எழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்

துக்காராம்

பி ஆர் ஹரனும் நானும் பல வருடங்களாக தொடர்பில் இருந்தோம். ஆனால் தினந்தோறும் பேசியதில்லை. சில மாதங்களுக்கு ஒரு முறை கூப்பிடுவேன். எப்போதாவது இந்தியாவுக்கு போனால், அவருடன் கட்டாயமாக அவரது பைக்கில் சென்று அவர் பரிந்துரைக்கும் உணவுக்கடைகளில் பாலாவும் நானும் அவரும் சாப்பிடுவோம். இணைய வழி மட்டுமே கடிதங்களும் தொடர்புகளும். இருப்பினும், மனதுக்கு நெருங்கியவர் அவர் என்ற உணர்வை முதல் பேச்சிலேயே உருவாக்கியவர் பி ஆர் ஹரன்.

போனை எடுத்ததும், “சொல்லுங்க துக்கா” என்ற குரல் கேட்டால் சந்தோசமாக இருக்கும். என்ன கேட்டாலும், மற்றவர்களை குறை சொல்லும்படி பேசமாட்டார். அவங்களுக்கு வேற ஒரு கருத்து இருக்கு துக்கா. அவர் வழி அது என்று சொல்லுவார். முதிர்ந்த மனது.

பாரதியார் நாடகம் சிறப்பாக வருகிறது. அதற்கு ஆதரவு அதிகமாக வருகிறது என்று சொல்லி சந்தோசப்பட்டுகொண்டார். மிருகங்கள் மீது பாசம் கொண்டவர். யானைகளுக்காக நீண்ட கட்டுரை தொடரை திண்ணையில் எழுதினார். பலருக்கும் தெளிவை ஏற்படுத்தியது அந்த கட்டுரை தொடர்.

தான் கொண்ட கொள்கைகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆனால், எந்த கட்சிக்காகவும், எந்த ஆதாயத்துக்காகவும் தன் கொள்கைகளை விட்டுகொடுக்காதவர்.

ஒரு சிலருக்குத்தான் அவர் வாழ்ந்த வாழ்க்கை லபிக்கும் என்று தோன்றுகிறது. என்ன செய்ய நினைத்தாரோ அதனை செய்துகொண்டு சமரசமில்லாமல் வாழ்வதும், செய்ய வேண்டும் என்று கருதும் வேலைகளை செய்யாமல், ஊதியத்தை தரும் வேலையில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்துகொண்டிருக்கும் எத்தனையோ பேர்கள் இருக்க, தான் செய்ய விரும்பிய வேலைகளை விரும்பி செய்து வாழ்ந்தவர் அவர்.

நேற்று ஒரு ஜப்பானிய டாக்குமண்டரி பார்த்துகொண்டிருந்தேன். கான்சரால் பாதிக்கப்பட்ட ஆசிரியரும், பேச்சு வராத மாணவனும் பேசிகொள்ளும் இடத்தில் அவரை பற்றி நினைத்தேன்.

நமது வாழ்க்கையை பிறரிடம் கொடுத்துவிட்டு செல்லமுடியாது. நமது வாழ்க்கையை நாமேதான் வாழ வேண்டும் என்று மாணவன் முடிக்கிறான்.

அவரது வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். நான் அவருக்கு அஞ்சலி எழுதுவேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இளமை ததும்பும் முகவும், பணிவான பேச்சும் எழுத்துக்களும் அமைதியான தெள்ளிய நீரோடை மாதிரியான தெளிவான செயல்களும் உடலுக்குள் ஒரு மாரடைப்பை வைத்துகொண்டிருக்கும் என்று யார்தான் கருத முடியும்?

அவர் காசிக்கு அடிக்கடி போனாலும், காசியின் கங்கை அவர் மனதில் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று நான் அவருடன் பேசியபோது நினைத்தேன். காசியின் கங்கை அவரை அவரை அழைத்துகொண்டுவிட்டது என்று நினைக்கிறேன்.

திண்ணையின் ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து சிறந்த கட்டுரைகளை எழுதி வந்த பி ஆர் ஹரன் அவர்களுக்கு அஞ்சலி.

Series Navigationவிடை பெறுகிறேன் !