ஒரு கவிதை எழுத வேண்டும் !

 

 

மனம் 

சொல் முளைக்காத 

பாழ்நிலமாய்

என்னைப் பார்த்து

நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது

 

எங்கே என் சொற்கள் 

என்ற கேள்வி

பதில் கிடைக்காமல் தவிக்கிறது

 

ஒரு கவிதை எழுத வேண்டும்

யோசித்துப் பார்க்கிறேன்

என்னுள் சொற்கள்

கூடுவதும் கலைவதுமாய்க்

கணங்கள் நழுவுகின்றன

 

மனம்

பழைய பக்கங்களைப்

புரட்டுகையில் 

எல்லாம்

மங்கி மறைகின்றன

 

அறுவடைக்குப் பின்னான

வயல் ஒன்று

முட்கள் முளைத்த முகமென

என் மனத்தை ஆக்ரமிக்கிறது

 

ஒரு நீண்ட காத்திருத்தல்

எதையும் தரவில்லை

 

கடவுள் மனம் போல்

முரண்டு பிடிக்கின்றன

என் சொற்கள்

கவிதை வரம் மறுத்து …

 

ஒரு கவிதை எழுத வேண்டும்

காத்திருக்கிறேன். ..

 

                     +++++++

 

Series Navigationபெய்யெனப் பெய்யும் மழை – வெண்பாக்கள் எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை