கண்ணாமூச்சி

 

 
நா. வெங்கடேசன்
 
பார்க்கும் ஆவலில் வாசல் வரை வந்து
எண்ணமுந்த உன் வீட்டுக் கதவைத் தட்டும் சமயம்,
எவ்வித சலனமுமின்றி அமைதியாய் அப்புறம் நீ…..
ஏக்கமுடன் திரும்பும் நான்
இன்னுமொரு நாள், இன்னுமொரு நேரமென்று
என்னையே தேற்றிக் கொள்வேன்.
எண்ணப்பதிவுகளை கவிதையென்றெண்ணி
ஏமார்ந்திருந்த என் நாட்குறிப்புபோல்
நிம்மதி நித்திரையில்
நீயுடனில்லாத வெறுமை
பற்றிக்கொள்வானேன் விழித்தவுடன்.
பிரிவுதான் ஏது உன்னிடமிருந்து
வெறும் நினைவேயாம் எப்பொழுதுமுன்.
நினைப்பவன் யானே நினைவுகளும் யானே
வாழ்வும் யானே வளமும் யானே
காண்பான் யானன்றி காட்சிகளேது
நினைப்பவன் யானன்றி நினைவுகளேது.
நானே நீ நீயே நான்.
ஒரு கிளைவிட்டு இன்னுமோர் கிளை
தாவும் என் மனக்கவி 
இடைவெளி இருப்பை பொருட்டாது,
என் கவனம் உன்னில்/ உன் நினைப்பில்,
இருப்பில் அல்ல – இடைவெளியெல்லாம் நீ.
புற்றீசலாய் உன் நினைவுகள்
என்னுள் பொங்கித் ததும்பும்போது
புற்றின் மூலத்தை நாடுவது எங்ஙனம்?
புற்றின் மூலம் நாடி ஈசல்களை ஓட்டவேண்டுமா?
என் முகத்தைக் காக்க இதோ என் கைகள்
தன்னிச்சையாய் – உடுக்கை இழந்தவன் கைபோல்.
நாடகம் பார்த்துக்கொண்டே நடிக்கவும் வேண்டுமோ?
நீயொரு மட்கடம்
நானொரு மட்கடம்
நமக்குள்ளிருக்கும் ஆகாயம் ஒன்றே, 
பகுக்கப்பட்டாற்போல் தோன்றினாலும்.
நீயொரு மலக்குழி
நானொரு மலக்குழி
நமக்குள்ளிருக்கும் ஸாக்‌ஷி ஒன்றே,
பகுக்கப்பட்டாற்போல் தோன்றினாலும்.
நீயற்ற வெற்றிடம் வெறுமையைத் தருவது
ஏதோ மனோமயக் கல்பிதமென்று
மயான வைராக்கியத்துடன் ஏற்றொழித்தாலும்
இதய வலியை கணத்த என் கண்ணிமைகள் சொல்லும்
நித்திரை நீங்கியவுடன்.
வெறுமையில்லை பிரிவுமில்லை
நீ என்னுள்ளே நான் உன்னுள்ளே.
வெளியிலிருக்கும் உன் ஸ்தூலவுரு பற்றி
எனக்கென்ன அக்கறை.
அதுபோல் உனக்கென்ன அக்கறை
 என் ஸ்தூலவுருமேல்.
நிவிருத்தி செய்வோமாக!
உள்ளெது வெளியெது
ஒன்றேயான நம் ஸுஸ்வரூபத்தில்.
பிரிவு மனோமய கல்பிதமே!
குடும்ப நீதிமன்றத்தில் முடியுமா நம் ஒழிமுறி??
மயானத்தில்?? பின் வரவிருக்கும் ஜென்மாந்திர கல்பங்களில்??
நாணேற்றத் தெரியாயென்னை
உன் சுயம்வரமழைத்ததேனோ??
இந்திரிய நிமித்தமாய் கூடி வாழ்ந்தோம் ஒரே கூரையின் கீழ்
உணர்வனுபவமாய் இருந்தோமா??
இரண்டற்ற ஏகமாய்?
நான்-நீ அற்று அகண்டேக ரஸமாய்?
அவிச்சின்னமாய்? ஓரிருப்பாய்?
நன்றாய் போட்டோம் நாய் வேஷம்! குரைத்தோமா சரியாய்? 
தன்னிலே தானாய், ஸ்வாபாவிகமாய் இருந்தோமா?
ஏதோ சித்தம் போக்கு சிவன் போக்கு நம் வாழ்க்கை
நீ சொன்னதுதான் சரி, ஏதோ இத்தனை வருடங்கள் தாங்கினதே பெரிசு!
தமரும் அமரும் மனையும் இனிய
தனமும் அரசும் அயலாக
தருக்கன் மறலி முருகு கயிறு தலையை வளைய எறியாதே…..
இன்னும் நாடகம் முடிந்தபாடில்லை.
நாமே நம் நாடகத்தை ஒத்திகை பார்க்கிறோம், பார்த்துக்கொண்டே நடிக்கவும் செய்கிறோம்.
நாம் சேர்ந்திருந்த கணங்கள்….
சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை…..
தோன்றி மறைந்த கனவாய், கானலோடையாய்,
நிழலாய்க் கரைந்து விரிகிறது காலவெளியில்…..
என்னுள்ளே விரிந்த நீ
என்னிலுமன்னியமா??
உன்னிலிருந்து விரிந்த நான்
உன்னிலும் வேறா??
பேஷ்! பேஷ்! நல்ல கற்பனைதான் நம் பிரிவு.
 
நா. வெங்கடேசன்
பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா
Series Navigationஇன்னொரு புளிய மரத்தின் கதைஉள்ளங்கையில் உலகம் – கவிதை