“ஒரு வார்த்தை ஒரு லட்சம்”

This entry is part 14 of 19 in the series 7 பெப்ருவரி 2016

 

ந்த ஒரு வார்த்தையில் செத்தேன் நான். உடம்பெல்லாம் ஆடிப்போனது. எதிர்பார்க்கவேயில்லை அவனிடமிருந்து. இதுக்குப் போய் எதுக்குங்க இப்டி? பதறிப்போனது மனசு. பரவால்ல…விடுங்க…அதனால ஒண்ணுமில்ல…. – உடனே மறுதலித்தேன். அந்த முகம் பச்சென்று மனதில் உட்கார்ந்து கொண்டது.

கணத்தில் பார்வையிலிருந்து மறைந்து போனான். லிஃப்ட் இறங்கும் சப்தம். விடுவிடுவென்று படிகளில் தாவிக் கீழே போய் ஒரு முறை மீண்டும் பார்க்கத் துடித்தது மனசு. சமநிலைக்கு வந்துதான் போகிறானா? அறிய அவா. ஒரு சத்தியமான உணர்ச்சி மேலீட்டைக் கண்ட நிறைவு. அப்பப்பா…! என்ன ஒரு ஒழுக்க உணர்வு? நிமிஷத்தில் ஆளைப் புரட்டிப் போட்டு விட்டானே…!

நீ இப்படிப் பயப்பட வேண்டிய அவசியமேயில்லை நண்பரே….! அவ்வாறெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒன்றைச் செய்து விடமாட்டேன் நான். நானும் உனது வர்க்கம்தான். எதற்காக நீ இத்தனை நடுக்கம் கொள்ள வேண்டும்…உன் தோழன்தான் நான்…உன்னைப் போலத்தான்.. நீ சாதாரணமாகவே எதிர்கொள்ளலாம் என்னை…!

எனக்கு என் அப்பா ஞாபகம் வந்தது. தவிர்க்க முடியவில்லையே…! கிளறி விட்டவன் அவன்தானே…!நாள் பூராவும் நெருப்பில் கிடந்து வெந்து, இரவு மணி பத்துக்கு மேல் வேலை முடித்து அந்த பேட்டாக் காசை வாங்கவென்று கடை முதலாளியின் கல்லா முன்பு வந்து காத்துக் கிடப்பாரே…! அந்தக் கொடுமை காட்சியாய் விரிந்தது. அறுபது வயது கடந்த ஒரு மனிதன், இப்படி வந்து கதியாய்க் காத்து நிற்கிறானே என்கிற மனிதாபிமான உணர்வு கொஞ்சங்கூட இல்லாமல் அப்படிச் சற்றுக் கால் கடுக்கக் காக்க வைப்பதில் என்னதான் பெருமையோ? மனிதத் தன்மைதானா அது? முதலாளித்தனத்திற்குப் பெருமை சேர்ப்பதா அது? …வெறும் நாலணா….நாலே நாலு அணா….அதை வாங்கத்தான் அந்தப் பாடு…நீ கொடுப்பது பிச்சைக் காசாக இருக்கலாம்…ஆனால் அந்த துட்டை வாங்கிக் கொண்டு வந்து, தன் மூக்குப் பொடிச் செலவைக் கூடக் குறைத்துக் கொண்டு அப்படியே வீட்டில் அம்மாவிடம் கொடுத்தாரே அப்பா…அங்கே அவர் உன்னைவிடவல்லவா உயர்ந்து போனார்? அந்தப் பண்பாட்டை நீர் என்றேனும் உணர்ந்திருக்கிறீரா? இப்படியான ஒரு தொழிலாளி உமக்கு வாய்க்க நீரல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்? அப்படி வாய்த்ததனால்தானே நேரம் காலமில்லாமல் உம்மால் வேலை வாங்க முடிந்தது? சக்கையாய்ப் பிழிந்து எடுக்க முடிந்தது? பேட்டா என்று வெறும் நாலணாக் காசை விட்டெறிய முடிகிறது! உன்னை மேலும் மேலும் பணக்காரனாக்க அவரைப் போன்று எத்தனை பேர்…? உழைப்பைக் கொட்டினார்களே உனக்காக? எண்ணங்கள் எங்கெங்கோ…!

பாவம் என்றாள் கல்பனா. திரும்பி அவளை நோக்கினேன். அந்த முகத்தில்தான் எத்தனை கருணை? கொஞ்ச நேரத்துல இப்படிப் படுத்திட்டீங்களே…? – பார்வை சொல்லாமல் சொல்லியது.

நீ என்ன நினைக்கிறேன்னு புரியுது.என்னோட அனுபவம் அப்படி…நானென்ன செய்ய? ஒவ்வொரு சின்ன விஷயமும் கூட எனக்கு இ்டைஞ்சலாத்தான் ஆகுது… என் ராசி அப்டி….!

அவன் அங்க அப்டிச் செய்தான்னா இவனும் இங்க அப்டியே செய்வான்னு நினைப்பீங்களா? ஊர் விட்டு ஊரு வந்துமா இந்தப் பாடு….? மனுஷாளை நம்புங்க முதல்ல…

நம்பறேன்…யார் மாட்டேன்னு சொன்னது? நம்பித்தானே அங்க இழு இழுன்னு இழுத்தேன்…ஆனா பாடாத்தானே இருக்கு?….நானாவா வலிய இழுத்து விட்டுக்கிறேன்…அதுவாத்தானே வருது…எனக்கு எல்லாமே பட்டுப் பட்டுத்தான் புரியும்….குழம்பித்தான் தெளியும். என் முகராசி அப்டி….வேறெதச் சொல்றது? அடேயப்பா என்னா பாடு அங்க….ஒரு முறையா ரெண்டு முறையா…நானும் விடாம அவனைக் கட்டி இழுத்துக்கிட்டுதானே போனேன்….விட்டு உதறவா செஞ்சேன்…? மனசு கேக்கலியே…! அதை என்னைக்காச்சும் நினைச்சிப் பார்த்திருக்கியா நீ? இல்ல அவன்தான் நினைச்சானா? அவனுக்குப் பத்தோட பதினொண்ணு…தொழில்ல இதெல்லாம் சகஜம்… மனுசனோட நல்லத எவனும் நினைக்கிறதில்ல….குறைதான் பெரிசாக் கண்ணுக்குப் படும்…..பிரபு…பிரபுன்னு எத்தனைதரம் தண்டனிட்டிருக்கேன்…..அசஞ்சு கொடுத்தானா அவனும்….கில்லாாாாடி யாச்சே…! இந்தோ வருது சார்…அந்தோ வரான் சார்னு அடேயப்பா என்னா சமாளிப்பு…!

உறலோ….யாரு…பிரபு பேசறீங்களா…,? – வேறே கதி….!

ஆமா சார்….நீங்க…..?

என்னங்க…எத்தனைவாட்டி பேசினாலும் நம்பர சேவ் பண்ண மாட்டீங்க போல…? எப்ப எடுத்தாலும் யாரு, யாருன்னு கேட்டா எப்டீங்க?

தெரிலீங்களே…? அதான் கேட்கிறேன்…குரல் மட்டும் லேசா பழகின கஸ்டமர் மாதிரித் தோணுது….அட சொல்லுங்களேன்….

என்னங்க நீங்க! போங்க…நாந்தாங்க அல்லி மலர் தெரு ராகவன் பேசுறேன்…அந்தப் பச்சக் கலர் வீடு…ஞாபகமில்ல? மணி எட்டாகப் போவுது….இன்னும் பேப்பரக் காணமே….அதுக்குத்தான் கூப்டேன்…

அப்டியா சார்….பையன் இந்நேரம் வந்திருக்கணுமே…அஞ்சரைக்கெல்லாம் புறப்பட்டுட்டானே? போட்டிருப்பானே சார்….வாசல்ல நல்லா பார்த்தீங்களா…? ஓரமா எங்கயாச்சும் விட்டெறிஞ்சிட்டுப் போயிருக்கப் போறான்….

நல்லாத் தெரிஞ்சி வச்சிருக்கீங்க….கரெக்டாச் சொல்றீங்க…. அப்டி எறிஞ்சிட்டுப் போயிருந்தாலும் பரவால்லியே…! தண்ணில கிடந்தாலும் எடுத்துக் காயவச்சுப் படிப்பனே…அதுக்கும் ஆளக் காணமே….மணி எட்டுன்னா நியூஸ் பழசு சார்….அதான் இருபத்தி நாலு மணிநேரமும் டி.வி.ல சொல்லிட்டேயிருக்கானே….இனிமே பேப்பரப் போட்டா என்ன போடாட்டி என்ன?

என்ன சார் அப்டிச் சொல்லிட்டீங்க…தெனமுமா இப்டி ஆவுது…? என்னைக்காச்சும்தான சார்…கொஞ்சம் பொறுத்துக்குங்க…இதோ வந்திடுவான்…..

நீங்களும் இதே பதிலத்தான் சொல்லிட்டிருக்கீங்க…நானும் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்…வருஷக் கணக்கா…! விடிவுதான் பொறக்க மாட்டேங்குது…..பேசாம ஆள மாத்திட வேண்டிதான்….வேறே யாரு நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்காங்க…நீங்கதான் சொல்லுங்களேன்…..இதென்ன அவனிடமே? எனக்கே சிரிப்பு….!

அப்டியா சார்….உங்க ஏரியாவுக்கு இன்னொரு ஏஜன்ட் எந்தம்பி ராஜாதான் சார்….என்னவிட்டா நீங்க அவன்ட்டதான் போய் நிக்கணும்…அவனுதயும் சமயத்துல நாந்தான் சேர்த்துப் பார்க்க வேண்டிர்க்கு…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க சார்….

இதுலயும் மோனோப்போலியா? சரியாப் போச்சு….அவன் ராஜா, நீங்க பிரபுவாக்கும்…ரெண்டு பேரும் நல்லாத்தான் ஆளுறீங்க….!

கோபப் படாதீங்க சார்….சின்னப் பசங்கள வச்சு வேல வாங்குறது ரொம்பச் சிரமம் சார்…காலைல நாலு மணிக்கு எழுப்புறதே பெரும் பாடுசார்….இவிங்கள எழுப்பி, டீய வாய்ல ஊத்தி உக்காரவச்சி, பேப்பர ஏரியாவைஸ் பிரிச்சி அடுக்கி ஆளுகளக் கிளப்பி விடுறதுக்குள்ள தாலி அந்து போகும் சார்…..திடீர் திடீர்னு காணாம வேறே போயிடுவானுங்க…எவனையும் எதுவும் கேட்க முடியாது….திடு திப்னு ஒரு நா வந்து நிப்பானுங்க… லைனுக்குப் போறியான்னு அனுப்பித்தான் ஆகணும்…இந்தச் சம்பளத்துக்கு ஆளுக கிடைக்கல சார்…வீடுக வேறே அதிகமாயிடுச்சி….பசங்களுக்கு கட்டுபடி ஆகலைங்கிறாங்க…இந்தத் தொழிலயே விட்டுட்டு எங்கயாச்சும் ஓடிடலாமான்னு இருக்கு சார்….தல சுத்துது…காலச் சுத்துன பாம்பு மாதிரி…..

வார்த்தைக்கு வார்த்தை ஆயிரம் “சார்……”

யப்பா…யப்பா…யப்பா….போதும்டா சாமி போதும் புராணம்….விட்டா அழப் பண்ணிடுவீங்க போலிருக்கே…! போயி போட்டிருக்கானான்னு பார்க்கிறேன்…இந்த மாசத்துல இது அஞ்சாவது தடவை….ஞாபகம் இருக்கட்டும்…காசக் குடுங்கன்னா நா உங்ககிட்டே கேட்க முடியும்? எங்கிட்டயா பைசா கட்டுனீங்கன்னு நீங்க திருப்பிக் கேட்டா மூஞ்சிய எங்க கொண்டு போய் வச்சிக்கிறதாம்? லைன்லயே கடேசி வீடுன்னு வேறே சலிச்சுக்கிறீங்க… சம்மதிச்சிதானே போட்டுக்கிட்டிருக்கீங்க.…. வருஷச் சந்தாக் கட்டிருக்கிற ஆசாமிங்க நானு….ஒரு வேளை அதுனாலதான் இப்படியோ? .நீங்க போட்டா போட்டதுதான்…போடலைன்னா?அம்பேல்தான்….பாடுதான்யா உங்களோட…காலத்துக்கும் தொரட்டிழுப்புதான்….வையி…வையி…..

தே நிலைமை இந்தச் சென்னையிலும் வந்து விடுமோ என்கிற பயம். ரெண்டு தினசரிக்கு வருஷச் சந்தா குறைவாயிற்றே என்று வழக்கம்போல் கட்டி, மாதத்தின் முதல்நாள் முதல் பேப்பருக்காகக் காத்திருக்க, வந்ததே வினை…..மணி ஆறு, ஆறரை, ஏழு…எட்டு…..எட்டரை…..ம்உறீம்…கதவைத் திறந்து திறந்து பார்த்ததுதான் மிச்சம்…பேப்பர் விழுந்தபாடில்லை….ஒருவேளை கீழே கார் பார்க்கிங்லயே எறிஞ்சிட்டுப் போயிருப்பானோ…? சில பசங்க அப்டியே சுருட்டி, உருட்டி ரெண்டாவது மாடிக்கு கரெக்டா பாஸ்கட் பால் மாதிரிப் போடுறாங்களே…அப்டியாச்சும் வந்து தலைல சொட்டுன்னு விழுந்தாலும் ஓ.கே.தான்…அதையும் காணலையே….!

உறலோ…யாரு…..ஜெகனா…..என்னாங்க….இன்னும் பேப்பர் வரலை….?

எந்த ஏரியா சார்…?

சரியாப் போச்சு…நல்லாக் கேட்டீங்க போங்க…அதாங்க…..மடிப்பாக்கம்…ராம் நகர் .புது ஃப்ளாட்டு…ரெண்டாவது மாடி….மறந்திட்டீங்களா அதுக்குள்ளயும்….? குறிச்சு வச்சிக்கலையா?

ஓ…!அன்னைக்கு தீபாவளி மலர் கொண்டாந்து கொடுத்தனே …அந்த சார் வீடு தான?

அதே மோருதாங்க….இப்ப ஞாபகம் வந்திடுச்சா….? மணி ஆறு, ஆறரைக்கெல்லாம் போட்டிடுவேன்னு சொன்னீங்களே….? ஒம்பதாவப் போகுதே….

சார்…எட்டரை கூட ஆகல சார்…என்ன சார் நீங்க…? மழையினால இன்னைக்குப் பேப்பர் வந்ததே லேட்டு சார்…அதுக்கப்புறம் பையன்கள லைனுக்கு கௌப்பினதும் பெரிய பேஜாராயிடுச்சி….உங்க ஏரியாவுக்கு நாந்தான் வந்திட்டிருக்கேன்….இப்போ…இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திடுறன் சார்…கொஞ்சம் இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கிடுங்க….

மணி எட்டரை தாண்டிடுச்சி…ஒம்பது நெருங்குது….இனிமே அஞ்சு நிமிஷத்துல வந்தா என்ன அரை மணில வந்தா என்ன…? – பார்றா…வச்சிட்டானா?…டக்கு டக்குனு கட் பண்ணிடுறாங்களே…. கேட்க நேரமில்ல போலிருக்கு….பர்ர்ர்ர்றக்கிறானுங்க…..

வாசலில் மணிச் சத்தம். போட்டுட்டு மூஞ்சியக் கூடக் காட்டாம மறைஞ்சிடுவானுங்களே…! காமிச்சாத்தான் நாலு வார்த்தை கேட்பமே….…அதுலர்ந்து தப்பிக்கத்தான்…ஓடிச் சென்று கதவைத் திறக்கிறேன். இதோ அவன்…ஜெகன்…. ஏரியா பேப்பர் ஏஜென்ட்…கண்ணுக்கு முன்னே….அன்று தீபாவளி மலரை முதல் ஆளாய்க் கொண்டு வந்து கொடுத்துக் காசு வாங்கிப் போனவன்….

பார்றா…பக்காவா கொண்டு வர்றீங்க? விரைவில்னு இப்பத்தான் விளம்பரம் பார்த்தேன்…அதுக்குள்ளேயுமா?….படு சின்சியர்….அநேகமா நாந்தான் மொத ஆளா இருப்பேன் போலிருக்கு…..படிக்கிறதுல…..இன்னும் மை வாசனை கூடப் போகலை…..ரொம்பச் சந்தோஷம்…

அதல்லாம் சொன்னா சொன்ன டயத்துக்கு கன் மாதிரி நிப்போம் சார்…..

அதே ஜெகன்தான் இன்று……

ஜெகன்…மை டியர் சன்…… என் வாய் தானாகவே முணுமுணுக்கிறது….பெற்ற மகனையே சுட்டு வீழ்த்தி, மடியில் கிடத்திக் கதறும் தந்தை…எஸ்.பி.சௌத்ரி…..அந்தக் காட்சிக்கான உணர்ச்சி மேலீட்டில் கண்கள் கசிந்து போக சிலையாய் நிற்கிறேன்….எதுவானாலும் அதன் தொடர்புடைய ஒன்று சம்பந்தமில்லாமல் பளிச்சென்று ஞாபகத்துக்கு வரும் எனக்கு. வந்து தொலைக்கிறதே…நானென்ன செய்ய….?

சார்….மன்னிச்சிக்குங்க…நாளைலேர்ந்து கரெக்டா ஆறு, ஆறரைக்குள்ள பேப்பர் வந்திடும்….சரிதானா சார்…இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்கிடுங்க…வர்றன் சார்! சார் வர்றேன்….முகத்தைப் பார்த்துக் குனிந்து சக்கென்று ஒரு சல்யூட்…ரொம்பத் தேங்க்யூ சார்…..

மன்னிச்சிக்குங்க….- அந்த ஒரே ஒரு வார்த்தையின் அழுத்தத்தில், அதை அவன் சொன்ன விதத்தில், அதன் பாவத்தில், அந்த உணர்ச்சி வெளிப்பாட்டில் செத்தேன் நான்.                           —-

—————————————-

(ushaadeepan@gmail.com)

 

 

Series Navigationஒத்திகைகள்“எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *