கதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

பதவி இறக்கப்பட்ட முன்னாள் கவர்னர் கியோம் எபேர் தாய் நாடு திரும்புகிறார். போனவர் எத்தனை நாளைக்குதான் மதுபாட்டில்களை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருப்பது, உணவுண்ண உட்கார்ந்தால் சமையல்காரன் ம்ஸியே முதலில் மதாமை கவனித்து விட்டு வருகிறேன் என்கிறான்; ஒப்பேராவுக்கு போகும் மதாம் எபேரா சாரட்டில் நாய்க்கும் தனக்கும் மட்டுமே இடமிருக்கிறது நீங்கள் இருந்து வீட்டைபார்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள்; மாளிகைப் பணிப்பெண்கள்கூட தொட்டு பேசாதே என்கிறார்கள். ஆக ஏதாவது செய்தாக வேண்டும்; கொடுக்க வேண்டியதை கொடுத்து பிடிக்கவேண்டியவர்களை பிடித்து திரும்பவும் புதுசேரிக்குப் கவர்னராய் பொறுபேற்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டார். அன்று முதல் தினந்தோறும் புதுச்சேரி திரும்புவதற்கான முயற்சிகளில் இறங்கினார். மன்னரின் அமைச்சர்களை சென்று சந்தித்தார். மன்னரின் மனைவி துணைவிக¨ளை போய் பார்த்தார், அவரின் மகளைப் பார்த்தார், மகனைபார்த்தார். மன்னரின் வளர்ப்பு பூனையையும் நாயையும் தவிர வாய் திறந்து இவருக்கு யார் யாரெல்லாம் சிபாரிசு செய்ய முடியுமோ அவர்களிடமெல்லாம் முறையிட்டார். தம்மை கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமுமில்லை என்றார். தான் மாசற்றவரென்றும் தன் பேரில் கொண்டுவரப்பட குற்றசாட்டுகள் ஆதாரமற்றவையென்றும் ஓலமிட்டார்.

மன்னருக்கு எபேர் பிரச்சினை பெரும் பிரச்சினையாகிவிட்டது. எங்கே போனாலும் எதை தொட்டாலும் எபேர் பேசுவதுபோல இருக்கிறது. மனைவி கூட எபேர் பிரச்சினையை தீர்த்துவிட்டு என்னைத் தொடுங்கள் என்கிறாள் -மன்னர் மனைவி எபேருக்கு உறவு முறையாக வேண்டும். எபேருக்கு மக்கள் காவலர் என்ற புதுபட்டத்தைக்கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பி வைத்த பிரெஞ்சு முடியாட்சி அவர் மகனையும் புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் மேல்ஆலோசனை கூட்டத்தின் அங்கத்தினராக நியமித்தது. செத்த பிணம் பிழைத்தெழுந்தால் காலை எட்டிவைத்து நடக்குமாம் அப்படித்தான் அமைந்தது தந்தைக்கும் மகனுக்கும் வந்த வாழ்வு.

தந்தையும் மகனும் புதுச்சேரிக்கு வந்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்தன. தந்தை எபேரைக் காட்டிலும் மகன் எபேருக்கு கூடுதலாகவே புதுச்சேரியின் நிலமை புரிந்தது. முத்தியப்ப முதலியார், தம்மைத் தரகர் பதவியிலிருந்து எபேர் துரத்தினார் என்பதைக்காட்டிலும் நைநியப்பிள்ளை தமது உத்தியோகத்தைப் பறித்துக்கொண்டு நன்கு சம்பாதிக்கிறார் என்பது உறுத்தலாக இருந்தது. பிரான்சிலிருந்து வந்திறங்கிய எபேர் மகனை முத்தியப்ப முதலியார் சதித்தித்தார்.

– துரை உங்கள் தந்தையார் முதலில் நைநியப்பிள்ளை நன்கு கொழுத்துவிட்டான். உங்கள் தயவால் முன்னுக்கு வந்தவன், கேட்பதை கேளுங்கள் அவன் கொடுத்தாக வேண்டும்- என்றார்.

இரவுமுழுக்க உறக்கமில்லாமல் தவித்த எபேர் மகன் மறுநாள் காலை நைநியப்பிள்ளையைக் கூப்பிட்டனுப்பினார். அவரும் வந்தார்.

– என்ன நைநியப்பிள்ளை சௌக்கியமா?

– ஏதோ எஜமான்கள் தயவுலே குடிகள் நாங்கள் பிழைக்கிறோம்.

– நான் கேள்விபட்டது அப்படி இல்லையே. உம்மைப் பற்றி நிறைய பிராது வந்திருக்கிறது. என் தகப்பனார் உமக்குக்கொடுத்த சகல சுதந்திரங்களையும் நீர் தவறாக பயன்படுத்தி சம்பாதித்ததாகப் புதுச்சேரி முழுக்க பேச்சாமே.

– துரையின் காதுக்கு யாரோ தவறான செய்தியைக் கூறியிருக்கிறார்கள்..

– நான் சொல்வதைக்கேளும். என் தகப்பனார் உமக்குக்கொடுத்த தரகு வேலையில் 40000 வராகன் சம்பாதித்திருக்கிறீர் என்று கேள்வி, அதில் 10000 வராகன்களை என் தகப்பனாருக்குக் கொடுக்கவேண்டும்

– 10000 வராகனுக்கு நான் எங்குபோவேன்.

– சரி 5000 மாவது கொடுங்கள்.

– துரை மன்னிக்கவேண்டும். நீங்கள் கேட்கும் தொகையை நான் கொடுக்க சம்மதித்தால் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று பொருள். உங்கள் பணத்தில் நீங்கள் நினைப்பதுபோல இலாபமொன்றும் பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

– பரவாயில்லை 3000 மாவது கொடுங்கள், உங்களை மன்னிக்கிறேன்.

– ஏற்கனவே கூறிய பதில்தான். உங்கள் தகப்பனாரை நான் ஏமாற்றவில்லை. எனவே என்னால் எதுவும் கொடுப்பதற்கில்லை.

மகன் எபேர் ¨நியப்பிள்ளைக்கு எதிரிகள் இருக்கிறார்களா என்று தேடினார். நைநியப்பிள்ளைமேல் புகார்தர அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய புகார்களின் அடிப்படையில் நைநியப்பிள்ளை கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டார். குற்றவாளி நைநியப்பிள்ள வழக்கு நடந்தது. அவர் குற்றங்களை முழுவதுமாக மறுத்தார்.

1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பபடவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.

அது தவிர நைநியப்பிள்ளைக்குப் பதிலாக, தரகர் முத்தியப்ப முதலியார் மகன் கனகராயமுதலியார் தரகராய் நியமிக்கப்பட்டார்.

1717ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் நைநியப்பிள்ளை சிறையிலேயே இறந்தார். நைநியபிள்ளைக்கு மூன்று மகன்கள்குருவப்பா, முத்தப்பா, வேங்கடாசலம். இவர்களில் மூத்தவர் குருவப்பாபிள்ளை. தமது தந்தைக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அரசாங்கம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறதென நினைத்தார்.

“தம் தகப்பனார் மாசற்றவரென்றும், அநியாயமாய் தண்டிக்கப்பட்டாரென்றும், அவருக்கு விரோதமாய் வாக்கு மூலம் கொடுத்த சாட்சிகாரர்களெல்லாம் பலவந்தத்தாலும், பயத்தினாலும் அப்படி செய்தார்களென்றும், ஆகையால் நைநியப்பிள்ளை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டுமென்றும்” பிரான்சு மன்னருக்கு எழுதினார். எழுதியதோடு அல்லாமல் அரசர் ஆலோசனை சபையிடம் நேரில் சென்று முறையிடுவது, தமது வழக்கை எடுத்துக்கூற பிரான்சில் ஒரு பிரதிநிதியை ஏற்பாடு செய்வதென்று முடிவு செய்து அதன்படி பாரீஸ¤க்கு நேரில் செல்கிறார்.

(தொடரும்)

Series Navigationபேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா