எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’

Spread the love

 

உயிர்மை ஜூன் 2016 இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’ ஒரு படைப்பாளி சிறுகதையில் படைப்பாக்கும் கரு முற்றிலும் புதிய தடத்தில் செல்வதன் உயிர்ப்பை வெளிப்படுத்துவது.

 

தவாங் என்னும் இடம் சீனத்திலா ஜப்பானிலா என்பது தெரியவில்லை. தவாங் மடாலயத்து பௌத்தத் துறவி தமது வாழ்வின் இறுதி நாட்களில் மிகவும் சிரமப்பட்டு ஒரு பயணத்தை மலையிலிருந்து அடிவாரத்துக்கு மேற்கொள்கிறார். அதன் நோக்கம் தமது வாழ்நாளில் தாம் இரவலாகப் பெற்று திருப்பித் தராமற் போன மூன்று பொருட்களை கொடுத்தவரிடம் ஒப்படைப்பது. பௌத்த சூத்திரங்களாலான ஒரு நூலை ஒரு பிக்குவிடம் திரும்பத் தர வேண்டும். அவர் இப்போது உயிருடன் இல்லை அதனால் அவரது மகனிடம் தர முயல்கிறார். அப்போது அந்த மகன் வித்தியாசமான ஒரு வாதத்தை அவரிடம் முன் வைக்கிறான். “இந்தப் புத்தகத்தை எம் தந்தை உம்மிடம் தந்த போது அது படிக்கப் படாமலிருந்தது. நீங்களோ இப்போது அதைப் படித்து விட்டீர்கள். எனவே இது அதே புத்தகமாக இல்லை. எனவே வாங்கிக் கொள்ள முடியாது”. வாதம் தொடர முடிவில் யாருமே படிக்காத புத்தகம் ஒன்றைத் தருவதாக அவர் கூற அவன் ஒப்புகிறான். அவர் மனதில் இருக்கும் பௌத்த சிந்தனைகளாலான புத்தகத்தை அவர் அவனிடம்  வாய்மொழியாகக் கூறுகிறார். அவன் அதை ஏற்கிறான்.

 

இரண்டாவது பொருள் குடை. 30 வருடம் முன்பு மழைக்காலத்தில் ஒரு விவசாயியிடம் (லோமாங்) அவன் கட்டாயப்படுத்தியதால் அவர் ஒரு குடையைப் பெற்றார். அது அவரோடே தங்கி விட்டது. ஏனெனில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிய அவன் வரவே இல்லை. இப்போது அவனை அவர் சந்திக்கும் போது அவனுக்கும் அவர் போல வயதாகி விட்டது. லோமாங் அதை மழை பெய்யும் போது கொடுத்தது போல மழை மறுபடி வந்தால் வாங்கிக் கொள்வதாகக் கூற அவர் லோமாங் உடனேயே தங்கி மழைக்காகக் காத்திருக்கிறார். மூன்று மாதங்கள் பண்ணை வீட்டில் அவருடன் தங்கும் போது பல சிந்தனைகளை அவர்கள் பகிர்கிறார்கள். இறுதியில் மழை வரும் நாளில் குடை திரும்ப ஒப்படைக்கப் படுகிறது.

 

மூன்றாவது ஒரு சிறிய கல். தமது பூர்விக ஊரிலிருந்து பிக்குவாகும் முன் நதிக்கரையிலிருந்து ஊரின் நினைவாக எடுத்து வந்தது. இப்போது அதைத் திரும்ப நதியில் போஅ எண்ணிப் போகிறார். நதி திசை மாற்றப் பட்டு அங்கே ஒரு தொழிற்சாலை நிற்கிறது. என்ன செய்வது என்பதை அறியாமல் மேலே உயரே கல்லைத் தூக்கி எறிகிறார்.

 

சிறு பரிமாற்றங்களில் உயிரில்லாத அதிக மதிப்பிலாத பொருட்கள் மட்டுமா இருக்கின்றன? மனித உறவின் அபூர்வமான ஒரு தருணமும் அதில் இருக்கிறது. தேடல் உள்ளோருக்கு அது தரிசனமாகிறது என்னும் மையச் சரடு இந்த மூன்று பரிமாற்றங்களின் ஊடாக நம்மை அடைகிறது. மனித உறவுகள் பயன்பாட்டின் அடிப்படையிலேயே அணுகியதால் நீர்த்துப் போன இன்றைய சூழலில் இந்தக் கதை நம்முள் மரத்துப் போன மனிதத்தைத் தட்டுகிறது.

 

புனைகதையின் புதிய வடிவங்கள் புதிய பாதைகள் தமிழ் இலக்கியத்தை மேலெடுத்துச் செல்லும் கால கட்டம் இது. எஸ்.ராவின் படைப்பில் அந்தப் புரிதல் இருக்கிறது.

Series Navigationபுகைப்படமாய் உருமாறும் புனைவு – [ ”வளவ. துரையன் சிறுகதைகள்” முழுத்தொகுப்பை முன்வைத்து ]யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 2