என் பெயர் அழகர்சாமி

அறுபதாண்டுகள் பழகிய பின் என் பெயர் ’அழகர்சாமி’ என்னை இறுக்குவது போலிருக்கும்..

எப்படி பிறர் இந்தப் பெயரைக் கூப்பிட்ட போதெல்லாம் ஒத்துழைத்துத் திரும்பியிருக்கிறேன்.

எத்தனையோ லெளகீக விஷயங்களுக்கு இந்தப் பெயர் உதவிக்கு வந்திருக்கிறது.

அப்பா வைத்த பெயரென்று அப்பாவின் மேல் என் மரியாதைக்கு சாட்சியாக இருந்திருக்கிறது.

(ஏன் அம்மா வைத்த பெயரில்லையென்று கேட்க வேண்டாம்)

திரும்பத் திரும்ப எழுதிய வார்த்தைகளில்
என் பெயர் தான் நான் அதிகம் எழுதிய வார்த்தையென்பதலிருந்து அதன் மேல் என் பிரியம் தெரியும்.

என்னையே அழகு பார்த்துக் கொள்வது போல் அழகழகாகக் கையெழுத்திட்டுப் பார்த்துக் கொண்ட ஒரே வார்த்தையும் என் பெயராகத் தான் இருக்கும்.

இது வரை இந்தப் பெயருக்கப்பால் நான் ஆத்மாவா பிரம்மமா என்றெல்லாம் ஆத்ம விசாரம் செய்ததில்லை.

என் ’இந்தப்’ பெயருக்குப் பதிலாய் வேறு எந்தப் பெயரிருந்திருந்தாலும் இப்படித் தான் இருந்திருக்கும்.

ஒரு பெயருக்குள் உலவுவது ஒரு சர்க்கஸ் கூண்டுக்குள் உலவுவது போலவா?

எங்கிருக்கிறதென்று தெரியாமல் பெயர் தெரியா ஒரு பறவை இதோ ஒலிக்கிறது.

எதேச்சையாய்த் திரும்புகிறேன் ஒரு கணம் என் பெயர் கழன்று.

கு.அழகர்சாமி

Series Navigationகடந்து செல்லுதல்ஏகலைவன்