கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

நாகரத்தினம் கிருஷ்ணா

எதிர்பார்த்தைதைப்போலவே சாலைமுழுவதும் பனிமூடியும் பனிஉறைந்தும் வாகனஓட்டத்தை கடுமையாக்கியிருந்தது. வாகன ஓட்டியின் சாமர்த்தியத்தாலேதான் விபத்தின்றி கடைசியில் ஸ்டாலின் இருப்பிடத்தை அடைய முடிந்தது. அங்கே போனபோதுதான் தெரிந்தது, கட்சியின் முக்கிய தலைவர்களின் வாகனங்கள் அனைத்தும் வரிசை கட்டி நின்றன. நிகிடா குருஷ்சேவ்க்கு புரிந்துகொண்டார். ஏதோ முக்கிய ஆலோசனைக்காகவே தலைவர்கள் அனைவரையும் கட்சியின் முதன்மைச் செயலர் அங்கே வரவழைத்திருக்கவேண்டுமென்பது அவரது ஊகம். அது நியாயமானதுங்கூட. தலைவர்கள் வரிசையில் குருஷ்சேவுக்கான அப்போதைய இடம் அநேகமாக ஏழோ எட்டோ, அப்படிப்பார்த்தால் இவருக்கு முன்பாக அழைக்கவேண்டியவர்களை அழைத்த பின்புதான் இவரைத் தேடியிருப்பார்கள். எனினும் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்கிற அடையாளம் இருக்கிறது, எனவே ஸ்டாலின் அழைத்திருக்கிறார். அவர் வா என்றால் வந்து அடிமைபோல நிற்கவேண்டிய தலைவர். அவ்வகையில் ஸ்டாலினிடத்தில் எல்லோருக்கும் ஒரே மரியாதைதான் என்பதும் குருஷ் சேவுக்குத்தெரியும். தனியே வந்திருந்தால் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்குமா என்ற சஞ்சலமிருக்கும், இப்போது இவருக்கு முன்னால் ஐந்தாறுதலைகள் இருக்கின்றன. நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. ஓர்லோ·ப் மன்னர் (Orloff) பரம்பரைக்குச் சொந்தமான சிறியதொரு அரன்மணை அது. சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவர். மின்சாரம்பாய்ச்சிய இரட்டிப்பு முட்கம்பிகளின் பாதுகாப்பில் அச்சுவர்கள் இருந்தன. மிகப்பிரகாசமான ஒளிவெள்ளம் அவ்வப்போது சுவர்களைக் கண்காணித்தன. பல்லி ஊர்ந்தாலும் தெரிந்துவிடும். தப்ப முடியாது. காரிலிருந்து இறங்கியவுடனே யார் யாரெல்லாம் அழைக்கப்ட்டிருந்தார்கள் என்பதை குருஷ்சேவ் விளங்கிக்கொண்டார். பேரியா, மொல்ட்டோவ், வொர்ஷிலோவ், பூல்கானின், மாலென்க்கோவ், ககனோவிச் என்று சகாக்கள் வந்திருந்தனர். எந்திரதுப்பாக்கிகளுடன் கொக்காசிய (Caucasiens) வீரர்களின் சிறப்பு காவற்படை ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருந்தனர். உள்ளே நுழையும் தலைவர்கள்கூட அவர்கள் தலைவனின் சோதனைக்கு உட்பட்டே கோட்டைக்குள் நுழைய முடியும். ஸ்டாலின் தமது காவலுக்கு அவர்களைத்தவிர வேறு படையினரை நம்புவதில்லை.

” ஸ்டாலின் நண்பர்களைக்கூட சந்தேகப்படுவார். எங்களில் யாராவது ஒருவர் ஆயுதத்துடன் உள்ளே நுழைந்து அவரைக்கொல்லக்கூடும் என்ற சந்தேகம் அவரிடம்இருந்தது, எங்கே அவரால் என்ன ஆபத்தை சந்திக்கப்போகிறோமோ என நாங்கள் அச்சத்தில் வாழ்ந்ததுபோக வாழ்வின் கடைசிநாட்களில் அவரே அவரது வாழ்க்கைமுறைக்கு பலியானதுதான் விந்தையிலும் விந்தை…எங்கள் தோழர் ஸ்டாலின் பயமென்றால் என்னவென்று அறியாதவராகத்தான் இருந்தார், அதை அவருக்குக் கிடைத்த கொடை. எதையும் கூர்மையாகவும் துல்லியமாகவும் கணிக்கும் அவர் திறன் கண்டு மெச்சியுள்ளோம். ஐந்தாண்டு திட்டங்களைக்கொண்டு சோவியத் யூனியனை காப்பாற்றியதும், யுத்தங்களும் மக்களை அவர்மீது அளவுகடந்த நம்பிக்கை வைக்க காரணமாயின. ஆனால் மெல்ல மெல்ல மற்றவர்களை நம்ப மறுத்தார். இறுதியில் ஒருவருமே நம்பக்கூடியவர்களல்ல என்பது அவரது முடிவு. அவரது அரசியல் குருவாகக் கருதப்பட்ட கிரோவ் (Sergueஞ் Mironovitch Kostrikov) கொலையுண்டது ஸ்டாலின் மனநிலையை வெகுவாக பாதித்ததென்று அவர் மகள் ஸ்வெட்லானா எனக்கு எழுதினாள். எனக்கென்ன தெரியும், நானென்ன உளவியல் மருத்துவரா என்ன. ஆனால் மெல்ல மெல்ல தனித்து வாழப் பழகிக்கொண்டதும், அச்சமென்ற சிறையில் தம்மை அடைத்துக்கொண்டதும் உண்மை” என்கிறார் குருஷ்சேவ்.

ஸ்டாலின் இருந்த குடியிருப்பை பார்த்தவர்கள் வியக்கிறார்கள் அலங்காரங்கள் அற்றவை. ஒவ்வொன்றிலும் ஒரே மாதிரியான மேசை நாற்காலியையும் கட்டிலையும் உபயோகித்திருக்கிறார். பிறகு பெரிய அறை, அந்த அறையில் சீருடைகள் சீருடைகள்.. நிறம், அளவு, பதக்கங்கள் என டஜன் கணக்கிலிருந்த அவற்றைத் தவிர வேறு உடைகளை அவர் வாழ் நாளில் அணிந்ததில்லை போன்றதொரு தோற்றம். ஓர்லோ·ப் அரன்மணையில் ஸ்டாலினுக்காக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. புதிதாக ஓர் அறை கட்டப்பட்டது. அக்கதவும் சன்னல்களும் மிகுந்த பாதுகாப்புகொண்டவையாக இருந்தன. அங்குதான் ஸ்டாலில் இரவுவேளைகளில் உறங்குவது வழக்கம். குட்டித்தூக்கம் போடுவதென்றாலும் அந்த அறைதான் வேண்டும். அந்த அறைக்குச் செல்ல இருப்பது நான்குமணிநேரமும் காவலில் இருக்கும் கொக்காசிய படைவீரர்களைக் கொண்ட மற்றொரு அறையைக் கடந்து செல்லவேண்டும். அவர் அங்கு தங்கும் நாட்களில் நான்கு முறை ஸ்டாலினிடமிருந்து காவற்படைதலைவனுக்கு அழைப்பு வரும். காலை ஒன்பது மணிக்கு தேநீர் அருந்தும் நேரம். பிற்பகல் ஒருமணிக்கு மதிய உணவு, இரவு ஏழுமணிக்கு இரவு உணவு, இரவு பத்துமணிக்கு மீண்டும் தேநீர்.

வந்திருந்த தலைவர்களை, காவற்படைதலைவன் முதற் தளத்திருந்த அலுவலக அறைக்குச் சென்றான். முதலிற் சொல்ல தயங்கினான். பிறகு கடகடவென்று வார்ந்த்தைகள் வெளிப்பட்டன.

– ஐயா சொல்லவில்லை. தொலைபேசியில் உங்களை அழைபதென்ற முடிவை எடுத்தது நான் தான். தோழர் ஸ்டாலின் அறைக்குள் இருக்கிறார். இரவு ஏழுமணிக்குப்பிறகு எவ்வித அழைப்பும் அவரிடமிருந்து வரவில்லை.

வழக்கம்போல ஏழுமணிக்கு இரவு உணவைக் கொண்டு வரும்படி பணித்தார். ஆனால் பத்து மணிக்கு தேநீருக்கான அழைப்பு வரவில்லை.. இரண்டு மணிநேரம் பொறுமையாக அந்தக் கொக்காசிய வீரர் காத்திருந்திருக்கிறார். எந்த அறிகுறிகளுமில்லை. இதற்கு முன்பு அவருக்கு இதுபோன்ற அனுவங்கள் ஏற்பட்டதில்லை. நள்ளிரவு நெருங்கியது. ஏதாவது செய்தாகவேண்டும் இப்படியே எவ்வளவு நிமிடங்கள் காத்திருப்பது? முதல் அழைப்பு பொதுச்சபை அலுவலகத்திற்குச் சென்றது. ஒருவரும் மறுமுனையிலில்லை. வேறு வழியில்லை என்ற கட்டத்தில் ஏழு தலைவர்களையும் அழைப்பதென்று முடிவு செய்து வரவழைத்திருக்கிறார்.

தலைவர்கள் முகத்தில் குழப்பம். அவர்களுக்கும் இது முதல் அனுபவம் தவறான நடவடிக்கைகள் அவர்கள் தலைக்கே ஆபத்தாக முடியலாம். வரிசைப்படி மொலொத்தெவ் முடிவினை எடுக்கவேண்டியவராக இருந்தார். கதவை உடைக்கலாமென்றார். துப்பாக்கிக்குண்டுகளும் துளைக்கக்கூடியடல்ல. வாகனங்கள் சக்கரங்களை கழற்ற உதவும் ஆயுதங்களும் பிற்வும் கொண்டுவரப்பட்டன. கொக்காசிய வீர்கள் தங்கள் பலம் முழுவதையும் உபயோகித்தார்கள். பல நிமிடப் போராட்டத்திற்குப் பிறகுஸ்டாலின் அறைக்கதவு நெக்குவிட்டது, திறக்க முடிந்தது. கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஒருவர்பபின் ஒருவராக நுழைந்தார்கள்.

அமைதி. பெரும் அமைதி. மீண்டுமொரு கதவை உடைக்கவேண்டியிருந்தது. மெல்ல அதையும் உடைத்துக்கொண்டு நுழைந்தார்கள். முதலில் பார்த்தவர் குருஷ்சேவ். சீருடையை அவிழ்க்காமல் தரையில் கிடந்த ஸ்டாலினை தலைவர்கூட்டம் நெருங்கியது. பேரியாவின் குரல்தான் முதலிற் கேட்டது.

– கொடுங்கோலன் இறந்தான்

அங்கிருந்த மற்றவர்கள் அமைதியாக அபிப்ராயங்களை சொல்லவிரும்பாதவர்கள்போல அமைதிகாக்க பேரியா மகிழ்ச்சியில் திளைப்பது வெளிப்படையாக தெரிந்தது; குருஷ்சேவ் குனிந்து தரையிற் கிடந்த உடலைப் பார்த்தார்.

பிற்காலத்தில் அச்சம்பவத்தை நினைவுகூர்ந்த குருஷ்சேவ் மறக்கமுடியாத அனுபவமென்றார். “எனது முதுகுத்தண்டில் அதன் சிலிர்ப்பை உணர்ந்தேன். பிறகு விலகிக்கொண்டேன். என் பின்னாலிருந்த மற்றவர்கள் அதை புருந்துகொண்டார்கள், பிறகு அவ்விடத்தைவிட்டு துரிதமாக நடந்து நடைகூடத்திற்கு வந்தோம்” என பின்னர் குருஷ் சேவ் எழுதினாராம். அவரது இந்த விவரிப்பில் முரண் இருக்கிறதென்று அவரது அனுபவத்தை வாசிக்க நேர்ந்தவ்ர்களின் கணிப்பு. ஸ்டாலின் உடல்நிலைகுறித்து அக்கறைக்கொள்ளாமல் தலைவர்கள் வெளியேறினர் என்றபொருளில் குருஷ் சேவின் முதல் விவரிப்பு இருக்க, மற்றொன்று மருத்துவரை அழைக்க நேர்ந்த சந்தர்ப்பத்தையும் மூளையில் ஏற்பட்டிருக்கும் இரத்த கசிவினை அறிந்துகொள்ள முடிந்ததையும் கூறுவதாக உள்ளது. இவ்விரண்டையும் தவிர்த்து புகழஞ்சலி போன்றதொரு வேறொரு தகவலும் உள்ளது. அது மூளையில் ஏற்பட்ட பாதிப்பு கை, கால், பேச்சு இவற்றை மட்டுமே பாதித்திருந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டதற்கும், குருஷ் சேவ் பின்னர் அளித்த விளக்கமும் வேறுபட்டிருந்தன: ” நினைவு திரும்பாமல் மூன்றுநாட்கள் இருந்தார், நாங்களும் அருகிலேயே இருந்தோம். ஒரு கட்டத்தில் அவருக்கு பிரக்ஞைவர அறைக்குள் சென்றோம். தாதியொருத்தி, தேநீரை ஒரு சிறுசிறுகரண்டிகளாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் எங்கள் கைகளைத் தொட்டு அங்கிருந்த ஆட்டுக்குட்டிக்கு கரண்டிகொண்டு பாலூட்டிக்கொண்டிருந்த சிறுமியின் படத்தைக்காட்டி புன்னகைக்க முயன்றார். அப்படத்தைச் சுட்டிக்காட்டியதன்மூலம் தான் ஆட்டுக்குட்டியைக் காட்டிலும் மோசமான நிலையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக இருந்தது. அடுத்த சில கணங்களில் அவர் இறந்தார்.. நான் அழுதேன். நாங்கள் அனைவரும் அவர் மாணவர்கள், அவருக்கு கடமைப்பட்டவர்கள். அவரும் மகா பீட்டருக்கு வேறுபாடுகளில்லை, அராஜகத்தை அராஜகத்தாலேயே வீழ்த்தினார் வேறென்ன சொல்வது.- ஆனால் மா மனிதர்”(1)

இதுபோன்ற பல முரண்பட்ட தகவல்கள் ஒருபுறமிருக்க, இறுதிக் காட்சியை குருஷ்சேவ் கீழ்க்கண்ட வகையில் விவரிக்கிறார்:

“மருத்துவர்கள் அதிகாலை 2மணி அளவில் ‘தாட்ச்சாவுக்கு’ வந்தார்கள். ஸ்டாலின் அறையைவிட்டு வெளியேறியதும் அவர்களில் மூத்தவர், “இரவும் இத்தனை கடுமையாக இல்லாமலிருந்து, தக்க தருணத்தில் தகவலும் கிடைத்து, நாங்களும் உரிய நேரத்தில் வந்திருப்போமெனில் ஒருவேளை தலைவர் ஸ்டாலினை காப்பாற்றியிருக்கலாம். செய்வதற்கு ஒன்றுமில்லை. அவர் கண்களிரண்டையும் சற்று முன்புதான் மூடினேன் என ஸ்டாலின் மரணத்தை உறுதிபடுத்தியதும், தானும், மொமொட்டோவ், மலென்க்கோவ் மற்றும் அங்கிருந்த பிற தலைவர்களும் தங்கள் மூத்த தலைவருக்காக அழுததாகவும் மாறாக பேரியா அழாததோடு, மூத்த மருத்துவரிடம்:

– இறப்புக்கு என்ன காரணம்? என்று கேட்டதாகவும்

– மூளையில் இரத்தகசிவு, பக்கவாதம், மாரடைப்பு. என மருத்துவர் அதற்கு பதிலிறுத்ததாகவும் குருஷ் சேவ் குறிப்பிடுகிறார்.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி இரவு சோவியத் பூமியில் நிகழ்ந்த பூகம்பத்தைப்பற்றி குருஷ் சேவ் மூலமாக நாம் அறிய வரும் தகவல்.

இதுதான் உண்மை. அன்றைய சோவியத் நாடு அதிகாரபூர்வமாக தெரிவித்தவை. ஆனால் இதுதான் உண்மையா? இந்த உண்மையில் உண்மையின் விழுக்காடுகள் எவ்வளவு என்கிற கேள்விகள் இருக்கின்றன.

(தொடரும்)

———————————————-

1. பிரான்சுநாட்டைச்சேர்ந்த பத்திரிகையாளரு இடசுசாரி சிந்தனையாளருமான இம்மானுவெல் அஸ்த்தியே என்பவருக்கு (Emmanuel d’Astier, op.citt – Dossier secrets page 364.) அளித்திருந்த பேட்டி.

Series Navigationவடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!தமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு