எனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்

Spread the love


எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் திரு.அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். 1957ல்தான் அவரது படைப்பை நான் ‘சரஸ்வதி’ இதழில் படித்தேன். பிறகு ‘ஆனந்தவிகடனி’ல் வந்த முத்திரைக் கதைகளும், குறுநாவல்களும், தொடர் நாவல்களும் என்னை அவரது தீவிர ரசிகனாக ஆக்கின. அதற்குப் பிறகு புதுமைப்பித்தனைப் படிக்க நேர்ந்த போது, ஜெயகாந்தன் அவரது வாரிசாகவும், அவரது இடத்தை நிரப்புகிற வராகவும் எனக்குத் தெரிந்தார்.

1962ல் அரியலூரில் நடைபெற்ற ‘கலை இலக்கியப் பெருமன்ற’ ஆண்டு விழாவில் ஜெயகாந்தன் அவர்கள் பேச வந்தபோது, மன்றத்தின் அப்போதைய செயலாளரும், என் உறவினருமான திரு.ஏ.ஆர்.சீனிவாசன் அவர்கள், நான் ஜெயகாந்தனின் ரசிகன் என்பதை அறிந்திருந்ததால், அவரை எனக்கு அறிமுகப்படுத்துவதற்காக என்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார். நானும் ஆர்வத்துடன் சென்றேன்.

திரு.சீனிவாசன் அவர்கள் என்னை ஜெயகாந்தன் அவர்களுக்கு அறிமுகப்படுத்திய தோடல்லாமல் இன்னொரு அரிய வாய்ப்பினையும் எனக்கு நல்கினார். அன்றைய விழாவுக்குத் தலைமை தாங்க வேண்டியவர் வராத நிலையில், என்னைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். ஜெயகாந்தன் அவர்களைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் வந்த எனக்கு, அவரது கூட்டத்து்க்குத் தலைமை தாங்கும் வாய்ப்புக் கிட்டுமென்று நான் கனவு கூடக் கண்டதில்லை. அதனால், அவரது பிரம்மாண்டம் கருதி அதை ஏற்கத் தயங்கினேன். பேராசிரியர் எம்.எஸ்.நாடாரும் அவ்விழாவுக்கு வந்திருந்தார. அப்போது நான் ‘ஆனந்தபோதினி’, ‘பிரசண்ட விகடனை’த் தாண்டி, மெல்ல,’ஆனந்தவிகட’னில் எழுதும் வளர்ச்சி பெற்றிருந்தேன். அதனைச் சுட்டிக் காட்டி திரு.சீனிவாசன் அவர்கள்,” நீங்களும் எழுத்தாளர் – அதோடு அவரது தீவிர ரசிகர் என்பதால், நீங்கள் தலைமை ஏற்கத் தகுதியானவர்தாம் தயங்க வேண்டாம்” என்று சொல்லி, தலைமை ஏற்க வைத்தார்.

மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் ஜெயகாந்தன் என் பக்கம் திரும்பிப் பார்க்கவோ சுமுகம் காட்டவோ இல்லை. அப்போதைய அவரது மனநிலையில் என்னைப் போன்ற கற்றுக்குட்டி எழுத்தாளர்களோ ரசிகர்களோ அவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். நெருக்கமற்ற எவரிடமும் அவர் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார் என்ற பேச்சு இருந்தது. எனவே அவரது உதாசீனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது கூட்டத்துக்குத் தலைமையேற்கும் வாய்ப்புக் கிடைத்த பூரிப்பில் அப்போது நான் இருந்தேன்.

எனது தலைமை உரையில், “திரு.ஜெயகாந்தன் அவர்கள் புதுமைப்பித்தனுக்குப் பிறகு நமக்குக் கிடைத்த அரிய எழுத்தாளர். புதுமைப்பித்தனைப்போலவே அற்புதமாக எழுதுகிறார்” என்றேன். ஜெயகாந்தன் அவர்கள் தனது உரையில், “திரு.சபாநாயகம் அவர்கள் நான் புதுமைப்பித்தனைப் போல எழுதுவதாகச் சொன்னார். இல்லை! நான் புதுமைப்பித்தனை விடவும் மேலாக எழுதுகிறேன். புதுமைப்பித்தனைப் போல எழுதுவதற்கு இன்னொருவர் எதற்கு? நான் ஜெயகாந்தனாக எழுதுகிறேன்” என்று வெட்டினார். அப்போது யார் என்ன பேசினாலும் வெட்டிப் பேசுவது அவரது பாணியாக இருந்தது.

கூட்டம் முடிந்து திரு.சீனிவான் வீட்டில் மதிய உணவுக்குப்பின் பேசிக் கொண்டிருந்தபோது, “நீங்கள் என்ன புத்தகம் படிப்பீர்கள்” என்று ஒரு வாசகனின் அசட்டு ஆர்வத்தோடு கேட்டேன். ” நான் எதுவும் படிப்பதில்லை” என்று மறுபடியும் என்னை வெட்டினார்.மேலும் அவருடன் பேச்சைத் தொடர முடியாதபடி எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

பின்னாளில் அவருடன் நெருக்கமாகப் பழகும் நிலை ஏற்பட்டபோது, ஒருமுறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் பல புத்தகங்களைக் குறிப்பிட்டார். உடனிருந்த நான் “என்ன ஜே.கே! உங்களை நான் முதன்முதல் சந்தித்தபோது, ‘நான் எதுவுமே படிப்பதிலை’ என்றீர்களே!” என்று கேட்டேன். “அதுவா? அப்போது நீங்கள் புதுசில்லையா? ஒரு மிரட்சிக்காக அப்படிச் சொல்லி வைத்தேன்!” என்று சிரித்தார். அப்போது அவருடன் ஒரு படமும் எடுத்துக் கொண்டேன்.

வேலூர் மாவட்டம் திருபபத்தூரில் அவருக்குப் பல நண்பர்கள உண்டு. அவர்களில் எனது நண்பரான திரு.பி.ச.குப்புசாமி அவருக்கு மிகவும் அணுக்கமானவர். சென்னையில் அவருக்கு அலுப்பு ஏற்படும்போதெல்லாம் திருப்பத்தூருக்கு வந்து விடுவார். அப்படி அவர் வரும் போதெல்லாம் குப்புசாமி எனக்கு எழுதி அங்கு என்னையும் அழைத்துக் கொள்ளுவார். இரண்டு மூன்று நாட்கள் இலக்கிய போதையோடு நண்பர் குழாம் மெய்ம்மறந்து நிற்கும்.

அப்படி ஒரு முறை, திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஜம்னாமரத்தூர் என்கிற மலைகிராமத்தில் அங்குள்ள பயணியர் மாளிகையில் திரு.குப்புசாமியின் ஏற்பாட்டின் படி நண்பர்கள் புடைசூழ ஜெயகாந்தன் அவர்களுடன் கழித்த மூன்று நாட்கள் மறகக வியலாதவை. கூடத்தின் நடுவே, அவர் அக்கிராசனர் போல் கட்டிலில் அவர் சம்மணமிட்டு, நடராஜரின் சடாமுடி போல தலைமுடி விரிந்து பிடரியில் தொங்க, மீசையை முறுக்கிய படி, ஒரு சிம்மம் போல் அமர்ந்திருக்க, நாங்கள் கட்டிலைச் சுற்றி அமர்ந்திருப்போம். திரையுலக நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள மற்றம் அந்த மலைப் பிரதேசத்துப் பிரஜைகள் சிலரும் அதில் அடக்கம். பாரதியை தனது குருவாகக் கொண்ட அவரது பேச்சில், பாரதியின் கவிதை வரிகள் உணர்ச்சி பொங்க, வெள்ளமாய்க் கொட்டும். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு நல்ல பயிற்சி இருந்ததால், ‘தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த….’ போன்ற பாடல்களை இடையிடையே அவர் பாடும் போது, கேட்கச் சிலிர்ப்பாக இருக்கும். ‘கள்ளால் மயங்குவது போலே, கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்’ என்கிற பாரதியின் வரிகளைத்தான், அவரது பேச்சிலும் பாட்டிலும் கிறங்கி நின்ற எங்கள் நிலையைச் சொல்ல முடியும். ஒரு மேதையின் சந்நிதானத்தில் நிற்கிற ஒருவித பரவசத்தை நான் அப்போது அனுபவிதேன்.

திடீரென்று எழுந்து திறந்தவெளிக்கு வந்து, அவரது ‘ஆலமரம் ஆலமரம், பாலூத்தும் ஆலமரம்…’ என்கிற அற்புதமான பாடலைத் தனி ராகத்தில் பாடுவார். எல்லோரும் வெளியில் வந்து அதை ரசிப்போம். சிலரை அழைத்து அதைப் பாடச் செய்வார். உடனே காட்சி மாறும். அவரது ‘ஒருமனிதன், ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் ஹென்றி பாடுகவதாக வரும், ‘சோப்பெங்கப்பா……. சோப்பெங்கப்பா……’ சொல்லி விட்டு, குனிந்து நிமர்ந்து ‘சோப்பெங்கப்பா……. சோப்பெங்கப்பா……’ என்று சுற்றிச் சுற்றி வந்து நடன மிடுவார். அது முன்பே பரிச்சயமான குப்புசாமி போன்றவர்களும் உடன் அப்படியே பாடி ஆடியபடி, சுற்றி வருவர். ‘தீராத விளையாட்டுப் பிள்ளையாய் அப்போது அவர் தோன்றுவார்.

பிறகு உள்ளே சபை மறுபடியும் கூடும். கேள்வி நேரம் தொடங்கும். பலரும் பல்வித வினாக்களைத் தொடுப்பர். அவரும் அவருக்கே உரித்ததான சமத்காரத்துடன் பதில் அளிப்பார். அப்போது அங்கிருந்த திருப்பத்தூர் கல்லூரி மாணவர்களில் ஒருவர், “ஐயா, உங்களது சிறுகதைத் தலைப்புக்களைத் திருடி, தம் படங்களுக்கு, – உதாரணமாக ‘புதிய வார்ப்புகள்’ போன்று பெயரிடுகிறார்களே……”என்று இழுத்தார். அதற்கு ஜே.கே சற்று அதட்டலாக, “ஏம்’பா! அந்தக்கதைய நீ எழுதினியா?” என்று கேட்டார். மாணவர் மிரட்சியுடன் “இல்லை ஐயா, நீங்கதான் எழுதுனீங்க!” என்றார். “கதைய எழுதின நானே கவலைப்படலே, உனக்கென்ன? நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எவரும் எடுத்தாளுவர். போ!” என்றார். அதுதான் ஜெயகாந்தன்!

70களில் நான் உளுந்தூர்பேட்டைக்கு அருகில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூர் என்னும் ஊரில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நெடுஞ்சாலையை ஒட்டிய ஒரு வீட்டின்மாடியில் குடி இருந்தேன். ஒரு நாள் மாலை பொழுது சாயும் நேரத்தில், என் பகுதிக்கு வரும் மாடிப்படியில் “சாமியே சரணம் ஐயப்பா” என்று சத்தம் கேட்டது. அது எனக்குச் சம்பந்தமற்றதும் அந்த நேரத்துக்குப் பொருத்தமற்றதுமாக இருந்ததால், நான் அதிர்ந்து எழுந்து படிகளை நோக்கிப் போனேன். கருப்பு உடையில் கழுத்தில துளசிமணி மாலைகளுடன் நண்பர் பி.ச.குப்புசாமி படியேறி வந்து கொண்டிருந்தார். எனக்கு வியப்பு அதிகமாயிற்று. ‘இந்த நேரத்தில் இவர் எப்படி?’ என்று நான் புருவம் உயர்த்தியதும், அவர் மறுபடியும் ‘சாமியே சரணம் ஐயப்பா!’ என்று ரகம் இழுத்தபடி, “என்ன சபா! தெரியலியா?” என்றார். “அய்ய! இது என்ன வேஷம் குப்புசாமி?’ எனறு கேட்டேன். “சபரி மலைக்குப் போறோம் கீழே ஜே.கே காரில் இருக்கிறார்!” என்றார். “அப்படியா!” என்று பரபரத்தபடி கீழே ஓடினேன்.

வீட்டு வாசலில் அவரது வெள்ளைக் கார் நின்றிருந்தது. ஓட்டுனர் இருக்கையில் இருந்த ஜே.கே எனைக் கண்டதும், “சாமியே…. சரணம்!” என்றார். காரின் உள்ளிருந்து இரண்டு மூன்று குரல்கள் அதே சரணத்தை வழி மொழிந்தன. அவர்கள் – திருப்பத்தூர் வையவன், தண்டபாணி, வெள்ளக்குட்டை ஆறுமுகம் ஆகியோர். எல்லோரும் ஜே.கே உட்பட கருப்பு உடையில் கழுத்தில் துளசிமணி மாலைகளுடன் இருந்தனர். “வாங்க ஜே.கே! மேலே போகலாம்” என்று அழைத்தேன். ” நாங்க விரத்தத்துலே இருக்கோம். மலைக்குப் போய்த் திரும்பும் வரைககும் இல்லம் எல்லாம் விலக்கம்! உங்க பள்ளிக் கூடம் எங்கே இருக்கு? அங்கே போகலாம்” என்றார். “போகலாம், கொஞ்சம் இருங்க. ராத்திரி ஆகாரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டு வரேன்” என்றேன. ” அதெல்லாம் வேணாம்! எல்லாம் கொண்டு வந்திருக்கோம். பாலுக்கு மட்டும் சொல்லுங்க. ஏறுங்க போவோம்” என்றார். நான் மேலே ஓடி என் மனைவியிடம் பால் காய்ச்சி அனைவருக்கும் அனுப்பச் சொல்லிவிட்டு வந்து காரில் ஏறிக் கொண்டேன்.

பள்ளிக்கூடம் கூப்பிடு தொலைவில்தான் இருந்தது. விளையாட்டு மைதானத்தை ஒட்டிய திறந்த காற்றோட்டமான அறையில், கார் டிக்கியிலிருந்து அவர்களது மூட்டை முடிச்சுகள் – உணவுப்பண்டங்கள் அடங்கியவை – இறக்கப்பட்டன. வகுப்பு சாய்வு மேஜைகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, வட்டமாக உட்கார சிமிண்ட்தரை விஸ்தாரமாக்கபட்டது. சற்று உட்கார்ந்து ஓய்வெடுத்த பின் பள்ளிக் கிணற்றில் அனைவரும் குளித்து, சந்தனப் பூச்சணிந்து அறைக்குத் திரும்பி, அய்யப்பப் பாடலகள் ஒலிக்கப் பூஜை நடத்தினார்கள். பிறகு மூட்டைகளைப் பிரித்து, கொண்டு வந்திருந்த கடலை, பொரி உருண்டைகள், அதிரசம், பழங்களை உண்டு பாலருந்தினார்கள். என்னையும் சாப்பிட வைத்தார்கள்.

பிறகு ஆரம்பித்தது சபை. வழக்கம் போல ஜே.கே சபை நடுவில் சம்மணமிட்டு அமர, நாங்கள் அனைவரும் சுற்றிலும் உடகர்ந்ததும பாரதி பாடம் ஆரம்பமாயிற்று. பின்னர் அவரது இனிய கர்நாடக இசைப்பாடலில் கிறங்கி நின்றோம். அப்போது நடுநிசியாகி இருந்தது. ” வாங்க நிலவொளிக்குப் போகலாம்” என்று ஜே.கே எழுந்நததும் நாங்களும் தொடரந்தோம். எதிரே இருந்த மைதானத்தில் வட்டமாகக் கூடினோம்.

நிலவு பளிச்சென்று பரவி இருந்தது. எல்லும் கருப்பு உடையில், நான் வெள்ளை உடையில். திடீரென்று ஜே.கே, “சிலும்பிப் போடடா!…..” என்றபடி கைகளை உயர்த்தி எம்பிக் குதித்தார். உடனே எல்லோரும் அவரைப் பின்பற்றி, “சிலும்பிப் போடடா…. சிலும்பிப் போடடா!…..” என்று கூவியபடி, வானத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதித்துச் சுற்றி வந்தார்கள். எனக்கு அந்த விளயாட்டு பரிச்சயமில்லாததால் வட்டத்துக்கு நடுவில் நழுவினேன். நிலவு வெளிச்சப் பின்னணியில், கருப்பு உடையில் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து நடனமாடினர்கள். இந்த விளையாட்டு முடிந்ததும், “சோப்பெங்கப்பா போடுங்கப்பா” என்று ஜே.கே சொல்லி அவரே ஆட ஆரம்பித்ததும், என்னைத் தவிர எல்லோரும் “சோப்பெங்கப்பா…சோப்பெங்கப்பா……” நடனம் ஆடினார்கள். எனக்குக் கூச்சமாகிருந்ததுடன், அந்த ஊரில் தலைமை ஆசிரியராக இருக்கும் நான் அப்படிக் கூத்தாடுவதை ஊர்க்கார்ர்கள் யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயமும் காரணமாய் நடுவில் நின்றபடி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்படி பாட்டும் கூத்தும் பிரசங்கமுமாய்ப பொழு புலர்ந்தது. கையெழுத்து புலனாகு முன்பாக ஜே.கேயும் நண்பர்களும் ‘சாமியே சரணம் ஐயப்பா!’ என்று விளித்ததபடி காரில் ஏறி விடை பெற்றார்கள். அது அற்புதமான அனுபவம்! ஆண்டு பல கடந்தும் அந்த இனிய அனுபவம் இன்னும் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கின்றது.

இப்படி எத்தனையோ சந்திப்புகள அவருடன் இந்த 50 ஆண்டுகளில்! அவர் எவ்வளவு நெருக்கமாக நம்மோடு பழகினாலும், அவரோடு சரிசமமாக வைத்து எண்ண முடியவில்லை. இந்த நூற்றாண்டின் மகத்தான இலக்கிய மேதையின் முன்னிலையில் உள்ளோம் என்பதும் அவரது நட்பு என்பது பெரும்பேறு என்பதுமே நினைவில் நிற்கிறது. 0

Series Navigationநட்பு அழைப்பு. :-அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-