எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995).

author
0 minutes, 3 seconds Read
This entry is part 7 of 16 in the series 20 செப்டம்பர் 2015

நகுலன்
nagulan-by-viswamithran-1

—————————————————————————
இத் தொகுப்பு 33 வருடக் கவிதைகளின் முழுத் தொகுப்பு என்கிறது புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு.
ஆர். ராஜகோபாலனின் அறிமுகத்துடன் வெளிவருகிறது.
அவரது கணிப்பில் வைதீஸ்வரன் “ நிறைவு தருகின்ற கவி ஞராகவும் அதற்கும் மேலாக சீரிய உணர்வுள்ள கவிஞரா கவும்” வெளிப்படுகின்றார்.

வைதீஸ்வரன் முன்னுரையிலிருந்து சில மேற்கோள்கள் —
கைகளில் வானமும்
கால்களில் மண்ணும் தொட்டு
பூமியைப் பொதுவான விழிகளால் காணும்
ஞானம் தேடி
மௌனக் கரைகளில்
மனந்திறந்து
காத்திருப்பவன் நான்
[இப்பகுதி கவனிக்கப் பட வேண்டும்]
2. உள்ளே கவிதைகள் உங்களுடன் பேசட்டும்
***
“எழுத்து“ புதுக்கவிதைகள் பரவலாக கவனத்திற்கு வந்த காலத்தில் புதுக் கவிதை என்றால் புரியாமல் இருக்க வேண்டும் புரியாமல் இருந்தாலும் புரிந்த்து போல் இருக்க வேண்டும் என்று ஒரு கணிப்பு. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு புரியாமல் இருத்தலே கவிதையின் சிறப்பான அம்சம் என்று தொடங்கி இந்தப் “புரியாத் தன்மையை” செயற்கையாக சிருஷ்டிக்கப் பட்ட உதாரணங்களும் உண்டு.

இதையெல்லாம் தாண்டி நிற்பது என்னவென்றால் புதுக் கவிதை என்றில்லை கவிதையே நுட்பமான தளத்திலி ருந்து தான் தன் முழுப்பரிமாணத்தை அடைகிறது என் பது… இந்த இடத்தில் தான் எந்த சிறந்த படைப்பை யும் சிரத்தையுடன் படைக்க வேண்டும் என்ற ஒரு நியதி.

இந்தக் கால கட்டத்தில் தமிழவன், பிரம்மராஜன், நாகார்ஜுன்ன் {உடனடி நினைவில் வரும் பெயர்கள் } இவர்களின் விமர்சன முயற்சியால் கட்டுடைத்தல் ஆசிரியனின் சாவு; -பிரதி’- வாசகன் தான் சிருஷ்டிகர்த்தா – என்ற விமர்சனப் போக்குகள் வந்து சேர்ந்தன.

விவிலியத்தில் கூறப்பட்டது போல் – எங்கள் அப்பன் வீட்டில் அரண்மனைகள் உள்ளன. சற்று யோசித்துப் பார்த்தால் தமிழ் இலக்கிய விமர்சன வரலாற்றில் இத்த கைய தன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.அடிப்படை மாறவில்லை.
*************
vaidheeswaran book
இனி நானும் வைதீஸ்வரன் கவிதைகளும். வைதீஸ்வரன் கவிதைகள் ஞாபகம் வரும் போதெல்லாம் என் பிரக்ஞை யில் முதலில் மிதந்து வருவது அவர் “மாமிசவண்டி”. என் நினைவு சரியென்றால் இக்கவிதை குறித்து என் நாவல் ஒன்றில் எழுதியிருக்கிறேன். அன்று இதைப் பார்த்த விதம் உடல் தான் உள்ளத்தைச் செலுத்துகிறது என்று , இன்று அவ்வாறில்லை. இதைக் குறித்து சற்று விரிவாகவே பேச விரும்புவதால் அக்கவிதையை கீழே எழுதி இருக்கிறேன்:

“மனித இழுத்த
மாமிச வண்டியில்
குதிரை கிடந்து
“ஹை..ஹை”..என்றது !”

இங்கு கவனிக்கப்பட வேண்டிய வார்த்தை “கிடந்து “ என்பது. அமர்ந்து என்று இல்லாமல் “கிடந்து” -_ அதாவது மனிதனானாலும் சரி..குதிரையானாலும் சரி [குதிரை இங்கு குறியீடு} இங்கு இருப்பிலிருந்து விடுதலை கிடையாது என்றவாறு. இங்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை “தமிழர் பண்பாடு” நகைச்சுவை என்ற கட்டுரை யில் .”தன் மனத்துள் சிரிப்பதுண்டு “ என்று ஒரு சிரிப் பின் தன்மையைக் குறிப்பிடுகிறார். இங்கு பொருத்த மான அவர் தரும் இரண்டு மேற்கோள்கள் …

1. “பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்” [குறள் 271]
2. மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பதுடைத்து [குறள் 1057].

எனக்குத் தெரிந்து இத்தகைஅய நுட்பமான சிரிப்பு வைதீஸ்வரன் கவிதைகள் பலவற்றில் காணலாம்.
பிறகு ஒவ்வொரு கவிதையும் ஒரு பிரதி.. பிரதியை வாச கன் அவனவன் தன் வழியில் தக்க மாற்றங்கள் செய்து அதை புனர்சிருஷ்டிக்கிறான்.

“பிறவி” [பக்கம் 126} என்ற கவிதையில் இறுதி மூன்று வரிகள் இவ்வாறு…
“என்னைத் தின்ற நான்
எனக்குள் பிறந்த தேன்.
கவிதையின் கும்மாளம் “

இங்கு வாசகன் தான் கவிதையைப் படைக்கிறான். என்ற வகையில்இரண்டாவது வரியில் “பிறந்த தேன்”
என்பதை [பிறந்தது ஏன்…]என்ற அமைப்பில் சிருஷ்டி யிலிருந்து சிருஷ்டி கர்த்தா மறைந்து விடுகின்றான் என்ற நிலை.
***************
தொகுப்பிலுள்ள ஒரு Zen கவிதையில் “சப்தங்களை நீ பார்க்க வேண்டும் “ என்று ஒரு வரி. இதைப் படிக்கையில் எனக்கு “ஊர்வலம்” கவிதையில் இரு வரிகள் என் பிரக்ஞையில் மிதந்து வருகின்றன, “இடது பக்கம் வாங்கு : வலது பக்கம் ஓடு “ இவ்வரிகளின் அமைப்பும் முன்னோக்கிச் சென்று பின் பின்னோக்கிச் சென்று முன் செல்லுதல் –சப்தம் மூலம் நாம் பார்வை வழி ஒரு காட்சியை க் காண்கிறோம்
*************
கவிதையில் உருவம் உருவகம்; படிமம் உபமானம் உப யோகம் உள்ளுறை உவமம் இவைகளை எவ்வாறு வேண் டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இந்த உருவ இயக் கத்தில் முரண் –அணி விபரீத-அணி இவை இயங்குவதி லேயே ஒரு இலக்கிய இன்பம் இருக்கிறது. சில உதாரணங்
கள் –
“கேட்ட வேளைக்கு முலை திறக்கும்
கட்டாய விபசாரம் “ என்ற ஒரு குறிப்பு [பக் 10]
பெண்ணியத்தை தொடர்புபடுத்தி வாசிக்கையில் வீட்டுப் பசு மனைவியாகவும் சொந்தக்காரன் கணவனை “ஆண் ஆதிக்கப் பன்றியாகவும்” பார்ப்பது பொருத்தமாகவே இருக்கும் . இவ்வாறே “ஈரம்” என்கிற கவிதையில் பிறைக் குழந்தை விடும் மூத்திரமாகவே நிலவு குறிப்பிடப்படு கிறது.[பக் 27] மேலும் என் கணிப்பில் அவர் படிமத் தைப் பார்க்கை யில் எதையும் கூர்மையாகக் கவனிக்கிறவர் என்று தெரிகிறது பறப்பு என்கிற கவிதையில் இறுதி வரிகள் இவ்வாறு –
“ஓடும் ரயிலுக்குள் உராய்கிறது
ஆயிரம் அறைகுறை முகங்கள்”

இங்கு ஆயிரம் என்பது பொருத்தமா கவே எனக்கு எஸ்.வைத்யநாதனின் “ஆயகம் என்ற கவிதையை நினைவு படுத் துகிறது. என்னைக் கவர்ந்த இன்னொரு படிமம் “நித்தியக் கணக்கு” [ப்க் 53ல்] வரும் படிமம்.
“அங்குலத்துக்குப் பத்துக் கோடி பிதுங்கும்
அமீபா!!!…”

“லீலை” என்கிற கவிதையிலிருந்து இறுதி இரு பகுதிகள் –
“அட! மழையோ விடாமல்
நிலத்தின் மண் கதவைத்
திற திறவென்று தட்டி யுடைத்துப்
பின் உள்பாய்ந்து
ஓயாமல் கற்பழிக்கும்”
ஒரு வேளை
நெல் பிறக்கு நினைவில்
நிலமோ நீருக்குள் தூங்கும்

இப்பகுதியை வசதி பொருட்டு இரு பகுதிகளாகப் பிரித் துக் கொள்ளலாம். முதல் பகுதியை கவனமாகப் படிப்ப வர்களுக்கு“மனக் கதவைத் திற திற வென்று தட்டியுடை த்து – இங்கு மழை காமவெறி பிடித்தவனாக உருவகப் படுத்தப் பட்டிருக்கிறது. இரண்டாவது பகுதியில் மழை யின் உருவம் தளம் மாறுகிறது. இங்கு மழையை மழை யாகவே காண்பது இங்கு மனித மனதில் “ஒருவேளை நெல் பிறக்கும் நினைவில் “ ஆனால் இயற்கைக்கு அந்த அவஸ்தையில்லை ..நிலமோ நீருக்குள் தூங்கும்.
**********
ஒவ்வொரு வாசகனும் அவனவன் வழியில் இந்த சப்த ஒழுங்கைப் பார்க்கிறான். ”பொய்விழி” ஒலியை மையமாகப் படிக்கையில் நான் இதை இவ்விதம் கேட் கிறேன்:
“பிறந்த குருவி
இருந்த குருவி
அதே குருவி
இருந்த குருவி
மறைந்த குருவி”
இக்கவிதைத்தலைப்பை ஞாபகம் வைத்துக் கொண்டு கவனமாகப் படிப்பவர்களுக்கு நிறையவே கிடைக்கும் .

இன்னுமொரு கேள்வி..வைதீஸ்வரனின் வாழ்க்கைக் குறித்த பார்வை என்ன?

அவர் அப்படி ஒன்றும் மென்மையான கவிஞரில்லை. அவர் அடிப்படைப்பார்வை மிக நுட்பமாக இயங்கும் ஒரு அங்கதம்.
இங்கு கவனிக்க வேண்டிய கவிதைகள் “ அசோக சிங்கங்கள் “[பக் 56] மைலாய் வீதி [பக் 64] ரவாண்டா [பக் 70] ஒரு விபரீதம் [பக் 80] கேல்வி [பக் 42] இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் இவ்வரிசையில் இன்னும் சில உதாரணங்கள் உண்டு
1. நாற்சந்திக் கம்பங்களில் ஏறிக் கொண்ட
நான்கு சிங்கங்கள்
இறங்கிக் கடப்பதற்கு
இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றன.
{ அ சோக சிங்கங்கள் ]

மிருகங்கள் வளர்ப்பதற்கே
மனிதர்கள் மடிகிறார்கள் {மைலாய் வீதி}
[இங்கு “திரு, மனிதா!” என்பதிலேயே ஒரு கிண்டல்}

“இழுபடப் பிறந்தவைகள்
முடிவின் முடிவில் இருப்பது
மனிதக் கழுத்தாக இருக்கலாம்
என்று ஒரு பீதி எனக்குள் பரவுகிறது..
இரண்டுங் கெட்டான் வேளை “ {ரவாண்டா}

“ஆமாம்..நீர் கொடுக்கவில்லை நீ..
நானோ தாகத்தைக் கொடுத்தேன்…பாடு…
என்று பறந்தான்.
விண்ணுக்குள் மேகம் கனைத்த்து.. [தாகம் ]

[இங்கு நீ…..மனிதன் நான்…கடவுள்…புதுமைப்பித்தன் வரிகளை ஞாபகப் படுத்துகின்றன}
கீழ் வரும் மேற்கோள்கள் “ கோவில் “ குறித்து “
நெற்றி வியர்வை
நெஞ்சை நனைக்காமல்
தொந்தியில் வளைந்து வழிய
கடைவாயடுப்பில்
அர்ச்சனைப் பொறி வறுத்து
ஆனை முகத்தின் முன் நகலாய்
அசைந்து வரும்
குருக்களோ…குருக்கள்கள்..
யாரையோ பார்த்து
யாரையோ வணங்கி
யாரையோ தேடி———–
மணிக்கணக்காய் விசாரங்கள்
விசாரணைகள்…குசலங்கள்
சலங்கள்..லங்கள்…கள்…..
***********
கல் தெரிகிறது..
கடவுள் யார்?
மண் விளைக்கிறது..
விதை யார்?
கேள்வி உதிக்கிறது
பதில் தெரியாமல் இருக்கிறது
அகண்ட மௌனத்துக்குள் ! கவிதை கேள்வி

முடிவாக வைதீஸ்வரன் கவனிக்கப் படவேண்டிய கவிஞர். அவர் கவிதைகளின் மறுவாசிப்பில் நிறையவே பெறலாம்

இது என் கணிப்பு என்று மாத்திரம்; “”நிமித்த மாத்ரம் பவ”

-நகுலன் –
}

Series Navigation2015 செப்டம்பர் 16 ஆம் தேதி சில்லியில் நேர்ந்த 8.3 ரிக்டர் பூகம்பத்தில் சிறிய சுனாமி, சிதைவுகள், மக்கள் மரணம்.அரிமா விருதுகள் 2015
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *