எச்சில் சீட்டுகள்

 

 

கோ. மன்றவாணன்

பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த நான் “…………………க்கு ஒரு டிக்கெட்” என்று சொல்லிப் பணத்தை நடத்துநரிடம் கொடுத்தேன்.. அவர் தன் விரலால் நாவின் எச்சிலைத் தொட்டுப் பயணச்சீட்டை நனைத்து என் கையில் கொடுத்தார். அதை வாங்க அருவருப்பாக இருந்தது. யார் பயணச்சீட்டுக் கேட்டாலும் எச்சில் தொட்டுத்தான் கொடுத்தார். அவற்றை வாங்கும்போது சிலர் முகம் சுழித்தனர். பலர் எந்த முகக்குறியும் காட்டாமல் வாங்கிப் பைக்குள் பத்திரப் படுத்தினர்.

இப்படி எச்சில் தொடுவது சில நடத்துநர்களுக்கு அதுபோக்குச் (அனிச்சை) செயலாக மாறிவிட்டது.

இந்தக் கொரோனா காலத்தில் நடத்துநரும் முகக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தால் எச்சில் தொடும் கெடுதி இருந்திருக்காது. “கொரோனாவது கிரோனாவது எல்லாம் டூப்பு சார்”. என்பது போல் பயணிகள் பலரும் முகக்கவசம் அணியவில்லை. விவரம் தெரியாத அப்பாவிகள் நான்கைந்து பேர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தனர். அம்மண ஊரில் கோவணம் கட்டியவர்களைக் கேலியாகப் பார்ப்பது போல், முகக்கவசம் அணிந்தவர்களை மேலும் கீழும் ஏளனமாகப் பார்க்கிறார்கள்.

பேருந்துகளில் ஏறினால் எச்சில் சீட்டுகள்தாம் தருகிறார்கள். அதிசயமாய் மிகச்சில நடத்துநர்கள்தாம் எச்சில் தொடாமல் தூயப் பயணச் சீட்டுகளைத் தருகிறார்கள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நான், ஒரு நடத்துநரிடம் “எச்சில் தொடாமல் டிக்கெட் கொடுங்க” என்று பணிவாக வேண்டுகோள் வைத்தேன். அவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, “கீழே இறங்கி வேற வண்டியில வாங்க” என்று சொல்லி, நீ…ள்… விசில் ஊதினார். அடுத்த வண்டியிலும் அதே கதைதான் என்று தெரிந்ததால் நடத்துநரிடம் கெஞ்சிக் கூத்தாடி, எச்சில் சீட்டு வாங்கிப் பையில் வைக்காமல் இரு விரல்களால் பட்டும் படாமல் பிடித்தபடிப் பயணத்தைத் தொடர்ந்தேன். பேருந்தில் ஏறும் போதெல்லாம் எச்சில் பயணச்சீட்டால் மனப்படப்படப்பு வான்உச்சிக்கு எகிறுகிறது.

எங்கள் தொடக்கப் பள்ளிக் காலத்தில் மாணவர்கள் இடையே ஒரு பழக்கம் இருந்தது. ஒரு மிட்டாய் இருந்தால் அதைப் பல்லால் கடித்துப் பாதியை நண்பருக்குக் கொடுக்க மாட்டார்கள். காரணம்… அதில் எச்சில் பட்டிருக்கும். அதற்காக ஒரு திட்டம் வைத்திருந்தார்கள். அந்த ஒரு மிட்டாயைச் சட்டைத் துணியால் மடித்துக் கடித்துத் துண்டாக்கித் தருவார்கள். நடத்துநர்களுக்கு இது புரிந்தால் நல்லது.

இன்று உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பினேன். ஊர்பேர் சொல்லிப் பயணச் சீட்டுக் கேட்டேன். அவரும் எச்சில் தொட்டுத்தான் கொடுத்தார். அவர் தோளில் மாட்டிய தோல்பையை எதிர்பாராமல் பார்த்தேன். அந்தப் பையின் ஓர வாட்டில் ஒரு பஞ்சு அடைப்பி செருகப்பட்டு இருந்தது. (அடைப்பி என்றால் டப்பி) அது, கிளிசரின் நனைக்கப்பட்ட பஞ்சு உள்ள அடைப்பி. ‘ஆ… இது நல்ல திட்டமாக இருக்கிறதே’ என்று வியந்தேன். நீர்ப்பாகு (கிளிசரின்) தொட்டுப் பயணச் சீட்டைக் கிழித்தால் நலவாழ்வு ஓங்கும் என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். வெளியில் சொன்னால் நடத்துநர் இறக்கி விடுவார் என்ற முன் அனுபவம் இருக்கிறதே…

ஒரு காலத்தில் நீர்ப்பாகு (கிளிசரின்) பஞ்சு அடைப்பியை வங்கியில் பார்த்திருக்கிறேன். பணத்தாள்களை எண்ணும்போது அதைத் தொட்டுத் தொட்டுத்தான் எண்ணுவார்கள். இப்போது பணம் எண்ணும் இயந்திரம் வந்துவிட்டதால் பஞ்சு அடைப்பி விடைபெற்று வெகுகாலம் ஆகிவிட்டது. ஆனாலும் சில வணிகர்கள் பணத்தாள்களை எச்சில் தொட்டு எண்ணுகிறார்கள். சில வாசகர்களும் புத்தகப் பக்கங்களை எச்சில் தொட்டுத் திருப்புகிறார்கள். எச்சில் பழக்கம் இடுகாடு மட்டும் என்ற புதுமொழி தோன்றலாம். அவை கிடக்கட்டும். பயணச் சீட்டுக்குத் திரும்பி வருவோம்.

மிக மெல்லிய தாளில் பயணச் சீட்டுகளை அச்சடிக்கிறார்கள். அவற்றைக் கட்டு ஆக்கும் போது மிகு அழுத்தம் கொடுக்கிறார்கள். அதனால் சீட்டுகள் ஒட்டிக் கொள்கின்றன. தவறுதலாக ஒரு சீட்டுக்கு இரண்டு சீட்டுகளைக் கிழித்துத் தந்துவிட்டால் இழப்பு நடத்துநருக்குத்தான். அதனால் எச்சில் கைவண்ணத்தால் இழப்பைத் தடுக்கிறார்கள். இது, நடத்துநர்கள் பக்கத்து நியாயம். பரிதாபப்பட்டுப் பயணிகள் பக்கத்து நியாயத்தையும் பார்க்க வேண்டாமா? எச்சிலால் நோய் பரவலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே இரு பக்க நியாயங்களையும் ஏற்று நீர்ப்பாகு பஞ்சடைப்பியை நடத்துநர்கள் வைத்துக் கொண்டால் நலம் பயக்குமே!

இதைவிடவும், பயணச் சீட்டு எந்திரத்தைப் பயன்படுத்தினால் நடத்துநர்களுக்குச் சிரமம் குறையும். இடது கையில் தொகை வாரியாக பல கட்டுகளை அழுத்திப் பிடித்திருக்கும் அவசியம் இருக்காது. எச்சில் தொடவேண்டிய பழக்கம் அற்றுப் போகும். பத்துப் பேர் கொண்ட குழுவினருக்கும் ஒரே பயணச் சீட்டுத் தந்து காகிதப் பயன்பாட்டைக் குறைக்கலாம். பயணச் சீட்டுகள் கணக்கு விவரத்தையும் வசூலான பண விவரத்தையும் உடனடியாகப் பார்க்க முடியும்.

இதை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்ற கேள்விக்குள் என்ன புதைந்து இருக்கிறதோ?

 

 

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]திருப்பூரியம் கருத்தரங்கம்