உலகெலாம்

Spread the love

இருள் கவிய
சாலை சர்ப்பமாகும்.

சாலையில்
அம்மா கையை உதறி விட்டுக்
குழந்தை ஓடும்.

பதறிச்
சாலைக்கும் முந்தி
சடுதியில் ஓடிப் போய்ப் பிடிப்பாள்
அம்மா.

அம்மா!
அதென்ன?

மரம்.
அதக் கேட்கல.

காக்கா.
அதக் கேட்கல.

ஆகாசம்.
அதக் கேட்கல.

மேகம்.
அதக் கேட்கல.

நட்சத்திரம்.
அதக் கேட்கல.

நிலா.
அதக் கேட்கல.

போடி!
தெரியாது.

கைகள் விசிறியாய்க் குழந்தை
சிரிக்கும்.

அம்மா
குழந்தையை வாரி
மழைமுத்தம் பொழிவாள்.

அஞ்ஞான்று
உலகெலாம் சிலிர்ப்பது தெரியும்.

கு.அழகர்சாமி

Series Navigationஆழ் கடல்சிறுகவிதைகள்