கணக்கு

This entry is part 2 of 10 in the series 26 செப்டம்பர் 2021

ஜோதிர்லதா கிரிஜா

 

(18.3.2005 குங்குமம் இதழில் வந்தது. சேது-அலமி பப்ளிகேஷன்ஸ்-இன் “மாற்றம்” எனும் தொகுப்பில் உள்ளது.)

 

     சுமதியின் கலைந்த தலையையும் கழுவப்படாத முகத்தையும் பார்க்கப் பார்க்கப் பாராங்குசத்துக்குப் பாவமாக இருந்தது. நாள்தோறும் அதிகாலை ஐந்துக்கெல்லாம் எழுந்துவிடுகிறாள். மற்ற இரு மருமகள்களைப் போல் அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்து சம்பாதிக்கவில்லைதான்.  ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண். அவர் மூத்த மகன் காதலித்து மணந்த நல்ல பெண். அந்தக் குடும்பத்துள் நுழைந்த நாளிலிருந்து சமையற்கட்டே கதியாய்க் கிடக்கிறாள். திருமணம் ஆன புதிதில் சில மாதங்கள் வரையில்தான் அவளால் மண வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடிந்தது.  அப்போது அவர் மனைவி சம்பகம் உயிரோடு இருந்தாள். அவளும் மிக நல்லவள். எந்த விதமான மாமியார்த்தனமும் இல்லாதவள். மருமகளை மகளாய் நடத்தியவள்.

     சம்பகம் இருந்த போதே அவருடைய மற்ற இரண்டு இளைய மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர்களுடையது கூட்டுக் குடும்பம். வீட்டில் ஒரு சமையற்காரியாகவும், வேலைக்காரியாகவும் – கிட்டத்தட்ட ஓர் எடுபிடி போன்றும் – கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்டு எப்போதும் ஆவன செய்யச் சுமதி இருந்ததால், இளைய மருமகள்கள் இருவரும் அந்த கூட்டுக் குடும்பத்தைக் குலைக்க அப்போதைக்கு விரும்பவில்லை என்பது  பாராங்குசம் அவர்களுடைய நடவடிக்கைகளிலிருந்து என்றோ புரிந்துகொண்டு விட்டிருந்த உண்மை.  இரண்டு இளைய மருமகள்களும் நிரம்பவும் ஒற்றுமை. படிக்காத சுமதி என்றாலே இருவருக்கும் இளப்பம்தான்.

          பாராங்குசத்துக்கு அவ்வப்போது காது அடைத்துக்கொள்ளும். இதனால் அவருக்குக் காது எப்போதுமே சரியாய்க் கேட்பதில்லை என்பதாய் அந்த இரண்டு பெண்களுக்கும் ஒரு நினைப்பு. இதனால், அவர் அருகில் இருப்பதைப் பொருள்படுத்தாமல், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுவார்கள். அவரும் தமது முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் யாருக்கு வந்த விருந்தோ என்கிற முறையில் உண்மையாகவே காது கேளாதவருக்கு உரிய மந்தத்தனத்துடன் உட்கார்ந்திருப்பார்.

          சுமதியைக் கிண்டல் செய்து அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்கும் போதெல்லாம் அவருக்கு எரியும். அவர் ஓர் ஆங்கிலோ-இந்தியக் கம்பெனியில் பியூனாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவராதலால், ஆங்கிலத்தில் சரளமாய்ப் பேச வராவிட்டாலும், என்ன பேசினாலும் நன்றாய்ப் புரிந்துகொள்ளக் கூடியவர். ஓரளவுக்கு உடைந்த ஆங்கிலத்தில் பேசவும் வல்லவர். எனவே, காது கேளாதார் போன்றும், ஆங்கிலம் அறியாதவர் போன்றும் பாவனை செய்து அவ்விரு பெண்களின் வண்டவாளங்களையும் அறிந்து வைத்திருந்தார்.

          அவருடைய மூத்த மகன் குடும்பத்து வறுமையை உத்தேசித்துப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குப் போய்விட்டான். அவன் மிக இளைய வயதிலேயே சம்பாதிக்கத் தொடங்கிவிட்டதால்தான் மற்ற இரண்டு பிள்ளைகளும் படிப்பை முடிக்க முடிந்தது. தங்கள் மைத்துனர் ஒன்பது வகுப்புகளுக்கு மேல் தாண்டாதவர் என்பது பற்றிய இளக்காரமும் அந்தப் பெண்களின் பேச்சில் அவ்வப்போது அடிபடுவதுண்டு. இருவரும் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் முகம் கழுவிக்கொண்டு நாற்காலிகளில் அமர்வதும், சுமதி அவர்களுக்குச் சிற்றுண்டியும் காப்பியும் கொண்டுவந்து கொடுப்பதும் அன்றாடம் நடக்கும் காட்சிகள். இரண்டு பெண்களுக்கும் தலைக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அவர்களால் விளையும் அதிகப்படியான வேலைகளும் சுமதியின் தலையில்தான் விழுந்து கொண்டிருந்தன. குழந்தைக்கு உடம்புக்கு வந்தாலும் இருவரும் விடுப்பு எடுக்க மாட்டார்கள். ஆக மொத்தம், சுருக்கமாய்ச் சொன்னால், சுமதிக்கு அந்த வீட்டில் ஓய்வே கிடையாது என்றே சோல்லிவிடலாம். தம் மனைவி உயிருடன் இருந்திருந்தால் சுமதி இந்த அளவுக்குத் தேய்ந்து போயிருந்திருக்க மாட்டாள் என்று அவருக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு.

          அவளுக்கும் ஒரு பிள்ளைக் குழந்தை இருந்தது. அதைக் கவனித்ததை விடவும் ஓரகத்திகளின் குழந்தைகளை அவள் கவனிக்க நேர்ந்ததுதான் அதிகம். கள்ளம் இல்லாத சுமதி தான் ஓர் எடுபிடி மாதிரி நடத்தப்பட்டு வந்ததி உணர்ந்ததாய்க்கூடப் பாராங்குசத்துக்குத் தோன்றியதில்லை.

     இப்படியே தொடர்ந்தால், அவள் தலையில் இரண்டு பெண்களும் மிளகாய் அரைப்பார்கள் என்று எண்ணி அவர் கசந்தார். எனவே தம் மூத்த மருமகளுக்காகவும் மகனுக்காகவும் பரிந்து, என்ன செய்து அந்தப் பெண்களை மட்டம் தட்டலாம் – அப்படியே பெண்டாட்டிமார்களைக் கண்டுகொள்ளாதிருகும் இளைய மகன்களுக்கும் எப்படிப் பாடம் கற்பிக்கலாம் – என்பதே அவரது அண்மைக்காலச் சிந்தனையாக இருந்து வந்தது.

     அதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே வந்தது. ஒரு நாள் மாலையில் அலுவலகத்திலிருந்து முதலில் வீடு திரும்பிய இரண்டாம் மருமகள் விமலா, “என்னது! வீட்டில ஒரு மாதிரி வாடை வீசுது!” என்றவாறே நாற்காலியில் உட்கார்ந்தாள். மூக்கை விரித்து, விரித்து எங்கிருந்து வாடை வந்து கொண்டிருந்தது என்பதை அவள் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்த நேரத்தில், அடுத்தவள் கண்ணகியும் வந்து, காலணிகளைக் கழற்றும் போதே, “அக்கா! என்ன நாத்தம்? … கொஞ்சம் வந்து என்னன்னு பாருங்க!” என்று சுமதியை அதிகாரமாய் இரைந்து அழைத்தாள்.

     அதற்கென்றே காத்துக்கொண்டிருந்த பாராங்குசம், “சுமதி! நீ வராதேம்மா. இவங்களுக்குக் காப்பி மட்டும் கொண்டுட்டு வா…” என்று குரல் கொடுத்தார். இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர்  பார்த்துக்கொண்டார்கள்.

     பின்னர், பாராங்குசம், “அம்மா, கண்ணகி! உன்னோட ரூம்லேர்ந்துதான் வாடை வருது. என்னன்னு போய் நீயே பாரு. இதுக்கு எதுக்கு சுமதியைக் கூப்பிட்றே? அது, பாவம், இருபத்துநாலு மணி நேரமும் அல்லாடிக்கிட்டிருக்குது …” என்றார். குரலில்; அந்தப் பெண்கள் அதுகாறும் அறிந்தே இராத கடுமை தெறித்தது.

      ‘”அப்ப? என் ரூம்லேருந்து வாடை வர்றதைக் கண்டுபிடிச்ச பெறகும் என்ன, ஏதுன்னு பாக்காம உக்காந்திருக்கீங்களா?”

      “ஒரு பெரிய பல்லி செத்துக் கெடக்கும்மா. ஒரு ரெண்டு நிமிசத்துக்கு முந்திதான் பாத்தேன். நீயே போய் அள்ளிப் போட்டுட்டு ஃபினாயில் ஊத்திக் கழுவிச் சுத்தம் பண்ணு. இதுக்கெல்லாம் சுமதியைக் கூப்பிட்டு வேலை வாங்காதே..”

     இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். கண்ணகியின் முகம் சிறுத்து விட்டிருந்தது.

      “ஏன்? அக்கா வீட்டில சும்மாத்தானே இருக்குது? எங்களை மாதிரி பஸ்ல இடிபட்டு ஆஃபீசுக்குப் போய் உழைச்சுட்டா களைச்சுப் போய் வருது? என்னமோ பெரிசா பரிஞ்சுக்கிட்டு வர்றீங்களே?”

      பாராங்குசத்தின் மீசை ஆடியது. பொங்கிய சினத்தை அடக்கிக்கொண்டு பேசினார்: “நானும் ஒர் ஆஃபீசுல வேலை பண்ணினவன்  தாம்மா. ஆஃபீஸ் வேலையைக் காட்டிலும் வீட்டு வேலைதான் கஷ்டம். நான் ஒரு பியூனாத்தான் வேலை செஞ்சேன்னாலும், கிளார்க்குங்க வேலைச் சுமை பத்தியெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்மா.  நேர்ல பாத்தவன் நான். ஆஃபீஸ்ல கிளர்க்குங்களுக்குக் கிடைக்கிற ரெஸ்ட்டு ஹவுஸ்  ஒய்ஃப், ஹவுஸ் ஒய்ஃப்ன்றீங்களே, அவங்களுக்குக் கிடைக்காதும்மா. அதுலேயும் ஒரு இளிச்சவாயி ஆப்புட்டா ஏமாத்துறதுன்னு வெச்சுக்கிட்டிருக்குற உங்களை மாதிரி ஓரகத்திங்க இருந்தா, அம்புட்டுத்தான்.  நானும் பேச வேணாம், பேச வேணாம்னு பொறுத்துப் பொறுத்துப் பாத்துக்கிட்டிருக்கேன், அது, பாவம், வாயில்லாப் பூச்சி. … ஆமா? உங்க பசங்களுக்கு மேலுக்குச் சொகமில்லாம போறப்ப கூட, சுமதி பாத்துப்பான்னு ஆஃபீசுக்குப் போய்ர்றீங்களே, அது என்ன நியாயம்? என் மூத்த மகனுக்கு சம்பாத்தியம் குறைச்சல்தான். ஆனா, அவன் படிப்பை நிப்பாட்டிட்டு வேலைக்குப் போனதாலதான் உங்க புருசனுங்க ரெண்டு பேரும் படிக்க முடிஞ்சிச்சு.  இனி இந்த வீட்டில சுமதி, அவ புருசன், நானு ஆக மூணு பேரும் இருக்கிறதாயில்லே.  நீங்களே சமாளிங்க. அப்பதான் சுமதியோட அருமை உங்களுக்குத் தெரியும் …”

     இரண்டு பெண்களும் மறுபடியும் ஒரு முறை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

      “கெழவன் ஏதோ பயமுறுத்தறான்னு நினைக்காதீங்க. ஒரு வாரமா சுமதி கிட்டவும் அவ புருசன் கிட்டவும் எடுத்துச் சொல்லிச் சம்மதிக்க வெச்சிருக்கேன். சின்னதா ஒரு வீடும் பாத்தாச்சு… இன்னொண்ணு சொல்லட்டுமா? இது என் சொந்த வீடு! உங்க வீட்டுக்காரங்க உசந்த படிப்புப் படிக்கணும்னுதான் என் மூத்த மகன் படிப்பைப் பாதியில நிப்பாட்டிட்டுச் சம்பாதிக்கப் போனான். அதனாலதான் அவன் இன்னைக்கு நல்ல வேலையில இல்லே. அவன் அப்படி விட்டுக் குடுத்ததுக்குப் பிரதியா இந்த வீட்டை நான் அவன் பேர்லதான் எழுதி வெச்சிருக்குறேன். இது என்னோட சொந்த சம்பாத்தியம்.. அவனுக்கு மாசாமாசம் தலைக்கு ஆயிரம் ரூவா மேனிக்கு ரெண்டு பேரும் வாடகை குடுத்துடுங்க. என்ன? தெரிஞ்சிச்சா? இல்லே, வேற வீடு பாத்துக்கிட்டுக் கெளம்புங்க!”

     இரண்டு பெண்களும் வாயடைத்துப் போனார்கள். பெரியவர் நகர்ந்தார்.

      “ …  ‘அக்கா! என்ன நாத்தமாம்! கொஞ்சம் வந்து என்னன்னு பாருங்க’வாம்! அப்ப, இது அவ வீடுன்னு ஒத்துக்கிறீங்கன்னுதானே அர்த்தம்? …படிச்ச பொண்ணுங்களா இதுங்க? நியாயம் தெரியாததுங்க. என்னத்தைப் படிச்சுக் கிழிச்சிங்களோ! …” என்று அவர் முனகியது அவர்கள் செவிகளில் தெளிவாகவே விழுந்தது.

 

      கண்ணகி விளக்குமாறும் கையுமாகத் தன்னறைக்குப் போனாள்.

…….

 

 

 

 

Series Navigationதேர்வுஇந்தியா இருமுறை எரிசக்தி இணைப்பில் [Hybrid Energy Integrated System] மின்சக்தி பெருக்கத் திட்டங்கள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *