும் எலிசபத் மகாராணி, நாயகன் ஒர்லாண்டோவை  தனது அருகில் கூப்பிடுகிறார். “எப்போதும் மங்கிப் போகாதே…எப்போதும் கவிழ்ந்து விடாதே…எப்போதும் முதுமை பெறாதே” என ஒர்லாண்டோவை வாழ்த்தும் ராணி,  தனது சொத்துக்களில் ஒரு பகுதியான, வளமையான நிலங்களையும், ஒரு கோட்டையையும் ஒர்லாண்டாவிற்கு தானம் செய்துவிட்டு இறந்து போகிறார். இப்போது பணக்காரன் ஆகிவிட்ட ஒர்லாண்டோ, தனது சொந்தங்களுடன் கோட்டையில் குடியேறுகிறான். ரஷியாவில் இருந்து வரும் இளவரசி சாஷாவைக் ஒர்லாண்டோ மனதிற்குள்ளேயே காதலிக்க, அவளோ ரஷ்யாவிற்கே திரும்பிச் சென்று விடுகிறாள். மனம் நொந்துபோகும் ஒர்லாண்டோ “ஓக் மரமே” என்று ஒரு கவிதை எழுதி தனது நண்பனான புலவனிடம் காட்ட அவனோ அவனைப் பரிகாசம் செய்கிறான். இதற்கிடையில், இன்னொரு பிரபுவம்சத்தில் பிறந்த நங்கை ஹாரியட் ஒர்லாண்டோவைக் காதலிக்கிறாள். ஆண் தன்மை அதிகம் நிறைந்த பெண் ஹாரியட்டால் தொந்தரவுக்குள்ளாகிறான் ஒர்லாண்டோ. மன்னர் இரண்டாம் சார்லஸ், ஒர்லாண்டாவை, துருக்கியின் தூதுவராக நியமிக்க, இதுதான் சமயம் என, நங்கை ஹாரியட்டிடம் இருந்து தப்பித்துக்கொள்கிறான் ஒர்லாண்டோ. ஒர்லாண்டோ துருக்கி சென்ற சமயம், அங்கே ஒரு மாபெரும் கலவரம் வெடிக்கிறது. அரசியல் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்ளும் ஒர்லாண்டோ, தான் கைது செய்யப்படும் சூழ்நிலையோடு உறங்கப்போகிறான். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் ஒர்லாண்டோ, தான் ஒரு அழகிய பெண் ஆக மாறி இருப்பதை உணர்கிறான். “நான் முன்னர் ஆணாய் இருந்தேன்..இப்போது பெண்ணாய் மாறி இருக்கிறேன்..எல்லாம் ஒன்றுதான்” என்று ஒர்லான்டோ பேசும் ஆண்-பெண் சமத்துவ வசனம், இங்கே குறிப்பிடத்தக்கது. பெண்ணாய் மாறிய ஒர்லாண்டோ, ஒரு நாடோடி மூலம், துருக்கியில் இருந்து தப்பித்துச் சென்று ஒரு நாடோடிக் கூட்டத்த்தில் தஞ்சம் அடைகிறாள்.. நாடோடிக்கூட்டத்தொடு வாழும் ஒர்லாண்டோ, தனது பிறந்த நாட்டைக்காணும் ஆசையில்,  இங்கிலாந்தில் உள்ள, அரசி பரிசாகக் கொடுத்த, தனது சொந்தக் கோட்டைக்குத் திரும்புகிறாள். இங்கிலாந்து வழக்கப்படி, சொத்துரிமை ஆணுக்கே இருப்பதால், பெண்ணாய் மாறிய ஒர்லாண்டோவிற்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. மறுபடியும், முன்னர் தொந்தரவு கொடுத்த பிரபுகுடும்ப நங்கை ஹாரியட்டிடம் மாட்டிக்கொள்ளும் ஒர்லாண்டோ தான் ஒரு பெண் என்ற உண்மையை உரைக்கிறாள். நங்கை ஹாரியட்டோ, தான் உண்மையில் ஒரு ஆண் என்றும், இப்போதும் ஒர்லாண்டோவைக் காதலிப்பதாகவும் சொல்ல, மறுபடியும் ஹாரியின் காதல்வலையில் இருந்து தப்பிக்கிறாள் ஒர்லாண்டோ.

இப்போது, கதை பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. தான் முன்னர் எழுதிய “ஓக் மரமே” என்ற கவிதையை, புத்தகமாக பிரசுரிக்க விழைகிறாள் ஒர்லாண்டோ. முன்னர், இதே கவிதையை கிண்டல் செய்த, ஒர்லாண்டோவின் நண்பனான புலவன், இம்முறை கவிதையை பாராட்டிப் பேசுகிறான். இழந்துபோன சொத்துக்களை மீட்க, ஒர்லாண்டோ மறுபடியும் நீதிமன்றத்தை நாடுகிறாள். இம்முறை வழக்கில் வெற்றியும் பெறுகிறாள். பிறகு, தன்னைப் போல பெண் தன்மையுடன் பிறந்த ஆணான ஷெல் என்பவனை மணந்து கொள்கிறாள். அவனுக்கும் ஒர்லாண்டோவிற்கும் பிறக்கும் பிள்ளையோடு கொஞ்சி மகிழ்கிறாள் ஒர்லாண்டோ. படம் இங்கே நிறைவு செய்யப்படுகிறது. படத்தின் கடைசியாய் பாடப்படும் பாடல் பற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும்.

I am coming! I am coming!
Here I am!
Neither a woman, nor a man
We are joined, we are one
With the human face
We are joined, we are one
With the human face
I am on earth
And I am in outer space
I’m being born and I am dying

ஆண், பெண் என்று இனங்களில் எந்த வேறுபாடும் பெரிதாய் இல்லை என்ற கருத்துக்கொண்ட அந்தப்பாடல், நம் காதுகளை குளிர்விப்பதொடு, மனித இனம் குறித்த நம் சிந்தனைகளையும் தூண்டி விடுகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

Series Navigationதொடுவானம் 227. ஆலய அர்ப்பணிப்புகோனோரியா ( மேகவெட்டை நோய் )