ஒளிவட்டம்

  

என் மௌனத்தின்

எல்லா திசைகளையும்

உன் அலகு கொத்திப்பார்க்கிறது

எதிலும் ஒட்டாமல்

உன் மனம்

விலகி விலகி ஓடுகிறது

எது குறித்துமான

உன் கேள்விகள்

கோணல் மாணலாய் நிற்கின்றன

வாசிப்பின் பக்கவிளைவாக

உன் தீர்ப்புகள்

பிறர் மனங்களைத்

தீப்பிடிக்க வைக்கின்றன

உன் பேச்சின் வெளிச்சத்தில்

நீ

இருளைத் தவணை முறையில்

தந்து கொண்டிருக்கிறாய்

நியாயங்களை அனுமதிக்காமல்

உதறித் தள்ளுகிறாய்

நீ ஏற்றத் துடிக்கும் தீபத்தில்

இன்னும்

எண்ணெய் வார்க்கப்படவில்லை

எனவே

உன் தலைக்குப் பின்னால்

நிற்பதாக நினைப்பது

கற்பனை ஒளிவட்டமே

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)