கண்ணீர் அஞ்சலி !

கண்ணீர் அஞ்சலிச்
சுவரொட்டியில்
விஜயலட்சுமி புன்னகையுடன் …

முதலில் அவர்
யாரோவென நினைத்தார்
இடது புருவ மத்தியில்
இருந்த தழும்பு
ஐம்பது வருட நினைவுகளை
வரிசைப்படுத்த ஆரம்பித்தது

அவரும் அவளும்
மனமொத்த காதலில்
ஒவ்வொரு கல்லையும்
பார்த்துப் பார்த்துக்
கற்பனைக் கோட்டையை
உருவாக்கினார்கள்

அவள் கண்களில்
அவரைப் பற்றிய
ஆசைகள் மிதந்துகொண்டிருக்கும்
அவர் சொற்களில் அவர்களது
எதிர்காலச் சம்பவங்கள்
வரிசைப்பட்டுக் கொண்டே இருக்கும்
சங்கீதத்தின்
மகிழ்ச்சியான எல்லா ராகங்களும்
அவர்கள் உரையாடலில்
வந்து போகும்

மலர்களின் மென்மையை
அவள்
மொத்தமாகத் தனதாக்கி இருந்தாள்

சுவாரஸ்யமான
காதல் பாதையில்
அவர்கள்
மௌனகீதம் பாடினர்

ரகசிய உறவு
மெல்ல மெல்லப்
புகைய ஆரம்பித்தது

அவளுக்கு அப்பாவின்
அடி உதை
தோசைத்திருப்பிச் சூடு …

பெருந்தீயின் ஜுவாலை
அவள் மனத்திலும்
உடலிலும்
குபீரெனப் பாய்ந்தது

இருநூறு கிலோ மீட்டர் தாண்டி
அவளுக்கு மணம் முடித்தார்கள்

தாய் வீடு வரும்போது
ஒரு முறையேனும்
அவள் முகம் பார்க்க
அவர் விரும்பியது
நடக்கவேயில்லை

கண்ணீர் அஞ்சலிச்
சுவரொட்டியின் முன்
இப்போது கண்ணீர்த்துளிகள்
அவர் சட்டையை நனைக்க
முகாரி ராகம்
மனத்தில் இழைய ஆரம்பித்தது !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Series Navigationவாடிக்கை“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு