ஒரு ஊரின் கதை

author
0 minutes, 0 seconds Read

மாதவன் ஸ்ரீரங்கம்

கிபி 19 ம் நூற்றாண்டு..

புதுப்பாளையம் இருளில் ஒளிந்திருந்தது. மினுக்கட்டாம்பூச்சிகள் திறந்தவெளியெங்கும் அலைந்தபடியிருக்க ஊருக்குள் ஒன்றிரண்டு தெருநாய்கள் அரையுறக்கத்தில் புரண்டன. பண்ணையார் சேவுப்பிள்ளை திண்ணையில் அமர்ந்திருக்க, வீட்டுவாசலில் மொத்தமாகக் கூடியிருந்தது ஊர். ராந்தல் விளக்கின் வெளிச்சம் மந்தமாயிருக்க எல்லோரும் சேவுப்பிள்ளை பேசுவதற்காகக் காத்திருந்தார்கள். அவர் கும்பலின் வெளிவிளிம்புவரை ஒருமுறை நோட்டமிட்டுக்கொண்டார். யாருக்காகவோ காத்திருப்பது போலிருந்தது அவர் மவுனம். மணியக்காரர்தான் அமைதியை கலைத்தார்.

“இந்தமேனிக்கி ஒக்காந்திருந்தா கெழக்கு வெளுத்திரும். கும்பினியாளுங்க ஊருக்குள்ள வந்திட்டா, பொறவு என்னவுஞ் செய்ய ஆவாது” என்று கொட்டாவி விட்டபடி சலித்துக்கொண்டார்.

பண்ணையார் சிறிதும் சலனமின்றி இருக்க, அருகில் காலடியோசைகள் கேட்டன. சேவுப்பிள்ளை அவர்களை ஆவலுடன் பார்க்க, வந்தவர்கள் தலையைத் தொங்கப்போட்டபடி கூட்டத்தில் கலந்து உட்கார்ந்துகொண்டது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. தன் திட்டம் தோல்வியடைந்ததன் வருத்தமும் சேர்ந்துகொள்ள, மணியக்காரரிடம் எரிந்துவிழுந்தார்.

“ஏன் நீதான் வெவரஞ்சொல்லேன். நாப்பது காணி பங்குல்ல உன்னுது”?

சேவுப்பிள்ளை விட்ட அம்பு சரியாகத் தைத்திருக்கவேண்டும். அதன் பின் மணியம் வாயைத்திறக்கவில்லை. அவர் எழுந்துசென்று வெற்றிலை எச்சிலை தொலைவில் துப்பிவிட்டு திண்ணைக்குத் திரும்பினார்.

” பாருங்கய்யா. எல்லாமுஞ் செஞ்சி பார்த்தாச்சி. ஒன்னும் நல்லதா ஆவல. தொரமாருங்க உறுதியா இருக்கானுங்க. பேசாம கெடக்குறதுதான் நம்ம தலையெழுத்துப்போல”

கூட்டத்திலிருந்து அழுகையும் ஆத்திரமுமான குரல்கள் கிளம்பின.

“உம்ம மலபோல நம்ம வந்தமேய்யா சாமி. நீரே இப்புடிச்சொன்னா நாங்க என்ன செய்ய ? எங்க போவ ? நல்லதா எதாச்சுஞ் சொல்லுங்கய்யா”

சேவுப்பிள்ளை க்கும் பாவமாகத்தான் இருந்தது. இருந்தும் என்ன செய்ய ? நிலைமை கைமீறிய விஷயமாக இருக்கிறது.

“ஏய்யா உங்களுக்கென்னா பைத்தியமா பிடிச்சாட்டுது? எம்மடதுந்தான் நானூறு காணி கத்தாழச்சளி கணக்கா கைநழுவப்போவுது. சர்க்காருக்கு போட்ட மனுவெல்லாம் கெணங்கல்லாப் போச்சுது. இதோ நம்ம ஐயிரு தொரகிட்டதான கணக்கப்புள்ளையா இருக்காரு. நீங்களே கேட்டக்கங்கய்யா” என்றபோது அவர்குரல் சற்று தடுமாறியது. கும்பல் அய்யரைப்பார்க்க, அவர் தர்சங்கடத்தில் நெளிந்தார். ஆனால் தாமதிக்காமல் விஷயத்திற்கு வந்தார்.

“பண்ணையாரு சொல்லுறதெல்லாம் வாஸ்தவம். சர்க்காரு பேக்டரி கட்றதுக்காக ஏற்பாட்டுக்கு எடுத்ததுல நம்மூருநெலம் முச்சூடும் போவப்போவுது. பட்ணத்து தேவநாத வக்கீலுகிட்ட வெலாவரியா சொல்லி கேட்டதுல மனுப்போடச்சொன்னாரு. நாளதுவரைக்கும் நாப்பது மனுப்போட்டும் சர்க்காரு சமரசத்துக்கு வரலை. அங்கங்க நம்மாளுங்க சொதந்தரத்துக்காவ போராடுறதுல சர்க்காருக்கும் தொரைங்களுக்கும் நம்மாளுங்கமேல கடுங்கோவம். அதிலயும் நம்ம ஜில்லாக் கலெக்டரு ரெம்பக் கராறு. சர்க்காரு விசுவாசி. நாளைக்கி அளவைக்கிக்கூட அவுரு வரப்போறதாத்தான் பேச்சு”

கும்பலில் ஒரு இளைஞன் சந்நதம் வந்ததுபோல எழுந்தான்.

“வரட்டுந்தாயோளி அவன் கொரவளைய அறுத்துப்புடுறேன். ஆரூட்டு எடத்தை ஆருவந்து ஆளுறது”?

ஒன்றிரண்டு பேர் அவனை அடக்கி அமரவைத்தார்கள். சற்றுத்தள்ளி குத்தவைத்து அமர்ந்திருந்த கீழ்ச்சாதியினர் இது எதுவும் விளங்காமல் உட்கார்ந்திருந்தனர். நாளதுவரை தங்களை ஆட்டிப்படைத்த பெரிய தனக்காரர்களே மிகுந்த கவலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்ததில் இது உண்மையிலேயே பெரிய விசயம்தான் போல என்றெண்ணிக்கொண்டார்கள்.

கும்பினியாட்கள் ஊர் நிலம் முழுதும் எடுத்துக்கொண்டுவிடும் பட்சத்தில் தங்களுக்கான வாழ்வாதாரம் என்ன என்பதுகுறித்து பீதியிலாழ்ந்தார்கள். நல்லதுபொல்லாததென்றால் உடுப்பும் உணவும் கொடுத்து இதுவரை காப்பாற்றியது ஊர்க்காரர்கள்தான். கொஞ்சம் முன்கோபங்களும் காரணமற்ற தண்டனைகளும் விதித்தாலும், தங்கள் வாழ்வும் பாதுகாப்பும் அவர்களுடன் தான் பிணைந்திருக்கிறது என்கிற அளவில் புரிந்துவைத்திருந்தார்கள்.

” இந்த எளந்தாரிப்பயபோல எனக்கும் ஆத்திரம் தான். தற்காலிகத்துக்கு அளவைய ஒத்திப்போடத்தான் கலக்டரு தொரைய குத்திட்டுவர ஆளனுப்புனேன். ந்தா மொட்டப்பனமரமா திரும்ப வந்துட்டானுங்க என்ன செய்ய”? என்ற சேவுப்பிள்ளையை வினோதமாக பார்த்தது கூட்டம்.

“என்னாங்க செய்யிறது. சுத்தி ஆள்படையோடவே சுத்துறான். அப்புடியிருந்து ரெண்டுமூனுதரம் வீசிப்பாத்தம். குறிதவறிப்போச்சுது”

“ஏஞ்சாமி வேற ஆளு அகப்படலியா உங்களுக்கு? இவன் குருவிக்கி குறிவச்சி காக்காயல்ல புடிச்சி வருவான்” என்று கூறி எவரோ சிரிக்க, இன்னும் சிலர் சிரிப்பில் சேர்ந்துகொள்ள சம்பந்தப்படவன் அவமானத்தில் என்னவோ கத்தத்தொடங்க சளசளபுளவென சச்சரவானது இடம். மணியக்காரர் ஒருமுறை பலமாக சத்தமிட்டு அவர்களை அடக்கினார்.

“இப்புடி அடிச்சிக்கிறதாலதான் நம்மள சுளுவா அடக்கிவெச்சிருக்கான் கும்பினிக்காரன். ஆவுற கதையப்பாருங்கய்யா. நாளைக்கி அளவையை எப்புடி நிப்பாட்டுறதுன்னு யோசன செய்யிவோம்”

மணியம் பேச்சிலிருந்த நியாயம் எல்லோருக்கும் புரிந்தது. இப்போது ஊர் ஒற்றுமையாக இருந்து செயல்படவேண்டிய நேரமென்று உணர்ந்து அமைதியானார்கள். வடக்குமூலையிலிருந்து ஒரு குரல் வந்தது.

“நாமளும் நம்மாளுங்க சொதந்துரத்துக்கு செய்யிறாப்ள இதுக்காவ சர்க்காருக்கு எதிரா உண்ணாவிரதம்லாம் இருந்து பார்த்தா என்னா”?

சேவுப்பிள்ளை இளக்காரமாக சிரித்தார்.

” பூவம்பட்டி ஜமீனு கத மறந்துட்டீரா மாப்ள ? முன்னுக்கு சமாதானம் பேசுறாப்புள பேசிட்டு ராவொட ராவா ஊரக்கொளுத்திப்புட்டான்ல கும்பினியான்”?

“சரி வேற என்னதாஞ் செய்ய”?

” என்னா செய்ய ? நம்மூரு எல்லக்கருப்பந்தான் எதாச்சுஞ் செய்யனும். மனுசரால ஆவாதத சாமிகையிலதான ஒப்புவிக்கனும் ? நாளைக்கி அளவைக்கி வர தொரைகிட்ட அய்யரவுட்டு பேசிப்பார்ப்பம். அதுக்குமேல கருப்பன் விட்டவழி”

எல்லோருக்கும் அதுதான் வழியென்று பட்டது. மெல்ல எல்லோரும் கலைந்து அவரவர் இருப்பிடம் நோக்கி நகர்ந்தார்கள். மறுநாள் விடியலிலிருந்தே மெலிதாக மழை தூறிக்கொண்டிருந்தது. ஆள்படையுடன் கலெக்டர் ஜீப்பில் வந்தபோது மழை நின்று குளிர்ந்து ஈரமாக இருந்தது ஊர். ஜனங்களெல்லாம் கலெக்டர் இருந்த இடத்தில் குழுமினார்கள். சிவந்தமுகங்கொண்ட துரையின் மூக்கு மிளகாய்ப்பழம்போல சிவந்திருந்தது. அச்சு அச்சு என்று தும்மியபடியே இருந்தார்.

கடுமையான தடுமன் பிடித்திருக்கிறதென்று கண்டுகொண்ட சேவுப்பிள்ளை துரையின் அனுமதியுடன் ஊர் வைத்தியனிடம் மூலிகைச்சாறு எடுத்துவரச்சொல்லி கொடுக்க, இன்முகத்துடன் அதை ஒரு மிடறு விழுங்கிவைத்தான்.

கணக்கப்பிள்ளை அய்யரைவிட்டு அவரிடம் ஊர் சார்பாகப் பேசிப்பார்த்தார்கள். தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழும் ஊர் இது. வேறெங்கேனும் இடம் பார்த்துக்கொண்டால் பெரிய உதவியாக இருக்குமென்று வேண்டுகோள் வைத்தார்கள். கலெக்டரின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது. திடமான குரலில் அவன் கூறியதை மொழிபெயர்த்தார் கணக்கப்பிள்ளை.

இது பிட்டிஷ் சர்க்காரின் உத்தரவு என்றும், இதில் தன்னால் எவ்வித உதவியும் செய்ய இயலாதென்றும் சாரம். மேலும் புதுப்பாளையத்துக்கு நாலுகல் தொலைவு மலையடிவாரத்தில் இடம் கொடுப்பதாகவும் ஊரார் அங்கே சென்று பிழைத்துக்கொள்ளும்படியும் விவரித்தான். இதற்கே தான் சர்க்காரிடம் மிகவும் போராடி பிரத்தியேக அனுமதி பெற்றதாகவும் விளக்கினான்.

அவன் கூறிய கரடுமுரடான பிரதேசத்தில் பயிர்பச்சை விளைவதற்கான சாத்தியங்களே இல்லையென்று கூறியதை அவன் கேட்டுக்கொள்ளவில்லை. மேலும் ஊர்நிலத்தில் உருவாகப்போகும் பேக்டரியில் ஊர்க்காரர்களுக்கும் நிறைய வேலைகள் கிடைக்குமென்று ஆசைகாட்டினான். ஊர்மக்கள் ஒருவித உன்மத்தநிலைக்குச்சென்று வெடிக்கும் நிலையிலிருந்தார்கள். கலெக்டரை சுற்றிலும் துப்பாக்கி வைத்திருந்த தானாக்காரர்கள் தயார்நிலையிலிருக்க, ஊர்ப்பெண்கள் எல்லோரும் மாரிலடித்துக்கொண்டு அழத்தொடங்கினார்கள். இறுதியாக சேவுப்பிள்ளை துரையைப்பார்த்து வினயமாகச்சொன்னதையும் அய்யர் அவனுக்கு மொழிபெயர்த்தார்.

“ஆள்படையும் ஆயுதமும் வச்சிருக்க ஒங்களோட மல்லாட எங்களால ஆவாதுய்யா. எங்க மூத்தாரு வாழ்ந்த பூமியிது. இன்னமும் அவுக சீவன் இங்கனக்குள்ளதான் அலைஞ்சிட்டுக்கெடக்கும்னு நம்புறோம். எல்லாத்துக்கும் மேல எம்மட கருப்பனுக்கு நீங்க பதில்சொல்லியாவனும். பெரியவங்க சொல்லுக்கு கட்டுப்படுறோம்”

இது எதுவும் அவனுக்குப்புரிந்ததாகத் தோன்றவில்லை. ஆட்களைக்கூட்டிக்கொண்டு நிலம்நோக்கி நகர ஊரும் அவன் பின்னால் அணிவகுத்துச்சென்றது. முளைவிட்டிருந்த நெற்பயிர்களின் நடுவே தோல் சப்பாத்துகள் சகதியில் புரள கலெக்டர் நிலத்தில் நடந்தான். ஈரவாடை பிரதேசத்தை சூழ்ந்திருக்க, மெல்லமெல்ல வானில் வெப்பம் ஏற்த்தொடங்கியது. காற்று சுழன்றடித்தது. கருப்பன்கோவிலலில் மணியடிக்கும் சப்தம் நிற்காமல் ஒலித்தது. திடீரென்று கலெக்டர் ரத்தரத்தமாக வாந்தியெடுத்தான். தலைசுற்றி நிற்கமுடியாமல் தள்ளாடினான்.

உதவியாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சேவுப்பிள்ளை யும் ஊராரும் அவனைக் கைத்தாங்கலாக கருப்பன் சந்நிதிக்கு அழைத்துச்சென்றார்கள். அவன் மரணபீதியில் கைகால்களை உதறி அரற்றத்தொடங்கினான். சேவுப்பிள்ளை பூசாரியின் காதோரம் என்னவோ சொல்ல, அவன் வேகவேகமாக உள்ளே சென்று கைப்பிடி நிறைய விபூதியும் எலுமிச்சம்பழமும் எடுத்துவந்தான். விபூதியை கலெக்டர் முகத்தில் தூவி அவன் வாயில் பழத்தைப்பிழிய, அவன் மெல்லமெல்ல சற்று நிதானத்திற்கு வந்தான். அன்று அளவை தள்ளிப்போடப்பட்டது.

அடுத்தவாரத்திலேயே கருப்பன் கோவிலில் திரண்ட ஊர்மக்கள் கிடாய் வெட்டி படையலிட்டது. பேக்டரி கட்டுவதற்காக வேறெங்கோ நிலம் பார்த்துக்கொண்டிருப்பதாக வதந்தி உலவியதுதான் காரணம். தங்கள் நிலத்தை கருப்பன் தான் காப்பாற்றித்தந்தான் என்று பூரணமாக நம்பியது ஊர். அடுத்த அறுவடைக்குப்பின் கருப்பனுக்கு ஒரு சுற்றுச்சுவர் எழுப்புவதுகுறித்து ஊர் ஒருமனதாகத் தீர்மானித்தது. சேவுப்பிள்ளையும் வைத்தியரும் ஒருமுறை தங்களுக்குள் புன்னகைத்துக்கொண்டனர்.

*

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *