“எஸ்.பொ”

This entry is part 1 of 23 in the series 30 நவம்பர் 2014

 

எஸ்.பொ அவர்கள் வரிகளின் ஸ்பரிசம்
எனக்கு ஏதும் இல்லையே.
அந்த இலக்கிய ஒளிக்கு நானும்
எதோ ஒரு”நெய்ப்பந்தம்” பிடிக்க வேண்டுமே
என்று
உள்ளே உறுத்தியதால்
இதில் நுழைந்தேன்.
பாரதியார் எழுதியிருந்தாரே
“அக்கினிக்குஞ்சு ஒன்று கண்டேன்..
அதை ஆங்கொரு பொந்திடை
வைத்தேன்..”
அந்த குஞ்சு குஞ்சு இல்லை.
அக்கினிக்கடல்.
இலங்கைக்கு கழுத்தில்
வல்லாட்டு மாட்டி
வல்லிய தமிழின் வலம்புரிச்சங்கெடுத்து
முழங்கிக்க்கொண்டிருந்தது
அந்த அக்கினிக்கடலே.
பொறுத்தம் இல்லாமல்
பூகோளக்காரர்கள்
இந்து மகா சமுத்திரம் என்று
அழைத்துக்கொள்ளட்டும்.கவலையில்லை.
அக்கினியை அடைகாத்த
அந்த “அற்புதமான பொந்து”
எழுத்துச்சிற்பி இரா.முருகன்.
முன்னர் “டொமினிக் ஜீவா”கதைகள்
படித்திருக்கிறேன்.
தீக்குச்சியைக்கிழித்துப் போட்டால்
எங்கு வேண்டுமானலும்
ஜெயகாந்தன்கள் பற்றிக்கொள்வார்கள்.
அது போல்
இலங்கைத்தென்னங்கீற்றுகளின்
இடையே சிலிர்த்துவந்து
இருட்டுச்சமுதாயத்தை கிழிக்க வந்த‌
இலக்கிய கேஸ் சிலிண்டர் அவர் என்பதும்
என் கருத்து.
ஆனால்
எஸ்.பொ
இலக்கிய இதயத்தின்
சிஸ்டாலிக் டையஸ்டாலிக் மர்மர்களில்
சொட்டு சொட்டாய்
உலக நெகிழ்வுகளின்
ஸிப்பை திறந்து காட்டியவர்.
“முன்னுரைகளின் முன்னுரைகளுக்குள்”
எஸ்.பொ வின்
கருத்துக்கருவறைகள் இருந்ததை
இரா.முருகன் அவர்கள்
இஞ்ச் இஞ்ச் ஆக‌
மொசைக் டைல்ஸ் பதித்துக்காட்டிவிட்டார்.
தீ என்ற நாவலை படித்தே ஆகவேண்டும் என்று
முருகன் அவர் பேனாவை வைத்தே
அழகிய தீ மூட்டிக்காட்டிவிட்டார்.
அதைப்படிக்காமல் மொக்கை போடுவது
தமிழின் உயிரெழுத்துக்களையே
கொலை செய்வது போல் அல்லவா.
பூர்ஷ்வா இசம் பற்றி
ஒரே தொடரில் சொல்லிவிட்டாரே
“யாழ்ப்பாணத்துக்கிடுகு”
கம்யூனிஸ்டுகள்
நினைத்துக்கொண்டிருப்பார்கள்
வெளியே இருக்கும்
பூர்ஷ்வாக்களைப்பற்றி.
அவர்கள் உள்ளேயே இருக்கும்
பூர்ஷ்வாக்கள் பற்றி
அறிந்து கொள்ள “ஒரு பிரமிள்”போதும்
அவர் நொட்டைச்சொல் தெறிக்கும்
அன்டி கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ பற்றி
தீ நாவலுக்கு
அவரின் விமரினம் போதும் என்று
நுணுக்கமாய் காட்டுகிறார் இரா.முருகன்.
 
 
அந்த தீ யின் கொழுந்துகளுக்குள்
சமுதாய “உயிரின்” செல்கள்
நுண்ணோக்கியில் கூட அகப்படாமல்
தன் ப்ரோடோப்ளாஸத்தை 
விஸ்வரூபம் காட்டுகிறது.
மேலே கண்ட சுட்டியில்
“தர்மினி பக்கம்” அந்த வெளிச்சத்தின்
திரையோட்டத்தை அழகுபட காட்டுகிறது.
பேட்டி வடிவில் “தீ”பற்றி
எஸ்.போ சொல்வது
சமுதாயத்தின்
பரிமாணம் தாண்டிய பரிமாணத்தை
எழுத்துக்க்குள் செருகியிருப்பது தெரிகிறது.
வெறும் படுக்கைப்புரட்சியா
பாட்டாளிகளின் புரட்சிக்கு வித்திடும்?
என்பதே 
பொது உடைமை இலக்கியவாதிகளின் சீற்றம்.
இந்த புள்ளியில்
நான் படித்த ஒன்றை 
சொக்கப்பனை கொளுத்த விரும்புகிறேன்.
“சோசியல் ஃப்ராய்டிசம்” என்ற‌
கருத்தை முன் வைக்கிறார்
ஃபெர்டினன்ட் ஸ்விக்”எனும் அறிஞர்.
அதுவே “மார்க்ஸிசம்” என்பதும்
அவர் கருத்து.
மனிதனின் “முரண்பாடுகள்”
உள்ளுக்குள் புகை மூட்டம் போட்டு
ஈடிபஸ் காம்ப்லெக்ஸை
விரிவாக்கினால் அதுவே சோசியல் ஃப்ராய்டிஸம்.
என்கிறார்.
ஆண் திமிர் வாதம் 
பெண்ணின் அதன் எதிர் வாதத்தை
ஏற்றுக்கொள்ளவே
மறுக்கிறது.
இதனால் தான் “தண்டனையாக”
முதல் சிலுவையை ஏற்றுக்கொண்ட‌
மனித குமாரன்
“உங்களில் யார் தவறு செய்யவில்லையோ
அவர் அவள் மீது
முதல் கல்லை எறியட்டும்”
என்கிறார்.
இந்த சிலுவைகளின் கனங்களையும்
உடைத்து சுக்குநூறாக்குவதே
சமுதாயப்புரட்சியின் முதல் விதை
என்கிறது “தீ”.
உமாவரதராஜன் அவர்களின் 
“மூன்றாம் சிலுவை”யை
விமர்சிக்கபுகுந்த தர்மினி அவர்கள்
பெண் மீது ஆண் வக்கிரத்துடன்
ஓங்கரிப்பதை
தோலுரிக்கிறார்.
ஆனால் “தீ”யில்
அது சமுதாயத்தின் அடிவயிறு
பாலியலின் “திரிந்த பால்”பருகியதன்
அடி முரண்கள் பீறிடும் பெரிய‌
ஓங்காரம் ஆகும்.
அமரர் ஆன “எஸ்.பொ” அவர்களுக்கு
சிதையா? புதையலா? தெரியாது.
இருப்பினும் அவர் வைத்த‌
“தீ” யில்
சிதையடுக்கி அமர்ந்து
தீக்குளித்த பின்னர் தான்
மற்ற எழுத்துக்குளியல்கள்.
===============================
Series Navigationஇலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *