எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்

அணுஉலைகள் வெடித்துச்சிதறினால் அனைத்து உயிரினமும் பூண்டோடழியும்
என்ற எச்சரிக்கையை கருத்திலெடுத்துக்கொள்ளாமல்,
ஞெகிழிப்பைகள் பூமியை மலடாக்கும் என்ற அறிவியல் உண்மையை கண்டுகொள்ளாமல்,
சிட்டுக்குருவிகள் அருகி வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல்,
நிலத்தடி நீர் வற்றி, பூமி முழுதும் பாலைவனமாக மாறிவருகிறது
என்பது பற்றிக்கவலை கொள்ளாமல்,
பவளப்பாறைகள் கூண்டோடு அழிக்கப்படுகிறது என்று அறிந்துகொள்ளாமல்,
அருகி வரும் மொழிகளுள் நமதும் ஒன்று என்றுணராமல்,
நாளொன்றிற்கு நான்கு பறவையினங்கள்
இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்றன என்றுணராமல்,

அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம்

நமது கலைகள் அழிந்து வருகின்றன என்பதைப்பொருட்படுத்தாமல்,
நமது கிராமத்தை மறக்கவைத்து உலகமே ஒரு கிராமம்
என்ற திட்டமிட்ட பரப்புரையை உணர்ந்துகொள்ளாமல்,
நான் பேசும் என் தாய்மொழியால் என்ன பலன் என
அதையும் ஒரு நுகர்வுக்கலாச்சாரத்தின் மனப்பாங்குடனேயே
பலரும் உணரமுற்படுதலை அறிந்துகொள்ளாமல்,
உள்ளூர்க்கோழியை வறுத்துத்தின்னவும் வெளியூர்க்காரனின்
தொழில்நுட்பம் எதற்கு என்பதைப்பற்றிக் கேள்வி ஏதும் கேட்காமல்,
மஞ்சளின் மகிமையறிந்து அன்னியன் அவனுக்குச் சொந்தமாக்கிக்கொண்ட கொடுமையைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல்,

அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம்

உலகின் அத்தனை சாதனைகளும் பலமுறை முயன்ற பின்னரே
சாத்தியமானது என்று உணரமுற்படாமல்,
தனக்குள் என்ன சக்தி இருக்கிறது என்று ஆராயவிருப்பில்லாமல்,
தன்னால் என்ன துறையில் பிரகசிக்க இயலும் என்று
அறிந்துகொள்ள முற்படாமல்,
வெறுமனே தாமே இவ்வுலகின் மூத்தகுடி என்று கூறிக்கொண்டே
ஆக்கப்பூர்வச் செயலென எதையும் தெரிந்து செயல்படாமல்,

அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம்

வெந்ததை மட்டுமின்றி வேகாததைத்தின்றாலும்
விதி வந்தால் சாவோம் என்று உணராமல்,
என் கடவுளே பெரிது என்று பிதற்றித்திரிபவரை விலக்கி
உழைப்பே கடவுள் என்பதை உணர்ந்து கொள்ளாமல்,
நாளைக்குச்செய்தாலும் இந்தச்செயல் நடக்குமெனக்கருதி
இன்றைய பொன்னாளை வெறுமனே வீணடிப்பதை உணராமல்,

அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம்

இத்தனை கூறிய பின்னரும்
எந்த ஆக்கப்பூர்வச் செயலையும் செய்ய விருப்பின்றி
நீங்களும் இந்தக்கவிதையின் தலைப்பையே
உங்களுக்குள் எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தீர்களெனில்
இங்கனம் கவி எழுதி ஒரே நாளில்
யாரையும் திருத்தி விட இயலாது என்று

எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்.

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationசாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்