ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)

ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
This entry is part 2 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஷைன்சன்

 

abcd     அன்னா ஹஸாரே எப்படி சில நாட்களுக்குள்ளாக இந்தியாவின் மிக முக்கியமான நபராக மாறி, அதே வேகத்திலேயே மறக்கப்பட்டும் போனார்? பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் இந்திய நாட்டில் நிர்பயாவின் மீதான வன்முறை மட்டும் எப்படி நாட்டின் மனசாட்சியை உலுக்கும் ஒரு சம்பவமாய் மாறிப்போனது? நாடெங்கும் பல கொலைக்குற்றங்கள் நடக்கின்ற போது நொய்டா இரட்டைக் கொலை மட்டும் எப்படி நாடு முழுக்க பிரபலமானது? பத்து வருடங்களுக்கு முன்பு நாட்டின் மனசாட்சியை உலுக்கிய குஜராத் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த மோடி இப்போது முன்னேற்றத்தின் முகமாகத் தோன்றுவது எப்படி?

 

இந்தக் கேள்விகள் பலவாயிருந்தாலும் இவற்றின் பதில் ஒன்று தான். ஊடகங்களே இவற்றுக்குக் காரணம். ஊடகங்களே கதாநாயகர்களையும், வில்லன்களையும் உருவாக்குகின்றன. அவர்களைச் சார்ந்த பிம்பங்களையும் உருவாக்குகின்றன. தங்கள் தேவைகளுக்கேற்ப அவர்களை அரங்கேற்றவும், காணாமற்போகவும் செய்கின்றன.

 

ஊடகங்களின் இத்தகைய வலிமையை உணர்த்தும் திரைப்படம் இது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன் இந்திய அமெரிக்கத் தந்தையால் கட்டாயப்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு இளைஞனும் அவன் தோழனும் எப்படி ஊடகங்களின் புதுக் கதாநாயகர்களாகிறார்கள் என்பதை இத்திரைப்படம் சித்தரிக்கிறது.

 

அவ்விளைஞன் அமெரிக்காவில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அவனது தந்தை அவனை கட்டாயப்படுத்தி இந்தியாவில் வாழுமாறு அனுப்பி வைக்கிறார். இந்தியாவில் தன் மகன் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே அனுப்பி வைக்கிறார். ஒரு இந்தியக் கல்லூரியிலும் அவனைச் சேர்த்து விடுகிறார்.

 

தொடர்ந்து அவர்களது செலவு குறைவான வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் ஊடகங்கள் அவர்களை இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக முன் நிறுத்துகின்றன. அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களை நகைச்சுவையுடன் விவரித்துச் செல்கிறது இத்திரைப்படம்.

 

இளைஞர் முன்மாதிரிகள் என்று சித்தரிக்கப்படுபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எத்தனை முரணுடையதாயிருக்கிறது என்பதை நாம் இத்திரைப்படத்தில் காண்கிறோம். புதிதாக அரசியலுக்கு வந்த ஒரு அமைச்சரின் வாரிசும் இளைஞர் முன்மாதிரியாக முன்நிறுத்தப்படுகிறார். அவரது முரண்பாடுகள் கேலி செய்யப்படுகிறன்றன. இந்திய அமெரிக்க இளைஞர்களின் இந்தியாவை விட்டுத் தப்பித்தல் என்னும் ஆசையும், இந்திய ஊடகங்கள் அவர்கள் மீது இருத்தும் கதாநாயக பிம்பமும் ஒரு முரண்நகை விளைவை ஏற்படுத்துகின்றன.

 

படத்தினிறுதியில் நமது கதாநாயகர்களும், நம்மை உலுக்கும் நிகழ்ச்சிகளும் இப்படித்தான் ஏற்படுத்தப்படுகிறார்களோ என்று நமக்கே மனச்சோர்வு ஏற்படுகிறது.

 

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம் – 28நத்தை ஓட்டுத் தண்ணீர்நிஜம் நிழலான போது…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *