ஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்து

ஹெச்.ஜி.ரசூல்

காலச்சுவடு செப்டம்பர் 2011 இதழில் ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ என்னும் தலைப்பிலான களந்தை பீர்முகம்மதுவின் எழுத்துப் பதிவு மிகவும் நியாய பூர்வமாக அமைந்திருந்தது. ஒரு படைப்பாளியின் வலியைத் தனது வலியாக உணர்ந்து எழுதியதாக உணர்கிறேன். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் அதிகாரத்தின் வன்மத்தை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த காலச்சுவடுக்குப் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்து உள்ளபடியே நன்றி கூறிக்கொள்கிறேன்.

இப்பிரச்சினை குறித்து இன்னும் சில கூடுதலான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பத்மநாபபுரம் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தக்கலையில் நடைபெற்ற சூபிஞானி பீரப்பா விழாவில் நானும் என் குடும்பமும் கலந்துகொள்வதைத் தடுக்கும் நோக்கத்தோடு இந் நிகழ்வில் கலந்துகொள்ள நினைத்தால் குழப்பம் விளைவிக்க வந்ததாகக் கூறி என்மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்போம் என மிரட்டலாக வக்கீல் நோட்டீஸ் ஒன்றை 2.6.2011 அன்று அனுப்பியிருந்தார்கள்.

நான் ஜமாஅத் நிர்வாகத்திற்கு அனுப்பிய உறுப்பினர் சந்தாத் தொகைக்கான காசோலையையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தவறாகச் சித்தரித்து அபீமுஅஜமாஅத் நோட்டீஸ் போர்டில் என்மீதும் என் குடும்பத்தின் மீதும் தண்டனை தொடர்வதாகவும் அறிவிப்பு செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு வக்ஃப்வாரியத்திற்கு இத்தீர்ப்பின் நகலை அனுப்பி ஊர் விலக்கத்தை ரத்துசெய்யக் கோரிய பிறகும் அவர்களும் மௌனம் சாதிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஜமாஅத்தினர் இத் தீர்ப்புக்கு எதிராகத் தக்கலை சப் கோர்ட்டில் அப்பீல் சூட் போட்டுள்ளார்கள். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

ஒரு படைப்பாளியாக உண்மைகளை மிக நெருக்கமாக உணர்ந்திருந்தபோதும் ஊர்விலக்கம் செய்யக் கூடாது என வக்ஃப் வாரியத் தீர்மானமும் வக்ஃப் சட்டவிதிகளும் துணையாக இருந்தபோதும் அவ்வாரியத் தலைவராக இருந்த கவிக்கோ அப்துல்ரஹ்மான் அவர்கள்கூட இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கவில்லை.

அவரது சாய்வுகூட ஜமாஅத்துகளின் அதிகாரத்திற்குப் பணிந்துபோவதாகவே வெளிப்பட்டுவிட்டது.

மூன்றாண்டுகளுக்கும் மேலாக இந்த அலைபாய்தலும் அலைக்கழிப்பும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.
நன்றி
அக்டோபர்2011 காலச்சுவடு

Series Navigationமிம்பர்படியில் தோழர்விருந்து