ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 11

Spread the love

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா 

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

எம்மைத் தவிர மற்ற எல்லோரையும் ஏழையாய் ஆக்குகின்றீர்.  நீங்கள் யாவரும் வறுமைக்கு அடிமை !  ஏழ்மையே உமது இறைவன், மதம் எல்லாம் !  உமது கண்முன் ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி உயிரிழப்பதை எப்படி நியாயப் படுத்துவாய் !  நமக்கு ஏழ்மை ஒழிய வேண்டுமா ?  அல்லது சீரும், செல்வச் செழிப்பும் நிறைய வேண்டுமா ?

ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஆன்ரூ அண்டஷாஃப்ட், மேஜர் பார்பரா)

மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :

இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது.  அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை.  மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார்.  மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.

 

வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா.  ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா !  ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் !  போருக்கு  ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள்.  ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள்.  ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை !  அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார்.  எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார்.  நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.

மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter).  சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள்.  அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர்.  அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை,  சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.

சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது.  தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன,  பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார்.  ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

**********************

நாடக உறுப்பினர்:    

1.  மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft).  ஆன்ரூவின் மூத்த மகள்.

2.  ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.

3.  மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)

4.  ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.

5.  மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.

6.  அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்

7.  சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.

8.  பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45

9.  ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.

மற்றும் பலர்.

************************

 

ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)

(இரண்டாம் அங்கம்)

அங்கம் – 2 பாகம் – 11

இடம் :  இங்கிலாந்து லண்டன் நகரம்.  வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)

நிகழும் ஆண்டு : ஜனவரி 1906

நேரம் : காலைப் பொழுது.

அரங்க அமைப்பு :  ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி.  புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது.  கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன.  முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார்.  மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.  உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன்.  வாயாடி மனிதன்.  பெண் நடுத்தர வயது மூதாட்டி.  அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது.  கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்தி ருக்கிறார்.  காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார்.  ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டி ருக்கிறான்.  மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள்.  மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார்.  பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி.  அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான்.  ஜென்னியைக் கண்டதும் வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான்.  ஜென்னியைக் காப்பாற மேஜர் பார்பரா உடனே அழைத்து வரப் படுகிறாள்.  புதிய நபர்களைப் பார்பரா பதிவு செய்கிறாள்.  அப்போது மேஜர் பார்பராவின் செல்வீகத் தந்தை காரில் வருகிறார். தந்தையை அறிமுகம் ஆகிறார்.  இடையே பார்பராவின் காதலன் அடால்·பஸ் நுழைகிறான்.

 

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ஆன்ரூ:  உமது ஏழ்மைக் காப்பணிச் சாவடிக்கு நிதிப்பணம், சொத்துக்கள் ஏதாவது இருக்கிறதா ?  அது பிழைக்காமல் உம்மைப் போல் சாகப் போகுது !  உங்கள் மதக் கூட்டம் ஆண்டு முழுவதும் தெரு மூலைகளில் நின்று, போவோர் வருவோரிடம் பிச்சைப் பணம் கேட்குது, பொறுக்குது !  இது போதுமா ?

அடால்·பஸ்:  சல்வேசன் ஆர்மியைப் பற்றி உமக்குத் தெரிய வாய்ப்பிலை.  இந்த சல்வேசன் ஏழை ஆலயம் ஓர் ஏழ்மை நிறுவகம் என்று உமக்குத் தெரியாது !

ஆன்ரூ: நீ கூறும் காரணங்களே நான் சல்வேசன் ஆர்மியை வாங்குவதற்கு ஏற்ற நல்ல ஆதாரங்கள் !

அடால்·பஸ்:  சல்வேசன் சாவடி ஏழையருக்கு என்ன பணி செய்கிறது என்று உமக்குத் தெரியாது !

ஆன்ரூ:  நன்றாகத் தெரியும் எனக்கு !  வறுமை பலர் வயிற்றைக் குடையும் ! அரை வயிற்றுக் கூழ் தருகிறது உமது செத்த சாவடி !  நடுங்கிப் பல்லைக் கடித்துக் கொண்டு படுத்துக் கொள்ள ஒரு கூரை உள்ளது !  அவை போதுமா ஏழைக் கவிஞரே ?

அடால்·பஸ்:  ஏழை மனிதரைக் கேலி செய்யாதீர் ! ஏழ்மை மூளையைக் கூர்மைப் படுத்தும்.

ஆன்ரூ:  என் தொழிற்சாலைக்குக் குடிமயக்கம் இல்லாத வேலைக்காரர்தான் தேவை.  அவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் குறைந்த நேரத்தில் நிறைந்த வருமானம் கிடக்கும் !  ஊதியம் அதிகம் வரும் !  அவர் எந்தச் சூழ்நிலைக்கும் தம்மைச் சீக்கிரம் மாற்றிக் கொள்வார்.

அடால்·பஸ்:  இங்கு தங்கும் ஏழை மனிதர் இறைவனை நம்புவோர்.  பைபிளை வழிபடுவோர் .  மேலோக சொர்க்கத்தை நம்புவோர்.  தன்னலமற்ற ஆனந்த வாழ்வு உள்ளது இங்கே !  இங்கே போருக்குத் தயாரிப்பு இல்லை !  போரிடுவதில்லை !  சாவில்லை !  காயமில்லை ! கைகால் முறிவில்லை !  ஆயுதமற்ற அமைதி வாழ்வு !

 

ஆன்ரூ:  ஊழியர் சங்கம் வைத்துச் சண்டை போடுவது எனக்குச் சரிவராது.  பிடிக்காது.  அத்தகை ஏழையர்தான் உமது சாவடிக் குடியிருப்பு !

அடால்·பஸ்:  நீங்கள் கலியுகம் உணராத ஒரு பூர்வீக மனிதர் !  தற்கால விதிமுறைகள் புரிவதில்லை உமக்கு !

ஆன்ரூ:  (உள்ளே வரும் பீட்டரைச் சுட்டிக் காட்டி)  இவன் நேர்மையான மனிதன் என்று நீ உத்திரவாதம் தருவாயா நான் வேலையில் வைத்துக் கொள்ள ?

பீட்டர்:  தொழிற்சாலையில் இராப் பகலாய் வேலை செய்த எனக்கு என்ன கிடைத்தது ?  ஊதியம் சொற்பம் !  நோயும், நொடியும், வறுமையும்தான் மிச்சம் !  பாதிப் பசி பாதி நிறைவு !

ஆன்ரூ:  வேலைக்கு ஏற்ற கூலி !  ஆளுக்கு ஏற்ற கூலி ! இதில் ஏமாற்று வித்தை இல்லை.  இந்த சல்வேசன் சாவடியில் உன் வயிறு நிரம்புதா ?  உமக்கு உணவளிக்க நிதி போதாது ! பார்பரா இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கிறாள்.  என்னால் இதைக் காப்பாற்ற முடியும்.

(அப்போது மேஜர் பார்பரா தன் சாவடிச் சகாக்களுடன் பூரிப்போடு நிமிர்ந்து வேகமாக வருகிறாள்.)

மேஜர் பார்பரா:  இன்று அந்தப் பெரு வாசலில் அவரைச் சந்தித்தது நமக்குப் பெரும் பாக்கியம்.   மிஸ்டர் ஓபிரைன் !  உன்னிடம் அவர்கள் பணிந்து ‘சுயத்தவறு ஏற்புக்குத்’ (Christian Confession) தமது தவறுகளைச் சொல்லி மன்னிப்புக் கோரியது ஒரு பெரும் சாதனை !

ஓபிரையன் பிரைஸ்:  எனது கடந்த காலத் தவறுகள் இதுபோல் ஏற்கப் பட்டு எனக்கு மன்னிப்பு கிடைத்தது மேஜர் !

(ஜென்னி உள்ளறை மேஜையில் கிடைத்த பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறாள்)

மேஜர் பார்பரா:  (உள்ளறைக்குச் சென்று)  இன்றைக்கு எவ்வளவு நிதி திரட்டினாய் சொல் ஜென்னி ?

ஜென்னி:  (நாணயங்களை மீண்டும் எண்ணிப் பார்த்து) 25 ஷில்லிங் மேஜர் !

மேஜர் பார்பரா:  இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் மேலும் 5 ஷில்லிங் கிடைத்திருக்கு !

தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட்:  எனது இரண்டு ஷில்லிங் நன்கொடையை நான் தரலாமா பார்பரா ? இதோ (அலட்சியமாக இரண்டு ஷில்லிங் நாணயங்களை மேஜையில் வீசுகிறார்.)  இதுதான் கோடீஸ்வரன் கொடுக்க கூடிய தகுதி !

மேஜர் பார்பரா:  (வியப்புடன் நெருங்கி)  அப்பா ! நீங்கள் இந்த இரண்டு ஷில்லிங்கை எப்படிச் சம்பாதித்தீர் ?

தந்தை ஆன்ரூ:  எப்போதும் போல் நான் இதைச் சம்பாதித்ததுதான், வழக்கமாக, வாடிக்கை யாகப் பீரங்கிகள் விற்று, பெரு வெடிகள் விற்று, கடல் மூழ்கிக் கப்பல்கள் விற்று, போர்க் கணைகள் தயாரித்து !  புதிதாக இப்போது கை எறி வெடிகள் தயாரிக்க எனக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது கண்ணே !

 

மேஜர் பார்பரா:  (விறு விறுப்பாக அந்த இரு நாணயங்களை எடுத்து)  வேண்டாம் இந்த இரத்த நாணயங்கள் எமக்கு !  எடுத்துப் பையில் வைத்துக் கொள்வீர் அப்பா !  எங்கள் சல்வேசன் சாவடியை உங்கள் இரண்டு ஷில்லிங் வாங்க முடியாது.  வெடி மருந்து பீரங்கி விற்ற நாணயங்கள் எமக்கு வேண்டாம் ! என்றென்றும் வேண்டாம் எங்களுக்கு !

தந்தை ஆன்ரூ:  (நாணயங்களை வாங்கிக் கொண்டு)  இது போதாதா பார்பரா !  நான் இதற்கு மேலும் அதிகமாகக் கொடுக்க முடியும் கண்மணி !  சிந்தித்துப் பார் !

மேஜர் பார்பரா:  உங்கள் இரண்டு மில்லியன் பவுண்டுகள் கூட போதாது அப்பா !  உமது நாணயங்கள் இரத்தக் கறை படிந்தவை !  நல்ல இரத்தம் கூட அதைத் தூய்மை ஆக்க முடியாது.  உங்கள் மரணக் காசுகள் சல்வேசன் சாவடிக்கு உகந்தவை அல்ல !  எடுத்துச் செல்லுங்கள் அவற்றை !  மன்னிக்க வேண்டும் என்னை !

(தொடரும்)

***********************

தகவல் :

Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)

(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 16, 2011)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationதமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்)தஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)