கண்ணீரில் எழுதுகிறேன்..

-முடவன் குட்டி

aஇறைவன் பெரியவன்.. அவனே மகா பெரியவன்..
கலிமாவுடன்
உயிர் மூச்சு குழைய
அம்மா..
காதில் நீ ஊதிய சொல் ஒன்று
எனது பெயராகியபோது
சுற்றமும் நட்பும் சூழ இருந்தது…
யாரையோ தேடுவதாய்
என் கண்ணில் கண்ட நீ
சொன்னாய்
’அப்பா நாளை வருவார் மகளே’ என.

மலர்ந்தேன்… சிரித்தேன்..
தவழ்ந்தேன்…. நடந்தேன்..
தந்தையே….
அள்ளி அணைத்தும்
ஆரத்தழுவியும்
கொஞ்சி மகிழ்ந்தும்
பேசிச் சிரித்துமாய்..
உங்கள் நினைவுகளில்
நிறைந்து தழும்பாது
ஏழையானதே என் பிள்ளைப் பருவம் !

வகுப்பறைக் கல்வி
எழுத்தைத் தான் அறிவிக்கும்
மாதா- பிதா இருவருமே மூத்த ஆசானாய்
குடும்ப வீட்டுக் குரு குல நிழலில்
சிறுவயது பெறும் கல்வியன்றோ

வாழ்வு வழி நெடுக உறுதுணையாய் வரும்..?
என் சிறுவயதை
தாயிடம் மட்டும் வளரத் தந்து
ஏன் சென்றீர் என் தந்தையே..?

ஒழியாத பரீட்சை… புரியாத கணக்கு….
செய்யாத வீட்டுப் பாடம்..
உறக்கத்திலும் அடி வயிற்றுள் பயம் சுருள
’அப்ப்பா…’ –
வாய் அரற்றும் அனிச்சையாய்.
எங்கு சென்றீர் என் தந்தையே..?

இரண்டாண்டுகளில் சில நாள்
உங்கள் விடுமுறை வருகை
வீடும் உறவும்
பாசத்துள் வைத்துப் பரிவு செய்யும்:
மகிழ்ந்து கொண்டாடும்:
நானோ..
நல்ல மகளாய் உங்களிடம் நடந்து கொள்ள
அம்மா தந்த பயிற்சியில்
தோற்றுப் போவேனோ –பயத்தில்
உயிர் கலங்குவேன்.

”இவ்வளவு சீக்கிரம் சமஞ்சுட்டாளே’
மனஞ் சுளித்தனர் உற்றார்
அம்மாவின் சிறு மவுனமோ
புறக்கணிப்பின் கூர் வாளாய்
உள் இறங்கும்.
கசப்பு… கரிப்பு… கோபம்… குழப்பம்..
ஒருசேர மூண்டெழுந்து உயிர் கவ்வும்.
சாய் நிழல் தேடி
பரிவானதோர் பார்வைக்குத் தவித்திருதேன்
எங்கு சென்றீர் என் தந்தையே..?

இரவு..தேய் நிலா..
இலை..மரம்..பறவையெலாம்
அரவமற்று ஆழ்ந்துறங்க
எங்கோ தொலைவில்
ஒலித்தாற் போல்
அழு குரலொன்று தேம்பித் தேம்பி
காதில் விழும்:

அழுகிறாளா அம்மா..?

எட்டிப் பார்த்த காற்று-
மெல்ல நழுவும்:
தந்தையே
உங்களிடமா வந்தது..?
பிரிவால் உலர்ந்த
அன்னை நெஞ்சை சொல்வதற்கு.?

தந்தை நீங்கிய ஆதார நினைவுகள்
சதா நெஞ்சை அழுத்த
ஓர் குறை மனுஷியாய்
நாளைய உலகை வெல்வேனா..?

அருமைத் தந்தையே…

கொண்டவனைப் பிரிந்து
வாழாமல்வாழ்ந்த என்
தாய் கொண்ட கொடுந் துயர்
நான் பெறலும் சம்மதமோ..?

அருகே தந்தையின்றி
கடன்பட்ட என் நெஞ்சை
சீதனமாய் எனது மகள்
பெறத் தருதல் முறையாமோ..?

கேளாமலே அள்ளி தந்த தந்தையே
இதோ கண்ணீரால் கேட்கிறேன்:

தனியே வாடவிட்டு
வெளி நாடு போகும் மாப்பிள்ளை
எனக்கு வேண்டாம்:

குறைவான வருமானம் வந்தாலும்
கூட உடனிருக்கும்
உள்ளூர் மாப்பிள்ளையே
எனக்குப் போதும்.

****** ****** *******

Series Navigationசென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்சிறை