எனது ஜோசியர் அனுபவங்கள் – 1

0
ஜோதிடர்களுடான எனது அனுபவங்கள் சுவையானவை!
அப்போது நாங்கள் மாம்பலத்தில் இருந்தோம். எனது தகப்பனார் ஒரு வாழ்க்கையைத் தொலைத்த ஆசாமி. வருடத்தில் எந்த மாதத்தில் வேலையிலிருப்பார். எப்போது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருப்பார் என்பது எந்த சித்தரும் கணிக்க முடியாத ஒன்று. இதனாலேயே ஒரு வேலை கிடைத்தவுடன் விடாமல் அதைப் பிடித்துக் கொண்டு முன்னேறியவன் நான். ஸ்திரத் தன்மைக்கு ஏங்கும் மனதாக என் மனது ஆனதற்கு அப்பாவும் காரணம். அதற்காகவேனும் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
அப்பா கொண்டு வரும் ( எப்போதாவது) சொற்ப வருமானத்தில் மூன்று பிள்ளைகளை படிக்க வைத்து முன்னேற்றியது அம்மையின் பெரும் சாதனை. முதல் பிள்ளையாகிய என்னை வளர்க்கும் பொறுப்பை என் பெரியம்மாவும் பாட்டியும் ஏற்றுக் கொண்டது கொஞ்சம் அம்மைக்கு சுமையைக் குறைத்தது. அதனாலேயே மீதமிருந்த மூன்று தம்பிகளை அவளால் படிக்க வைக்க முடிந்தது. எனக்கும் ஒன்றும் நட்டமில்லை. பாட்டி வீட்டில் வளர்ந்ததால், சென்னையை விட்டு விலகாமல் கான்வென்ட் பள்ளி, லயோலா கல்லூரி என்று மேட்டுக்குடி படிப்பு எனக்குக் கிட்டியது.
அப்பா ;ஒரு சோசியப் பித்து. என்னை பாட்டி வீட்டில் விட்டு, அம்மையை பிரிய வைத்ததும் ஒரு சோசியன் சொன்ன கணிப்பால் தான். பெயர் தெரியாத அந்த சோசியன் என் வாழ்வை வளப்படுத்திய செம்மல். அந்த வகையில் அரை வேக்காட்டு சோசியர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
பத்து விரல்களில் கலர் கல் மோதிரங்களைப் போட்டு வலம் வந்த அப்பாவைப் பார்த்தே, சோதிடர்களைப் பற்றிய என் எண்ணம் ஏளனமாகப் போனது. கோகுலத்து கண்ணனைப் போல யசோதையிடம் வளர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கண்ணம்மாப்பேட்டை மூன்றாவது சந்து முக்கில் இருக்கும் அம்மன் கோவிலில் ( இன்னும் இருக்கிறதோ? இல்லை சாலை விரிவாக்கத்திற்கு இடித்து, அம்மனை அகற்றி விட்டார்களா?) செவ்வாய், வெள்ளியில் பூசாரியே குறி சொல்வார். பூச்சிக்கடி, வயித்துவலி, மாத விடாய், கரு தங்காமை, சுரம், வாந்தி, பேதி என்று சகலத்திற்கும் அவரே மந்திரித்து விடுவார். ஆனால் அவரே இரவு முக்காடு போட்டு அலோபதி டாக்டர் சவுரிராஜன் வீட்டிற்கு போவதை நான் பார்த்திருக்கீறேன்.
கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்திலோ அரச மரத்திலோ மஞ்சள் முடிச்சுகளாகத் தொங்கும். இப்போது வெளிவரும் செய்திகளைப் போல பிரேமானந்தா, நித்யானந்தா சமாச்சாரமெல்லாம் அப்போது கிடையாது. பூசாரிக்கே முன்று மனைவிகள். நான்காவதைத் தேட ஒன்று அவருக்கு தெம்பு இருந்திருக்காது. அல்லது தைரியம் இருந்திருக்காது. தீர்த்த யாத்திரை போல ரேகை யாத்திரை போன சோசியர்களும் அக்காலத்தில் இல்லை. சுற்றுவட்டார மக்களின் மூட நம்பிக்கையை மூலதனமாக வைத்து பிழைத்தவர்களில் அந்த பூசாரியும் ஒருவர்.
மஞ்சள் காமலைக்கு அவர் மந்திரித்து அதனால் சுத்தமான நீர் ஊசி வழியாக மஞ்சளாக மாறியது கண்டு அதிசயித்திருக்கீறேன். பின்னாளில் தெரிந்தது. அது ஊசியே இல்லை. மெல்லிய உலோகக் குழாய் என்று. அதில் ஏற்கனவே மஞ்சள் கரைசலை நிரப்பி வைத்திருக்கிறார் பூசாரி. ஆனாலும் கரைசராங்கண்ணி, கீழாநெல்லி கஷாயத்தையும் தந்து விடுவார். முன்னதில் இறங்குவதாக பம்மாத்து காட்டி பின்னதால் இறக்குவதில் அவருக்கு காணீக்கை லாபம்.
0
கையாட்டி சோதிடரைப் பற்றிய செய்தி சுவையானது. ஆள் நாகேஷ் போல ஒல்லியாக இருப்பார். எனக்குத் தெரிந்து பல வருடங்கள் அவர் அறுபது வயதுக்காரராகவே இருந்தது ஆச்சர்யம். வெள்ளை முழுக்கை சட்டை அணிந்திருப்பார். வெள்ளை வேட்டி கொஞ்சம் தாறுமாறாகக் கட்டியிருப்பார். அவருக்கு ஜாதகமெல்லாம் தேவையில்லை. மக்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு அல்லது சொல்லும் குறைகளுக்கு அவர் சொல்லும் தீர்வு சரியாக இருக்கும்.
“ பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கறோம் அய்யா! சரியா அமைய மாட்டேங்குது”
சோதிடர் பெண்ணின் ஜாதகத்தை கையில் வாங்கி கீழே வைத்து அதன் மேல் தனது இடது கையை விரித்து ஊனிக் கொள்வார். வலது கை ஆட ஆரம்பிக்கும். கண்கள் மூடி இருக்கும். ஒரு வித டிரான்ஸில் பதில்களை உதிர்ப்பார்.
“ செவத்த பையன். ஊருக்குள்ளேயே இருக்கான். பொண்ணுக்கு இஷ்டமான்னு கேளு. ஆடி கழிஞ்சு முடிஞ்சிரும். உன் கையில் ஒண்ணுமில்லே”
மறுநாளிலிருந்து தாய் செவத்தை பயல்களாக தேட ஆரம்பிப்பாள்.
அடகு வைத்த கம்மலை மீட்க போகும்போது சேட்டு கேட்பான்:” பொருளை எடுத்துக்க.. பைசா வேணாம்.. பையன் ஆசைப்படறான். ஒன் பொண்ணைக் கட்டி தரயா?”
கம்மலை மீட்க வைத்திருந்த அடகு பணத்தை காணிக்கையாக கையாட்டி சோதிடரிடம் செலுத்தினால் அவர் சொல்வார்: “ கம்மலுக்குன்னு வச்சது.. எனக்கு வேணாம்.. பேத்திக்கு வாங்கி போடு”
மறு வருடமே சேட்டு சிகப்பாக, அந்த அம்மாவுக்கு பேத்தி பிறப்பாள்.
சோதிடர்களுடனான என் அனுபவங்கள் தொடரும்.
0

Series Navigationதிருக்குறளில் இல்லறம்சென்னை, கடலூர் குடும்பங்களை தத்தெடுக்கும் செயல்திட்டம்..