கடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

author
0 minutes, 1 second Read

MM Ali Akbar JPEG
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள்.

இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம். உசனார் தொரை என்பவரிடம் வேலை செய்யும் ரகீம், தனது மகன் தஸ்லீமின் உயர்கல்விக்காக பணவுதவி கேட்கின்றார். தன்னிடம் தொழில்பார்க்கும் ஒருவனின் மகன், பட்டணத்தில் போய் உயர்படிப்பு படிப்பதா என்ற இளக்காரம் உசனார் தொரைக்கு. எனவே தஸ்லீமையும் வயலில் வேலைக்கமர்த்திக்கொண்டால் நல்லது என மனிதாபிமானம் கொஞ்சமுமின்றி ரகீமிடம் கூறுகின்றார். ரகீமுக்கு அவமானம் ஒரு புறம். ஆற்றாமை மறுபுறம். எனவே பேசாமல் வந்துவிடுகிறார்கள். அதையறிந்த தஸ்லீமின் தாய், தான் இத்தனைக்காலம் சேமித்து வந்த கொஞ்சப் பணத்தைக் கொடுத்தும், இடியப்பம் விற்றும் மகனை பட்டணம் அனுப்புகின்றனர். அங்கு சென்ற தஸ்லீமுக்கு நல்லதொரு நண்பன் கிடைக்கின்றான். நண்பனின் தந்தையின் உதவியுடன்; படித்து தஸ்லீம் வக்கீல் ஆகின்றான்.

ஊரார் சொத்தை அநியாயமாக அபகரித்து வாழும் உசனாருக்கு எதிராக ஊரிலுள்ள ஒருவன் வழக்குத்தாக்கல் செய்கின்றான். அதை முறியடிக்க நல்லதொரு வக்கீலைத் தேடி பட்டணத்துக்கு வருகின்றார் உசனார். இனிமேல்தான் கதையின் உச்சகட்டம் நடைபெறுகிறது. ஒருகாலத்தில் உசனாரைத்தேடி தஸ்லீம் போனான். இப்போது தஸ்லீமைத் தேடி உசனார் வந்திருக்கிறார். இதுதான் இறைவனின் நியதி என்பதை இக்கதை எடுத்துணர்த்துகிறது. இன்றும் மனிதர்கள் இப்படித்தான். மற்றவர்களை மதிக்காமல், அவர்களை இளக்காரமாக எண்ணிக்கொண்டு கண்டபடி பேசி மனதை புண்ணாக்குவார்கள். காலத்தின் கோலத்தால் அவர்களிடமே கையேந்தும் நிலையை இறைவன் ஏற்படுத்தி விடுவான் என்பதற்கு இக்கதை நல்ல உதாரணம்.

இந்துஜா என்ற கதை காலத்துக்கு பொருத்தமான அம்சத்தை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இனத்தாலும், மதத்தாலும் வேறுபட்டு ஐக்கியம், சமாதானம் எல்லாவற்றையும் மறந்து வாழும் மனிதர்களுக்கு ஒரு படிப்பினையாகவும் இக்கதை இருப்பதை அவதானிக்கலாம்.

அமரதாச என்ற வக்கீலும், மஸாஹிர் என்ற வக்கீலும் நல்ல நண்பர்கள். அமரதாச மக்களுடன் மிகவும் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர். அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் கிடைக்கின்றன. மஸாஹிர் தம்பதியருக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. இதை வைத்தே கதை பின்னப்பட்டுள்ளது.

ஒருநாள் சகோதரரின் மரணத்துக்காக, அமரதாச மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் செல்கின்றார். வழியில் பெரியதொரு விபத்து ஏற்பட்டு கணவனும், மனைவியும் இறந்துவிட குழந்தை உயிரோடு இருக்கிறது. எதிர்பாராமல் அவ்வழியால் வந்த சுதாகரன் என்பவர் இதைக்கண்டு விடுகின்றார். அவர் குழந்தையை மாத்திரம் எடுத்துக்கொண்டு, எதுவும் தெரியாதவர்போல் சென்றுவிடுகின்றார். ஏனெனில் அவரும் குழந்தைப் பாக்கியம் அற்றவர். மற்ற குழந்தை மஸாஹிரிடம் கையளிக்கப்படுகிறது.

நாட்கள் நகர்ந்து இரு பிள்ளைகளும் உயர்தரம் எழுதி கலைப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றனர். இருவரில் ஒருவர் மஸாஹிரின் மகள் வாஜிதா. மற்றவள் சுதாகரனின் மகள் இந்துஜா. இருவரின் உருவ அமைப்பு எல்லோருக்கும் வியப்பளிக்க, மஸாஹிருக்கு ஏதோ இடிக்கிறது. சுதாகரனை அழைத்து விசாரிக்க அவரும் உண்மையை கூறுகின்றார். எப்படியோ பௌத்த மதப்பிள்ளைகள் மற்ற இரு மதங்களிலும் வாழ்கின்றனர். சாதி மத பேதம் எதுவுமே, எதற்குமே தடையில்லை என்பது இக்கதை சொல்ல வரும் படிப்பினை எனலாம்.

அறுந்த உறவு அறுந்ததுதான் என்ற சிறுகதையும் சமூகப் பிரச்சனை பற்றியே எடுத்தியம்புகிறது. மகன் சுக்ரிக்கு வந்த திருமண அழைப்பை பார்த்த தாய் ஆபிதாவுக்கு ஆச்சரியம். மணமகள் ஆபிதாவின் அண்ணனின் மகள். அண்ணா, அண்ணி, அம்மா எல்லோரையும் காதலின் பெயரால் பிரிந்து வந்தவர் ஆபிதா.

ஆபிதாவைக் கைப்பற்றிய ரஸ்மி ஆபிதாவின் மேல் அளவு கடந்த அன்புடையவர். ஆதலால் வீட்டாரின் நினைவு ஆபிதாவுக்கு மறந்துபோய் இதோ இப்போது திருமண அழைப்பை பார்த்ததும்தான் கடந்த கால ஞாபகங்கள் நினைவு வருகின்றன.

திருமண வீட்டிற்கு வெளியே நின்று தாய் உட்பட அனைவரையும் பார்த்துவரவென புறப்படுகின்றார் ஆபிதா. மணமகனின் தோழனாக தனது மகன் சுக்ரி இருப்பதைக்கண்டு ஆபிதாவுக்கு இதயத்தில் வலி. ஒருவேளை குடும்பம் பிரியாமல் இருந்திருந்தால் உண்மையான மாப்பிள்ளைக் கோலத்தில் தனது மகன் இருந்திருக்கக்கூடும் என நினைத்து வருத்தப்படுகின்றார். ஓடிச்சென்று சகோதரனிடம் பேச வேண்டும் என இதயம் துடித்தாலும், ஆழ்மனம் எச்சரிக்கிறது. கணவன் அறிந்தால் அவர் வருத்தப்படுவார் என்று உணர்ந்த ஆபிதா தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு ‘அறுந்த உறவு அறுந்ததுதான்’ என எண்ணுகின்றார்.

உண்மையில் உறவுகளை மறந்து, அவர்களின் சகவாசமே இல்லாமல் போய்விடின் அதை மீண்டும் உயிர்ப்பிப்பதென்பது இலகுவானதல்ல. அதனால்தான் உறவினரை பகைத்துக் கொள்ளக்கூடாது என்றும், ஒருவருடன் மூன்று நாட்களுக்கு மேல் கோபித்துக்கொள்ள வேண்டாம் என்றும் நம் மார்க்கம் நமக்கு கற்றுத்தருகிறது.

அவளின் விதி அப்படி என்ற கதை அழகான காதல் கதையாகும். மலீஹா என்ற பெண்ணைக் காதலிக்கிறார் அவ்வூருக்கு வந்த மாஸ்டர். அவரது பயிற்சிக் காலத்துக்காக இரண்டு வருடங்கள் பிரிந்திருக்கிறார். இடையிடையே தொடர்ந்த கடித உறவு, இடையில் தடைப்பட்டாலும் இப்போதைக்கு யாருக்கும் தெரியாமல் இருக்கட்டும் என எண்ணி தனது பயிற்சிக்காலம் முடிந்த பிறகு வந்து பார்க்கிறார் மாஸ்டர். தனது தாயாரின் மரணத்துக்குப் பின் மலீஹா சித்த சுவாதீனம் அற்றவளாக மாறியிருப்பதை அப்போதுதான் அறிகின்றார். கல்யாணத்துக்கு நாள் குறிக்க வந்த மாஸ்டருக்கு அவளைப் பார்த்ததும் கடுங் கவலை தோன்றுகிறது. என்ன செய்ய அவளின் விதி அப்படி என்றவாறு மலீஹா இருக்கும் திசை நோக்கி நகர்கிறார் மாஸ்டர்.

இவ்வாறான சமூக தளங்களில் நின்று எழுதும் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள் இன்னும் பல படைப்புக்களை இலக்கிய உலகுக்குத்தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் – கடைசி வேரின் ஈரம்
நூலாசிரியர் – எம்.எம். அலி அக்பர்
வெளியீடு – பேனா பப்ளிகேஷன்
விலை – 300 ரூபாய்

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *