என் பாட்டி

Spread the love

சித்தி சித்தப்பா அத்தை மாமா
எல்லாரும் பாட்டியைத் தேடி வருவார்கள்
எல்லாரையும் எனக்கு அறிமுகம் செய்வார்
சர்க்கரை அளவு கேட்டபின்
அவர்களுக்குக் காப்பி சீடை தருவார்
பாட்டியின் சகோதரர்கள் வருவார்கள்
காலணாவைப் பங்குபோட்ட கதையெல்லாம்
என்னிடம் சொல்லிச் சிரிப்பார்

ஓமவல்லி, துளசி வேம்பு கீழாநெல்லி எல்லாம்
கொல்லையில் வளரும் பாட்டியின் பிள்ளைகள்
ஈரம் அறிந்து தண்ணீர் விடுவார்
தலைவலி காய்ச்சல் என்றால்
ஒருகையில் கசாயம் மறுகையில்
அரிசியுடன் பாட்டிதான் வருவார்

பாட்டியின் சேலைத் துண்டில்தான்
இட்டலி வேகும். பழைய சோறு வடாமாகும்
மிச்சத்தைத்தான் எப்போதும் சாப்பிடுவார்
நான் தூங்கப் போகும் முன்னும் எழும்போதும்
இயங்கிக் கொண்டே இருப்பார் பாட்டி

என் அலமாரியின் கீழ்த்தட்டுத்தான் பாட்டிக்கு
நாலைந்து சேலைகள், சந்திரிக்கா,
துணிச்சவுக்காரம், வேரூறும் எணணெய்
ஒரு பேன் சீப்பு, ஒரு துணிப்பையில் மண்
இதுதான் பாட்டியின் சொத்து

முழங்கால் வலிக்கு
இந்த மண்ணை வறுத்துத்தான்
ஒத்தடம் கொடுப்பார்
என் வலிகளுக்கும் அந்த ஒத்தடம்தான்

ஒருநாள் பாட்டியிடம் கேட்டேன்
‘அது என்ன மண் பாட்டி’ என்று
‘தான் பிறந்த ஊர் மண்’ என்றார் பாட்டி
‘அந்த நாள் ஞாபகங்கள்’ வரும்போதெல்லாம்
அந்தப் பையை அணைத்துப் படுத்திருப்பார்

பாட்டி இல்லாவிட்டால்
எந்தச் சொந்தமும் எனக்குத் தெரிந்திருக்காது
அன்பு பாசம் புரிந்திருக்காது

ஒரு நாள்
நான் எழுந்துவிட்டேன்
பாட்டி படுத்தே இருந்தார்
பக்கத்தில் போனேன்
விரல்களை மூடி என்னிடன் நீட்டினார்
என் கைமீது விரல்கள் விரிந்தன
பாட்டியின் உயிரும் பிரிந்தது

இன்றுதான் எனக்குப் புரிகிறது
அன்று பாட்டி எனக்குத் தந்தது
பரம்பரைப் பெருமையும்
பந்தபாசமும்தான் என்று

அமீதாம்மாள்

Series Navigationநிரந்தரமாய்…சிலர்