ஒட்டப்படும் உறவுகள்

பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு.

 

உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை வற்புறுத்தியவள் ஏன் மாறிப் போனாள்…

 

தன்னுடைய ஐந்தாவது வயதில் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு தன்னை அம்போ என்று பெரியம்மாவிடம் விட்டுவிட்டு தன் பிறந்த வீட்டுக்கு போன அம்மா இருபது வருஷம் கழித்து இப்போது திரும்ப வந்திருக்காளாம்..

 

பெரியம்மா தான் கூட்டி வந்தாளாம்.. இந்த இருபது வருஷமாய் பெரியம்மா இதற்காக படாத பாடு பட்டதால் இது நடந்தேறி இருக்கிறதாம்..

 

உமாவுடன் நடக்க வேண்டிய தன் கல்யாணத்தைப் பற்றி பெரியம்மா பேசாமல் இருப்பதற்கு, இது தான் காரணமா..

 

அடுத்த தெருவில் தனியாக ஒரு வீட்டில் வசித்துக் கொண்டு, மாதத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ வந்து தன்னை பார்த்துக் கொண்டிருந்த அப்பா இப்போது இங்கேயே தங்க ஆரம்பித்து விட்டார். அப்பாவும், புதிதாய் வந்திருக்கும் அம்மாவும் சென்னைக்கு அவனுடன் வரப் போகிறார்களாம்.. மளிகைக் கடையை மூடி விட்டு பெரியப்பாவும் இனி இங்கே ஓய்வு எடுக்கப் போகிறாராம்.

 

எல்லாம் பெரியம்மாவின் ஏற்பாடு தான்..    இந்த வீட்டில் சகலமும் பெரியம்மா தான். அனைத்தையும் பெரியம்மா பொறுப்பில் விட்டுவிட்டு, தான் உண்டு தன் மளிகைக் கடை உண்டு என்று இருந்து விடுவார் பெரியப்பா.

 

மளிகைக் கடையை அப்பாவும், பெரியப்பாவும் சேர்ந்து நடத்தி வந்தார்கள். அம்மா வீட்டை விட்டு போனதற்கு கூட அந்த மளிகைக் கடைதான் காரணமாம்.

 

கணக்கு வழக்கெல்லாம் பார்த்து மளிகைக்கடையை மூடிவிட்டு வர தினமும் இரவு பதினொன்று ஆகி விடும்.  அந்த காலத்திலேயே இப்படி கணவன் தாமதமாக வீட்டிற்கு வருவது அம்மாவுக்கு பிடிக்க வில்லையாம். அதனால்தான் தன்னையும் அப்பாவையும் விட்டு போய் விட்டாளாம்..

 

அவனை வளர்த்தது பெரியம்மா தான். சின்ன வயதில் சண்முகத்திற்கு மற்ற குழந்தைகள் போல் அம்மா என்று அவளைக் கூப்பிட ஆசை. ஆனால் பெரியம்மா அந்த விஷயத்தில் மிக்க கண்டிப்பு. தன்னை அம்மா என்று அவன் அழைக்க அவள் அனுமதித்தது இல்லை. பெரியம்மா என்றே தன்னைக் கூப்பிடுமாறு சண்முகத்தை பழக்கினாள் அவள்.

 

ஒரு விஷயம் ஞாபகம் இருக்கிறது அவனுக்கு.

 

வரமாட்டேன் என்று சொன்னாலும் தரதரவென்று ஊர்ப் பெரிய மனிதர்கள் வீட்டிற்கு இழுத்துப் போய் அவனைக்காட்டி பெரியம்மா ஏதோ கெஞ்சுவாள்.

 

சில சமயம் ஊர்ப்பஞ்சாயத்து கூடும்..  யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு இருந்து விட்டு பிறகு திட்டிக் கொண்டே எல்லோரும் கலைந்து போவார்கள்.

 

யாருக்காக அப்போது பஞ்சாயத்தில் காத்திருந்திருப்பார்கள்..

 

இந்த அம்மாவுக்காகவா..

 

சென்னை வீடு பெரியதாக இருக்க வேண்டும், வாடகை சற்று அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்று பெரியம்மா சொன்னாள். அப்படிப் பட்ட ஒரு வீடு வாடகைக்கு பிடித்தபின் தன்னுடைய ரூமை காலி செய்து கொண்டு முதலில் அந்த வீட்டிற்கு அவன் போய் விட வேண்டும் என்று சொன்னதும் பெரியம்மா தான்..

 

இந்த ஏற்பாடெல்லாம் உமாவோடு தான் தனிக்குடித்தனம் நடத்த என்று தான் அவன் நினைத்திருந்தான்.. அது உமாவோடு தான் தனிக்குடித்தனம் நடத்த இல்லை, புதிதாய் வந்திருக்கும் அம்மாவோடு, அப்பாவும் தானும் தனிக்குடித்தனம் ஆரம்பிக்க என்று இப்போது புரிந்து போனது..

 

சென்னைக்கு போக ஒரு பழைய அம்பாசிடர் காரை ஏற்பாடு செய்திருந்தாள் பெரியம்மா..

 

வீட்டுக்கு தேவையான சாமான்களை சென்னையில் வாங்கிக் கொள்வது என்று ஏற்பாடு. பரம்பரையாய் வந்து கொண்டிருந்த சில சாமான்களை மட்டும் காரின் டிக்கியில் அடுக்கினாள் பெரியம்மா.

 

கார் புறப் படும் போது, பெரியம்மாவும், பெரியப்பாவும் பேசிக் கொண்டதை சண்முகம் கேட்க வேண்டியதாகி விட்டது.

 

“ வீட்டுக்கு கூட்டி வந்து ரண்டு நாள் ஆயிடிச்சி.. உங்க தம்பி சம்சாரம், உங்க தம்பிக்கிட்ட இன்னும் ஒரு வார்த்தை கூட பேச வில்லையாம்..”

 

“ அதுக்கு தான் சென்னையில தனிக்குடித்தனம் ஏற்பாடு செஞ்சிருக்கியே.. புருஷன், பொண்டாட்டி தனியா இருந்தா எல்லாம் சரியா போயிடும்..” பெரியப்பா சொல்ல,

 

“  இப்படியெல்லாம் பேச எப்ப கத்துக்கிட்டீங்க..” என்று கேட்டாள் பெரியம்மா..

——————————————————————————————————————-

Series Navigationகிரகவாசி வருகைசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா