ஐயம் தீர்த்த பெருமாள்

Spread the love

வளவ.துரையன்

சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்து பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா மகாமகாபாத்தியாய டாக்டர் உ.வே.சா சாமிநாதையர் அவர்கள் ஆவார். அவரை மிகவும் கவர்ந்த காவியங்களில் ‘வில்லிபாரதமும்’ ஒன்றாகும்.
’அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் அமைந்துள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன’ என்று அவரே எழுதியிருக்கிறார்.
வில்லிபுத்துரார் பாரதத்தில் கீழக்கண்ட பாடலைப் படிக்கும்போது அவருக்கு ஓர் ஐயம் தோன்றியது.
”தண்டார் விடலை தாயுரைப்பத்
தாய்முன் அணுகித் தாமரைக்கைச்
செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
தீண்டா னாகிச் செல்கின்றான்
வண்டார் குழலும் உடல்குலைய
மானம் குலைய மனம்குலைய
கொண்டார் இருப்பர் என்றுநெறிக்
கொண்டாள் அந்தோ கொடியாளே”
இப்பாடல் சபா பருவத்தில் தருமன் சகுனியுடன் சூதாடித் தோற்றபின் நடக்கும் நிகழ்வைச் சொல்கிறது. இது சூதுபோர்ச் சருக்கத்தில் இருக்கிறது. துரியோதனன் ஆணைக்கேற்பத் துச்சாதனன் திரௌபதியைப் பற்ரி இழுத்துச் செல்லும் செய்தி இதில் கூறப்படுகிறது.
”தன் தாயான காந்தாரி, நீ போய் வா” என்று கூற துச்சாதனன் தாய் போன்ற திரௌபதியின் கூந்தலைத் தன் கையில் உள்ள செண்டால் பற்றி இழுத்துக் கொண்டு போனான். கொடி போன்ற திரௌபதியும் தன் கணவர் அங்கே இருப்பர் என்ற துணிவில் குழல் குலைய, மானம் குலைய, மனம் குலையச் சென்றாள்” என்பதுதான் இப்பாடலின் பொருளாகும்.
அச்ச்சமயதில் திரௌபதி விலக்காகித் தீண்டத்தகாத நிலையில் இருந்தாள். இதைத் “தீண்டாத கற்புடைய செழுந்திருவை” என்று வில்லியே குறிப்பிடுகிறார். அதனால்தான் துச்சாதனன் திரௌபதியைத் தீண்டாமல் செண்டால் பற்றிச் சென்றான் என்று வில்லிபுத்தூரார் குறிப்பிடுகிறார்.
டாக்டர் உ.வே.சா அவர்களுக்கு எழுந்த ஐயம் என்னவென்றால், “துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரௌபதி குழலில் இருந்த மாலைதான் செண்டா? தீண்டத்தகாத நிலையில் தலையில் மலர்மாலை அணிந்திருக்க மாட்டாளே? என்பதுதான். இதை அவர்கள் பல நாள் சிந்தித்தவாறு இருந்தார்.
பிறகு ஒருமுறை தற்பொழுது மயிலாடுதுறை எனப்படும் மாயூரம் அருகில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறுபாதி என்னும் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அவ்வூர் செல்லும் வழியில் கீழ்மேல் அக்கிரகாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறம் உள்ள குளத்தின் கீழ்க்கரையில் இருந்த பெருமாள் ஆலயத்திற்கு அவர் சென்றார்.
அறங்காவலர், டாக்டர் உ.வே.சா அவர்களை தரிசனத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அத்திருமாலின் திருநாமம் இராஜகோபாலன் என்று தெரிவித்தார்கள். உ.வே.சா பெருமாளைப் பார்த்தபோது அப்பெருமாளின் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று அதன் தலைப்பிலே இரண்டு வளைவுகளுடன் இருந்தது.
உ.வே.சா அறங்காவலரிடம், “அது என்ன” என்று கேட்டார். அவர் ”அதுதான் செண்டு” என்று விடை கூறினார். உடனே ‘செண்டா’ என்று கூறிய உ.வே.சா திகைத்து நின்று விட்டார்.
”எங்கே அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்” என்று அறங்காவலரிடம் வேண்ட, திருக்கோயிலின் பட்டர் கற்பூர தீபத்தால் அது நன்றாகத் தெரியும்படிக் காட்டினார்.
துச்சாதனன் தன் கையில் கொண்டிருந்த தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற செண்டால் திரௌபதியை இழுத்துச் சென்றான் என்பதை அறிந்து உ.வே.சா தம் ஐயம் நீக்கிக் கொண்டார்.
”இதுவரையில் நான் செண்டைப் பார்த்ததில்லை. பெருமாள் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது.” என்று உ.வே.சா. கூறினார்.
அதற்கு அறங்காவலர், “இந்தப் பெருமாளும் மன்னார்குடியிலுள்ள பெருமாளும் ஒரே அச்சு. அவர் கையிலும் செண்டு உண்டு. அவரது திருநாமமே செண்டலங்காரப் பெருமாள் என்பதாகும்” என்று கூறினார். தம் ஐயம் தீர்ந்த உ.வே.சா. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
==

Series Navigationமறுப்பிரவேசம்துளி விஷம்