என்னைப்போல

karumalai

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

என்வீட்டுப்   புறக்கடையின்   வேலி   யோரம்

எச்சமிட்ட   காகத்தின்   மிச்ச   மாக

சின்னதொரு   முளைகிளம்பி   விருட்ச   மாகிச்

சிலிர்த்துநின்ற   பசுமைமரம்   மகளின்   முத்த

இன்பம்போல்   குளிர்ந்தகாற்றால்   இன்ப   மூட்டி

இனிமையான   மழலைமொழி   கனிகள்   தந்து

புன்னகையைப்   பூக்களாகப்   பூத்துப்   பூத்துப்

புதுவழகில்   பொலிந்ததுஎன்   வீட்டைப்   போல !

 

பிள்ளைகளின்   தொட்டிலாக   ஊஞ்ச   லாக

பிடித்துவிளை   யாடுகின்ற   தோழ   னாக

கள்ளமின்றித்   தன்கிளையின்     மடிய   தர்த்திக்

கதைபேசி   சோறூட்டி   வளர   வைத்தும்

அள்ளியள்ளி   மகிழ்ச்சியினைக்   குவித்தும்   அன்பால்

அரவணைத்தும்   வீட்டினெல்லா   நிகழ்வு   கட்கும்

துள்ளியமாய்ச்   சாட்சியாகி   இன்ப   துன்ப

துடிப்புகளை   எதிரொலித்தது   என்னைப்   போல!

 

தலைநிமிர்ந்து   தனியாக   நடப்ப   தற்குத்

தன்காலில்   வலிமையினைப்   பெற்ற   பிள்ளை

நிலைமாறிச்   சென்றதனால்   முதுமை   தன்னில்

நிர்கதியாய்   நிற்கின்ற   என்னைப்   போல

இலையுதிர்ந்து   பட்டையுரிந்து   கிளைவ   ளைந்து

இருந்தவெழில்   பசுமைகாய்ந்து   மொட்டை   யாகி

நிலைகுலைந்து   விழுவதற்கு   நேரம்   பார்த்து

நின்றுளது   பராமரிக்க   யாரு   மின்றி !

 

Series Navigationசான்றோனாக்கும் சால்புநூல்கள்மிதிலாவிலாஸ்-7