ஒரு கல்யாணத்தில் நான்

 

கற்றுக்குட்டி

 

“வாருங்கள் வாருங்கள், வந்திருந்து பிள்ளைகளை

வாழ்த்துங்கள், வாழ்த்துங்கள்” என்று அழைத்ததனால்

போரடிக்கும் கல்யாணம் என்று தெரிந்திருந்தும்

போனேன் புதுச்சலவை மணக்கின்ற வேட்டியுடன்

 

மண்டபமோ பிரம்மாண்டம், அலங்கரிப்போ அபாரம்

அண்டியிருந்தோர் ஆடைகளோ, அடடா ஓ அடடா.

சென்னைக் கடைகளேறி ‘செலெக்ட்’ செய்து வாங்கியதாம்

சென்னிறக் கூரை மற்றும் ஜிலுஜிலுக்கும் ஜிப்பாவும்.

 

கழுத்திலொரு அட்டிகை, காதுகளில் வைரம்,

கட்டியிருக்கும் சேலைமேல் ஒட்டியுள்ள ஒட்டியாணம்

கொழிப்பான அரைவயிறு சரிந்திருக்கும் சேலைக்குள்

செழிப்பாக இருக்கிறார் சொந்தங்களும் பந்தங்களும்.

 

அய்யரவர் ஆர்ப்பாட்டம் அனைவருக்கும் தெரிகிறது

அதனை எடு இதனைக் கொடு என்றவரின் ஆணையினை

செய்ய உறவினர்கள் ஓடுகிறார் பரபரப்பாய்

சுற்றி வரும் அவர்களைச் சுற்றுகிறார் குழந்தைகளும்.

 

தாலிக் கொடிக்குத் தங்கம் இருக்கும் ஒரு கிலோ

தாம்பளத்தில் வைத்துத் தருகிறார் வாழ்த்துதற்கு.

தோளில் அணிந்துள்ள துண்டு சரியாமல்

தாலிக் கொடியைப் பூட்டுகிறார் மாப்பிள்ளை.

 

பாதவிரல் பிடித்து படிப்படியாய் சப்தபதி

பதமாய் முடித்து சொல்கிறார் மாப்பிள்ளை.

“கோதை உன்னைக் கொண்டவன் நான் என்பதனால்

வேதனைகள் வந்தபோதும் விலாகாதிருந்திடுவேன்.”

 

இந்தியர்கள் சமுகத்தில் மணமுறிவு என்பதோ

முந்தி முந்தி வருகிறதாம் பாதிக்குப் பாதிஎன

பந்தமாய்ச் செய்கின்ற சடங்குகள் அத்தனையும்

பந்தாவாய்ப் போகாது இருந்தால் நன்மையே!

————————————————————————————-

Series Navigationசகவுயிர்ஆனந்த பவன் நாடகம் – காட்சி-2