ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 15 of 19 in the series 19 செப்டம்பர் 2021

 

அழகியசிங்கர்

 



 (கு.ப.ராஜகோபாலன்)

            இந்த முறையும் இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து எழுதலாமென்று தோன்றியது.

 

            இந்த இரண்டு கதைஞர்களும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.  மணிக்கொடி முப்பதுகளில் வெளிவந்த பத்திரிகை.  பி.எஸ்.ராமையாவின் ஆசிரியப் பொறுப்பில் மணிக்கொடி பத்திரிகை 1935 ஆம் ஆண்டிலிருந்து 3 வருடங்கள் சிறுகதைக்கான பத்திரிகையாக மாறி இருந்தது. பி.எஸ் ராமையாதான் ஆசிரியர்.

 

            அந்தக் கால கட்டத்தில் அறிமுகமானவர்கள் கு.ப.ராஜகோபாலனும், சிட்டியும். 

 

            இவர்கள் கதைகளை இப்போது எடுத்துக்கொண்டு ஆராயலாம் என்று தோன்றுகிறது.

 

            கு.ப.ராவின் கதையான ‘கனகாம்பரமும்’, ‘அந்திமந்தாரை’ என்கிற சிட்டியின் கதையும்.

 

            இந்த இரண்டு கதைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.  ஒன்றை ஒன்று தொடர்பு இருக்கிறது. 

 

            எழுத்தாளர்கள் கதாபாத்திரங்களாக மாற்றி கதைகளாக வலம் வந்தவர்கள் என்று சொல்லலாம்.

 

            ‘கனகாம்பரம்’ என்ற கதையைப் பார்த்து சிட்டி, ‘அந்திமந்தாரை’ என்ற கதையை எழுதினார். கு.ப.ராவும், சிட்டியும்தான் கதாபாத்திரங்கள்.  ஆனால் இருவரும் வேறு வேறு விதமாக எழுதியிருக்கிறார்கள்.

 

            முதலில் கனகாம்பரம் கதையைப் பார்ப்போம்.

 

            இக் கதை உண்மையில் நடந்த சம்பவம்.  அதை வைத்துக்கொண்டு கு.ப.ரா எழுதியிருக்கிறார். இந்தச் சம்பவத்திற்குக் காரணகர்த்தா சிட்டி.   

            ராமுவும் மணியைப்போல மிகவும் முற்போக்கான கொள்கைகள் உடையவன்தான்.  கல்லூரி விவாதங்களில் பேசிய பொழுது, ஆணும் பெண்ணும் சரிநிகராகப் பழக வேண்டுமென்றும். பெண்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமான சீர் திருத்தம் வேண்டுமென்றும் ஆவேசத்துடன் முழங்கி வந்தான்.

 

            மணி வீட்டு வாசலில் நின்றுகொண்டு ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.

 

            சீர்திருத்தமான கொள்கைகளை நடைமுறையில் கொண்டு வந்தபோது அவன் கலவரம் அடைந்து விட்டான். 

 

            ஒன்றுமில்லை முன்பின் பழக்கமின்றி மணியின் மனைவி தன்னுடன் பேசியது ராமுவுக்கு வியப்பாக இருந்தது.

 

            மணியின் மனைவி சாரதா படித்த பெண்ணும் அல்ல.  அசல் நாட்டுப்புறம். அவளுடைய நடை உடை பாவனைகளிலும், அந்தச் சில கணங்களில் அவன் கண்களில் பட்டமட்டில் ஒருவிதப் புதுமையும் காணவில்லை.

 

            படிக்காத பெண் தன்னுடன் பேசினதுதான் அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கி விட்டது.

 

            ஆனால் அவள் பேசிய சொற்கள் மெல்லிய தொனியுடன்தான் வெளிவந்தன.  அவன் முகத்தைப் பார்த்துக்கூடப் பேசவில்லை அவள், தலை குனிந்த வண்ணமாகவே இருந்தாள்.  இருந்தாலும் அவன் மனம் என்னவோ சமாதானப்படவில்லை.

 

            அவன் தடுமாறிச் சொல்கிறான்.  “நான் நான் மணியின் சிநேகிதன்  என்று சொல்லி  மேலே என்ன சொல்லுவது என்பது தெரியாமல் தத்தளித்தான்.

 

            “இதோ வந்துவிடுவார் உள்ளே வந்து உட்காருங்கள்,” என்றாள் சாராதா

.

            ஒரு தனி வீட்டில் தனியாக இருக்கும் இளம்பெண் தன்னை உள்ளே வந்து உட்காரச் சொன்னால் – அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

 

            ராமு இந்த இடத்தில் தலை நிமிர்ந்து பார்க்காமல், “இல்லை, அப்புறம் வருகிறேன்,” என்று அரைகுறையாகக் கூறித் தலையெடுத்து; பார்க்காமல் வெகு வேகமாய்ப் போய் விட்டான்.

 

            ராமு போனபிறகு ஐந்து நிமிடத்திற்கெல்லாம் மணி வந்து விட்டான். 

 

            “உங்களைப் பார்க்க உங்கள் நண்பர் வந்தார்,” என்றாள் சாரதா.

 

        “யார் அது?” என்று கேட்டான் மணி.  பெயரைச் சொல்லவில்லை என்றாள்.  திடீரென்று மணியின் முகம் கோபத்தால் சிவந்தது.

 

            “வெறும் சினேகிதர் என்று மட்டும் சொன்னார்.  வேற எதுவும் சொல்லவில்லை.”  பின் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாள்.

 

            “உள்ளே வந்து உட்காருங்கள்.  வந்துவிடுவார்” என்றேன். 

 

            மணியோ அந்தமாதிரிப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை.  முதலில் அவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் இருந்தது அவள் பதில்.

 

            முகம் தெரியாத நண்பனைக் கூப்பிட்டு உட்காரச் சொன்னது பெரிய தப்பாகப் போய் விட்டது.  முகம் தெரியாதவனை உள்ளே உட்கார அழைப்பது அநாகரிகம்.  என்ன தைரியம் இந்தப் பெண்ணிற்கு? 

 

            இம்மாதிரி யோசித்துக்கொண்டே வெளியே போய்க்கொண்டிருந்தான் மணி. 

 

            தெருவில் போய்க் கொண்டிருந்தபோது ராமு மணியைப் பார்த்துவிடுகிறான்.  ராமுவுக்கும் சங்கடமாகப் போய்விடுகிறது.  மணியின் மனைவி சொன்னதைச் சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம்.  

 

            இவ்விதம் எண்ணியவனாய், ராமு சடக்கெண்று ஒரு சந்தில் திரும்பி மணியின் கண்ணில் படாமல் தப்பினான்.

 

            நண்பன் என்றதால் தன்னை உள்ளே அழைத்து உட்காரும்படி சொன்னது சரி என்று நினைத்தான். அவள்தான் உண்மையான பெண்   மாலை மணியைக் கண்டு சொல்ல வேண்டும்.

 

            அன்று ஆறுமணிக்கே வீட்டிற்கு வந்து விடுகிறான் மணி.  சாரதா வீட்டு வேலைகளைச் செய்து முடித்துவிட்டு அறையில் தலையை வாரிப் பின்னிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  பக்கத்தில் ஒரு தட்டில் தொடுக்கப்படாத கனகாம்பர மலர்கள், எதிரே முகம் பார்க்கும் கண்ணாடி, ரிப்பன், சீப்பு, வாசனைத் தைலம் முதலியவை  இருந்தன.

 

            மணிக்கு ஏதோ ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.  “என்ன பூ இது, ஏன் தலையில் வைத்துக்கொள்கிறாய்” என்று அவன் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தான்.

 

            அவன் கனகாம்பரத்தைத்தான் சொல்கிறான் என்று நினைத்து சாரதா, அந்தச் சந்தர்ப்பத்தில் அவனது பட்டண நாகரிகத்தை இடித்துக் காட்ட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

 

            “பட்டணத்திலே எல்லோரும் இதைத்தானே வைத்துக் கொள்கிறார்கள்? சங்கீத சபையிலே கூட இதைத்தானே தலை தாங்காமல் வைத்துக்கொண்டு வந்தார்கள்” என்று சாரதா சொன்னாள்.

 

            “பட்டணத்துப் பெண்கள் மாதிரிதான் இருக்கிறது அவர்கள் வைத்துக்கொள்ளுகிற கனகாம்பரமும், வாசனையில்லாத பூவை எங்கேயாவது தலையில் வைத்துக்கொள்வதுண்டா?”

 

            “நீங்கள்தானே பட்டணத்துப் பெண் போல் இருக்க வேண்டும்” என்று சொன்னீர்கள் என்றாள் சாரதா.

 

            இந்த இடத்தில் மணி குறிப்பிடுவதுதான் முக்கியமான விஷயம்.  தன் மனைவியை இடித்துக் காட்டுகிறான்.

 

            “அதற்காக மூன்றாம் பேர்வழியைப் போய் வீட்டுக்குள்ளே வந்து உட்காருங்கள் என்பதா?” என்று ஆத்திரத்தில் கொட்டிவிட்டான்.

 

            சாரதா கோபித்துக்கொள்கிறாள்.  கனகாம்பரப் பூவைத் தட்டுடன் அப்படியே எடுத்து அலமாரியில் வைத்துவிட்டுச் சமையலறைக்குப் போய்விட்டாள். 

 

            ஏழடிக்கும்போது ராமு வந்தான்.  வந்ததும் வராததுமாய் ராமு, “மணி நான் காலையில் வந்தேன்.  எங்கே போயிருந்தாய்,” என்று கேட்கிறான். மணிக்குத் தெளிவு பிறந்தது.  அவன் மனைவியிடம் கோபித்துக்கொண்டதற்காக வருந்தினான்.  

 

            வருந்தி அவன், “நான் சொல்ல வந்தது” என்கிறான் சாரதாவைப் பார்த்து.

 

            சாரதா அதைப் பற்றிக் கவலைப்படாமல், “கனகாம்பரம் எனக்குப் பிடிக்காதே.  நீங்கள் சொன்னதில் தப்பென்ன?” என்று முடிக்கிறாள்.

 

            இந்தக் கதையைக் குறித்து சில விஷயங்களை ஆராயாலாமென்று நினைக்கிறேன்.

 

            பெண்களின் சுதந்திரம் பற்றிப் பேசும் இரண்டு நண்பர்கள். தனக்கென்று வரும்போது அதில் அப்படி இருப்பதில்லை. 

 

            மணியைப் பார்க்க வரும் ராமு, அவன் இல்லை என்பதை அறிந்தவுடன், அந்த   இடத்தை விட்டு அவன் பெயரைக் கூடச் சொல்லாமல் பதட்டத்துடன் போகிறான்.  ஏனெனில் சாரதாவுடன் பேசக் கூச்சம்.  

 

            பட்டிக்காட்டுப் பெண்ணாக இருந்தாலும் துணிச்சலுடன் வீட்டில் வந்து அமரச் சொல்கிறாள் ராமுவைப் பார்த்து சாரதா.

 

            இதைக் கேள்விப்பட்டதும் மணி கோபமடைகிறான்.  யார் வந்திருக்கிறார் என்பது தெரியாமல் உள்ளே உட்காரச் சொல்வதா என்று.

 

            முப்பதுகளில் பெண்களுக்குச் சுதந்திரம் தர வேண்டுமென்று பேசினால் சுதந்திரமில்லை என்று சொல்கிறது இந்தக் கதை. உள்ளே வந்து உட்காரும்படி கூப்பிட்டதை ஒரு இரண்டு ஆண்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை துல்லியமாக விவரிக்கிறார் கு.ப.ரா. 

              

           

           19.09.2021          

 

Series Navigationகவியின் இருப்பும் இன்மையும்அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *