கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

1953ம் வருடம் பிப்ரவரி மாதம். மாஸ்க்கோ நகரில் இதற்கு முன்பு அப்படி பனிபொழிந்ததில்லையென்று பேச்சு. உண்மைதான் அந்த மாந்த்தில் தொடக்கத்திலிருந்தே பனி பொழிய ஆரம்பித்து சாலைகளில் குவிந்திருந்தது. சாலைகள், குடியிருப்புகள் மரங்களென அவ்வளவும் பனியால் மூடியிருந்தன. போதாதற்கு பூர்கா (Pourga) என மாஸ்கோவாசிகளால் அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிற உறைந்தபனியையொத்த சைபீரிய கடுங்குளிர் காற்றால் நீர்நிலைகள்கூட உறைந்திருந்தன. சாலைகளை மூடிய பனியும் உறைந்து பனிப்பாளங்களாக உருமாறியதின் விளைவாக போக்குவரத்து முற்றாக பாதித்திருந்தது.

மார்ச் மாதம்(1953) நான்காம்தேதி வழக்கம்போல காலையில் எழுந்த மாஸ்க்கோவாசி ஒருவர் வானொலியைத் திருப்ப, முதன்முறையாக அச்செய்தியைக் காதில்வாங்க நேரிடுகிறது. அவரை மட்டுமல்ல பொதுவுடமை கனவில் திளைத்திருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாஸ்க்கோவானொலி அறிவிப்பாளர் தெரிவித்த செய்தி: “ஸ்டாலின் உடல்நிலை கவலைதரும்வகையில் உள்ளது”

காலை 6மணி 21: நாட்டின் பிரதம தளபதிக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதென்று மீண்டும் மாஸ்கோ வானொலி உறுதி செய்தது.

காலை 6மணி 25: “ஸ்டாலின் இதயத் துடிப்பில் சீரடையவில்லை. சுவாசிக்க மிகவும் சங்கடப்படுகிறார்”, என்ற செய்தியை சோவியத் நாட்டின் செய்தி ஸ்தாபனம் ‘தாஸ்’ (Tass) தெரிவிக்கிறது.

காலை 6மணி 36: தளபதியின் உடல் நிலையில் முன்னேற்றமில்லை என்று செய்தி.

காலை 6மணி38: தளபதியின் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆகவும், இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 38 ஆகவும் இருப்பதாக அறிவிக்கிறார்கள்.

காலை 6மணி 55: ‘நமது இயக்கத்திற்கும் மக்களுக்கும் பெருஞ்சோதனை ஏற்பட்டுள்ளது, தோழர் ஸ்டாலின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என்ற செய்தியை சோவியத் அரசாங்கத்தின் அமைச்சகமும் கட்சியின் செயற்குழுவும் சேர்ந்தே வெளியிட்டிருந்தன. தொடர்ந்து விரிவான விளக்கங்களுடன் மருத்துவ அறிக்கைகள்.

மார்ச் மாதம் இரவு 2ந்தேதி சம்பந்தப்பட்ட முதல் அறிக்கை தோழர் ஸ்டாலின் அன்றிரவு அவரது சொந்த குடியிருப்பில் இருந்ததாகவும் திடீரென மூளை இரத்த நாளங்கள் சிதைந்து இரத்த கசிவு ஏற்பட சுயநினைவை இழந்ததாகவும் வலது காலும், வலது கையும் செயலிழந்ததோடு பேசும் சக்தியையும் அவர் இழக்க நேர்ந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது. விபத்தைத் தொடர்ந்து வழக்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த விபரமும் அதில் கண்டிருந்தது. அதாவது உயர்மட்ட மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பின் கீழ் ஸ்டாலினை வைத்திருந்திருக்கிறார்கள்.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 6ந்தேதி அதிகாலை செய்தியில், கிரெம்ளின் குடியிருப்பில் முந்தைய இரவு 9 மணி50நிமிடத்திற்கு ஸ்டாலின் இறந்தாரென அறிவித்தார்கள். “தோழர் லெனின் கனவுகளில் ஈர்க்கப்பட்டு அவற்றை நனவாக்க தொடர்ந்து உழைத்த பொதுவுடமைக்கட்சியின் தலைவர் தோழர் ஸ்டாலின் இதயம் நின்றுபோனது” என அந்த அறிக்கை தெரிவித்தது.

“தோழல் ஸ்டாலின் இறப்பு சோவியத் நாட்டின் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல உலகமனைத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவரது மரணச்செய்தி சோவியத் தொழிலாளர்கள்; தரைப்படை, கடற்படை வீரர்களுக்கு மட்டுமின்றி உலகமெங்கும் இலட்சகணக்கான தோழர்களின் இதயதிலும் தாங்கொணாத வலிதரகூடியது”, என்றும் அறிக்கை இருந்தது.

இச்செய்தியை உலகமெங்கும் கேள்விகளேதுமின்றி ஊடகங்கள் ஏற்றுக்கொண்டன. இரும்புத்திரை நாடு என்ற பெயர்பெற்றிருந்த சோவியத் யூனியனிடமிருந்து இதுபோன்ற செய்தி கசிந்ததே அப்போதைக்குப் பெரிய விடயம். ஆனால் ஆண்டுகள் ஆக ஆக உண்மைகள் வேறாக இருந்தன.

1952ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாலை 7மணி. கிரெம்ளினில் பொதுவுடமைகட்சி தொழிலாளர்அமைப்பின் 19வது மாநாடு கூட்டப்பட்டிருந்தது. மாநாட்டு மண்டபத்திற்குள் ஸ்டாலின் நுழைந்தபோது பங்குபெற்ற 1500 உறுப்பினர்களும் எழுந்து நின்று வானளாவப் புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டின் முடிவில் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தன. மாநாட்டில் பலரும் மாலென்கோவ் மற்றும் குருஷ்சேவ் இருவருக்கும் உரிய மரியாதை வழங்கப்படுமென பலரும் நினைத்தார்கள். வந்திருந்த பலருக்கும் மாநாடு தொடங்கிய சிற்சில நிமிடங்களிலேயே, மாநாட்டிற்கு ஒரே ஒரு மனிதர்தான் பிரதான கதாநாயகராக இருக்கமுடியுமென்றும் அந்த ஒரு மனிதரும் ஸ்டாலினைத் தவிர வேறு எவருமில்லையென்பதும் தெளிவாயிற்று. அதை மனதிற்கொண்டே மாநாட்டு செயல்பாடுகள் வரையரைச் செய்யப்பட்டிருந்தன, அதை ஸ்டாலினே முன்னின்று செய்துமிருந்தார். மூலதன நூலின் அடியொற்றி ஸ்டாலின் ஒரு புதிய பொருளாதார கொள்கையை உருவாக்கியிருந்தார். இம்மாநாடு அவரது புதிய பொருளாதாரகொள்கையின் அடிப்படையில் எடுக்கவிருந்த நடவடிக்கைகளுக்கு முன் மாதிரி எனலாம். குருஷ்சேவும் மலென்கோவும் கவனிப்பாரற்றவர்களாக நடத்தப்பட்டார்கள். குருஷ்சேவ் பொதுவுடமைக் கட்சியின் செயல்பாடுகள்பற்றிய ஆண்டறிக்கையை வாசிக்க அனுமதித்து மனதை சமாதானம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. மாநாடு கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. பொலிட்பீரோவு(Politburo of the Central Committee of the Communist Party of the Soviet Union)க்குப் பதில் மத்திய குழுவின் புரவலரமைப்பு (The Presidium of the Central Committee of the Communist Party) என்றவொன்று உருவானது. இப்புதிய அமைப்பில் பொலிட் பீரோவிலிருந்த 12 நிரந்தர உறுப்பினர்களுக்குப் பதிலாக 25 நிரந்தர உறுப்பினர் 11தற்கால உறுப்பினர் பதவிகள் உருவாயின. முன்பிருந்த பொலிட்பிரோ உறுப்பினர்களுக்கிருந்த அதிகாரத்தை குறைப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பு. கட்சியிலோ அரசு செயல்பாட்டிலோ உருப்படியாக பங்காற்ற உறுப்பினர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை. கட்சியின் தலைமைச் செயலகம் ஒருவகையில் பழைய பொலிட்பீரோவினை ஒத்திருந்தது. அதுகூட முக்கியத்துவமிழந்து ஒரு துணை அமைப்பு என்கிற தகுதியைப் பெற்றிருந்தது. பத்துபேர்கொண்ட கட்சியின் தலமைச்செயலக உறுப்பினர்களில் மாலென்கோவ், குருஷ்சேவ் ஆகியோரும் அடக்கம். எனினும் எல்லோருமே உண்மையில் அதிகாரத்தில் சமநிலையிலிருந்தனர், அதாவது முதல் செயலரைத் தவிர்த்து. முதல் செயலர் ஸ்டாலின். மீண்டும் சர்வாதிகாரி ஸ்டாலினின் அதிகாரவரம்பினை உயர்த்தும் வகையிலேயே இம்மாற்றங்கள் நிகழ்ந்தன.

1952ம் ஆண்டு அக்டோபர் 14ந்தேதி சோவியத் யூனியனின் பொது உடமைக்கட்சியின் மாநாட்டில் மேடையேறிய ஸ்டாலின் ஸ்டாலினாகவே இருந்தார். கம்பீரமான உடல் எப்போதும்போல ராணுவ சீருடையில் அதிகம்பொருந்தாமல் முகத்தில் எவ்வித பாவமுமின்றி விறைத்துக்கொண்டு நின்றது. ஜியார்ஜியா பகுதியைச்சேர்ந்த விவசாயிக்கேயுரிய பிரத்தியேகத்தோற்றம், கைகொள்ளும் அளவிற்கு தடித்த மீசை. அவர் மேடையேறுகிறபோது 74வயதென்று கணிப்பது மிகவும் கடினம் என்பதுபோலவே உடல் ஆரோக்கியத்துடனிருந்தது. மாநாட்டில் பங்குபெற்ற ‘மக்கள்வழிகாட்டிகள்’ என்று நம்பப்பட்ட இத்தாலி, ஜெர்மன், சீனா, கொரியா, அங்கேரியென வந்திருந்த தோழர்களுக்கு முகமன் கூறினார். அளித்த உரையிலும் தடுமாற்றங்களில்லை.

மாநாடு வெற்றிகரமாக நடந்தேறி ஒரு சில வாரங்கள் கடந்திருந்தன. அந்நிலையில் மூன்று முக்கிய சம்பவங்கள் அரங்கேறின. இச்சம்பவங்களின் காரணகாரியங்கள் வியப்புக்குறியவை, வரலாற்றாசிரியர்களுக்கு விளங்காதவை. அவற்றின் பின்னே இருந்த புதிர்களும் அவைகளுக்கான விடைகளும் எதிர்கால சம்பவங்களுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்திருந்தன.

முதலாவது சம்பவம்: கட்சியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் தலைவர்களின் உருவப்படங்கள் மாஸ்கோ நகரை அலங்கரிப்பதுண்டு. அவற்றின் வரிசையில் தலைவர்களுக்குக் கொடுக்கும் இடத்தை வைத்து தலைவர்களின் இருப்பை சோவியத் பொதுவுடமைக் கட்சியில் தீர்மானித்துவிடலாம். பொதுவாக ஸ்டாலின், மொல்டோவ் (Moltov), மலென்க்கோவ்(Malenkov) எனத் தொடரும் அவ்வரிசையில் பேரியா (Beria) என பெயர்கொண்ட காவல்துறை தலைவருக்கு எப்போதுமே நான்காவது இடமுண்டு. மாறாக 1952ம் ஆண்டு குளிர்காலத்தில் அலங்கரித்த உருவப்படங்கள் வரிசையில் 6வது இடத்தில் பேரியா இருந்தார். மாஸ்கோவாசிகள் புருவத்தை உயர்த்தினார்கள். ஏன்? எதற்காக? என்ற கேள்விகள் பிறந்தன.

இரண்டாவது சம்பவம்: இதிலும் சுவாரஸ்யத்தின் விழுக்காடு கிஞ்சித்தும் குறையாமலிருந்தது. சோவியத் யூனியன்கீழிருந்த அன்றைய உக்ரைன் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றுபேருக்கு மரன தண்டனையும், அக்கூட்டத்தைச் சேர்ந்த வேறு நபர்களுக்கு வருடக்கணக்கில் சிறைதண்டைனையும் அளித்தனர். அவர்கள் புரட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனையை வழங்கியிருந்தனர். தண்டனையை வழங்கியது, இது போன்ற குற்றங்களை கையாளக்கூடிய ராணுவ நீதிமன்றம். அவர்கள் மேலிருந்த குற்றமென்று பின்னர் தெரியவந்தது, உணவுப்பங்கீட்டுத் துறை பொருட்களை கள்ளச்சந்தையில் விற்றார்கள் என்பதாகும். செய்திருக்கும் குற்றத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது ராணுவ நீதிமன்றங்களில் தண்டிக்கபடவேண்டியவர்களே அல்ல. இதனை விசாரணை செய்தவர் ஆரம்பத்தில் காவல்துறை தலைவராக இருந்த பேரியா. ஆனால் அவரிடமிருந்த வழக்கினை ராணுவத்தின் கீழ் கொண்டுவந்திருந்தனர். இக்குற்றவாளிகள் அனைவரும் அனஸ்த்தாஸ் மிக்கோயான் என்ற பொலிட்பீரோ உறுப்பினர் கீழிருந்த அமைப்பைச் சேர்ந்தவர்களென்றும், உயர்மட்டத்திலிருந்த ஒரு சிலரின் ஆதரவு அவர்களுக்கு இருந்ததென்ற வதந்தியும் உலாவிற்று.. பின்னர் உணவுப்பங்கீட்டுதுறை அமைப்புகள் குருஷ்சேவ் வசம் ஒப்படைக்கபட்டன. இச்சம்பவத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் யூதர்கள்.

மூன்றாவது சம்பவம்: இரண்டாவது சம்பவத்தை ஒத்ததென்றே இச்சம்பவத்தை வர்ணிக்கவேண்டும். 1953ம் ஆண்டு ஜனவரி 13ந்தேதி ஒன்பது பேர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரை கைது செய்தனர்; அவர்களில் 6பேர் யூதர்கள். அவர்கள் இழைத்த குற்றம் “மருத்துவர்களின் சதி” -Doctors’ plot என பெயர்பெற்றது. . இவர்களில் முதல் குற்றவாளி ஒரு பெண் மருத்துவர் – திமாஷ¤க் (Timashuk) என்று பெயர். குளிர்காலத்தின் ஆரம்பத்தில் ஸ்டாலின் நெஞ்சுவலி கண்டார். வெகுநாட்களாகவே இதயத் தமணிகளில் அடைப்பிருந்ததாகச் சொல்கிறார்கள். உடனடியாக மாஸ்கோவின் முன்னனி மருத்துவர்கள் அழைக்க பட்டார்கள் அவர்களில் இதய மருத்துவத்தில் வல்லுனரான வினோக்ராதோவ் (Vinogradov) என்பவரும் ஒருவர். சோவியத் யூனியன் மருத்துவ அகாதமியின் முக்கிய உறுப்பினர் என்பதோடு, மருத்துவ சேவையில் சோவியத் யூனியனின் மிகப்பெரிய லெனின் விருதையும் வென்றவர். ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள், ” அவருக்குத் தேவை ஓய்வே தவிர சிகிச்சை அல்ல, அதுபோன்ற கட்டத்தையெல்லாம் அவர் தாண்டிவிட்டார்” என்றார்கள். மருத்துவர்களின் முடிவைக் காதில் வாங்கிய ஸ்டாலின் மெதுவான குரலில், உலக மருத்துவத்தோடு ஒப்பிடுகிறபொழுது ரஷ்யர்கள் மருத்துவதுறையில் முன்னேறி இருக்கிறார்களா இல்லையா? என கேட்கவும், இதிலென்ன சந்தேகம், நமது நாடு மருத்துவத்தில் முன்னேறியது என்பதை மறுக்கவா முடியும் என்றார்கள் மருத்துவர்கள். அப்படியெனில் என்னை குணப்படுத்த வழியென்னவென்று பாருங்கள். சோவியத் யூனியனுக்கும் இந்த நாட்டுமக்களுக்கும் நான் தேவைப்படுகிறேன், என்பது ஸ்டாலின் தரும் பதில். மருத்துவர்கள் தங்கள் முடிவில் மாற்றமில்லை என்பதுபோல, “உங்களுக்குத் தேவை ஓய்வே தவிர சிகிச்சை அல்ல”, என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார்கள். அவர்கள் சென்றதும் அருகிலிருந்த ‘பேரியா’விடம் ஸ்டாலின், ” பார்த்தாயா பேரியா, அதிகாரத்திலிருந்து என்னை அகற்ற முடிவு செய்திருக்கிறார்களென நினைக்கிறேன்”, என்றார்.

இங்கே பேரியா பற்றி தெரிந்துகொள்ளாமல் தொடர்வதில் பயனில்லை. சோவியத் யூனியனின் மிக மர்மமான மனிதர்களுள் ஒருவரென அறியப்பட்ட பேரியா ஸ்டாலினைபோலவே ஜியார்ஜியா பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்தப் பின்புலம் அவர் மளமளவென்று உயர்பதவிகளை எட்ட உதவியது என்பதும் உண்மை. ஸ்டாலினைப்போலவே மனித உயிர்களை துச்சமாக மதிக்கக்கூடியவர். உள்துறை அமைச்சராகவும், இரகசிய காவற்படையின் தலைவராகவும், அணு உலைக் கழகத்தின் இயக்குனராகவும் முக்கிய பதவிகளில் இருந்தவர். சோவியத் சிறை முழுக்க இவரது கண்காணிப்பின் கீழிருந்தது. தோற்றத்தில் சாதுவான மனிதராகவும், சராசரி அரசு அதிகாரிபோலிருந்த அவருக்குள் அடக்குமுறையில் தேர்ச்சிபெற்ற இரத்தவெறி பிடித்த கொடிய மிருகம் ஒளிந்துகொண்டிருந்ததாக மாஸ்கோவாசிகள் நம்பினார்கள். தமது கட்டளையை எவ்வித தயக்கமின்றி நிறைவேற்றும் பேரியாவை ஸ்டாலினுக்கு பிடித்திருந்தது. ஆனல் எங்கே விட்டால் நமது தோளில் சவாரி செய்ய ஆரம்பித்துவிடுவாரோ என்ற எச்சரிக்கையும் அவரிடத்தில் இருந்தது. ஸ்டாலின் கட்டளை இடத்தேவையில்லை. அவர் உள்மனதை வாசித்ததுபோல பேரியாவின் நடவடிக்கைகள் இருக்கும். Night of the Long Knives சம்பவத்தை அறிந்தவர்கள் அடால்•ப் ஹிட்லர், எர்னெஸ்ட் ரோம் (Ernst Rohm) பிரச்சினையை ஒத்தது ஸ்டாலின் பேரியா உறவு என்கிறார்கள்.

ஜனவரி மாதம் 13ந்தேதி டாஸ் செய்தி ஸ்தாபனம், ” தவறான மருந்தை வழங்கி மருத்துவர்களில் சிலர் தோழர் ஸ்டாலினைக் கொல்ல முயற்சி” என்று செய்தியை வெளியிட்டிருந்தது. அரசு தரப்பில் வெளிவந்த இச்செய்தியும் அது தொடர்பான நடவடிக்கையும் கீழ்மைத்தனமானவை என்பதை 1958ம் ஆண்டு குருஷ்சேவ் 20 வது காங்கிரஸின்போது வாசித்த அறிக்கை தெரிவிக்கிறது. விசாரனையின் போது வெளிநபர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்படி நடந்துகொள்ளவேண்டியிருந்ததென மருத்துவ பெண்மணி திமாஷ¤க் கூறியிருந்ததைத் தவிர வேறு ஆதாரங்களில்லை. அப்பெண்மணி எழுதியிருந்த “மருத்துவர்களில் சிலர் கூடாத வைத்தியபராமரிப்பைத் தோழர் ஸ்டாலினுக்கு அளிக்கிறார்கள்”, கடிதம் ஸ்டாலின் தனது மூர்க்க குணத்தை கட்டவிழ்க்க போதுமானதாக இருந்தது. சோவியத் யூனியனின் முக்கிய மருத்துவர்களை கைது செய்யுமாறு கட்டளை வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உண்மையைக் கறக்க எப்படியெல்லாம் விசாரனைக்குழுவினர் நடந்துக்கொள்ள வேண்டுமென்பதையும் ஸ்டாலின் அறிவுறுத்துகிறார். வினோகிராடோவ் கடைசிவரை கைவிலங்கிடப்பட்டிருக்கவேண்டும், மற்றொரு மருத்துவரை சித்திரவதை செய்யவும் தயங்கவேண்டாமென்று கட்டளை. சித்திரவதைகள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் இக்னாசியேவ் முன்னிலையில் நடந்தன. அவரிடம் “உண்மையை வரவழைக்காதுபோனால், உங்கள் தலை இருக்காதென” ஸ்டாலின் எச்சரித்திருந்தார். விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் யோசனைகள் வழங்கப்பட்டன. மிகவும் எளிதான யோசனை. உண்மையை வரவழைக்க கைதிகளை நன்கு புடைக்குமாறு சொல்லப்பட்டது. ஸ்டாலின் மரணத்திற்கு பிறகு கிடைத்த வழக்கு சம்பந்தப்பட ஆவணங்கள் அவ்வளவும் ஜோடிக்கபட்டவையென தெரியவந்ததென குருஷ்சேவ் அறிக்கைமூலமாக பின்னர் தெரிந்து கொள்கிறோம்.

சோவியத் யூனியன் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ப்ராவ்டாவும், பிற தினசரிகளும் “இஸ்ரேலியர்களான இம்மருத்துவர்கள் அனைவரும் யூதமதத்தின் தீவிரநம்பிக்கைகொண்ட சியோனி(Sionis)ஸ்ட்டுகளென்றும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் கைக்கூலிகளென்றும்”, எழுதின. அனைவருக்கும் தெளிவாயிற்று. ஸ்டாலின் மீண்டுமொரு கொலைகளத்தினை உருவாக்கும் பணியிலிருந்தார். இம்முறை இனவாதம் அவருக்கு உதவிற்று. சோவியத் யூனியனின் உயர்மட்டத்திலிருந்த பல தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள் தலை என்றைக்கு உருளுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்தனர். மத்திய குழுவின் புரவலரமைப்பில் இருந்த மூத்த தலைவர்களுள் ககனோவிச்(Kaganovitch) ஒரு யூதர், ஸ்டாலினுடைய முன்னாள் மனைவியின் சகோதரர், ஒரு காலத்தில் நெருங்கிய நண்பருங்கூட; மற்றொரு மூத்த தலைவர் மொல்ட்டோவ் யூதப்பெண்ணொருத்தியை மணந்திருந்தார்; பிறகு குருஷ்சேவ்க்குங்கூட ஆபத்திருந்தது, அவரது முதல் மனைவிக்குப் பிறந்திருந்த மகள் யூதர் ஒருவரை மனந்திருந்தாள்; பேரியாவுக்கும் ஆபத்திருந்தது. அவரது தந்தை ஜியார்ஜியர் என்றாலும் தாய் யூதப்பெண்மணி.

ஸ்டாலினின் அவ்வளவு கோரதாண்டவத்திற்கும் ஆரம்பத்தில் லாவ்ரெண்ட்டி துணைநின்றார். ஒவ்வொரு நாளும் தினரசிகளில் புதுப்புது ஊழல்கள், துரோகங்கள். குற்றவாளிகள் கைதும், அவர்கள் உண்மைகளை ஏற்பதும் தொடர்ந்தன. அவர்களில் பெரும்பாலோர் யூதர்களாக இருந்தனர். அவர்கள் வணிக அமைப்புகளை சார்ந்தவர்களாக இருப்பார்கள், மருத்துவர்களாக இருப்பார்கள், எழுத்தாளர்களாக இருப்பார்கள், நடிகர்களாக இருப்பார்கள், வழக்கறிஞர்களாக இருப்பார்கள். குறிப்பாக குருஷ்சேவ் மாநிலமான உக்ரைன் பகுதியிலேதான் இக்கைது நடவடிக்கைகள் அதிக அளவில் இருந்தன. ஸ்டாலினை சுற்றியிருந்த தலைவர்களை ஆபத்து அதுவரை நெருங்கவில்லை என்றபோதும் அவர்கள் அதிகாரத்தின் கீழ் இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். குருஷ்சேவ் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். பேரியாவின் காவல் துறை பல இடங்களில் தவறிழைத்திருக்கிறதென சொல்லப்பட்டது. மிக்கோயனும் பாதித்திருந்தார் அவரின் கீழ் இருந்த பலர் ஏற்கனவே தண்டிக்கபட்டிருந்தனர். மோல்ட்டோவ்க்கும் அச்சமிருந்தது, அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுவரை மாஸ்கோவில் பயமில்லை என்றிருந்ததுபோக டாஸ் செய்தி ஸ்தாபனத்தின் இயக்குனர் திடீரென்று மாயமானார். மொல்ட்டோவ் நண்பர் கைது என்று செய்திவந்தது. திருமதி மொல்ட்டோவ் கைதுக்குப்பிறகு என்னவானார் என்று தகவலில்லை. மாஸ்கோ பல்கலைகழக கைதுகள், அறிவியல் அகாதெமியைச்சேர்ந்தவர்களின் கைதுகள் ஏன் மத்திய குழுவின் புரவலர் அமைப்பைச்சேர்ந்தவர்களேகூட கைதுசெய்யப்பட்டனர். ஆக யூதர்கள்..யூதர்களை குறிவைத்து நடவடிக்கைகள் இருந்தன.

மார்ச் மாதம் முதல் தேதி. ஞாயிற்றுக்கிழமை. குளிர்காலம் அதன் குணத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளாமலிருந்தது. நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. மாஸ்கோவில் இருந்த தமது குடியிருப்பில் உறங்காமல் குருஷ்சேவ் விழித்திருந்தார். முதல் நாள் இரவு தலைமைக் காரியாலயத்தில் தோழர் ஸ்டாலினோடு அனைவரும் வழக்கம்போல இரவு உணவை சேர்ந்து உண்டணர். கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் அனவரும் கலந்துகொண்ட அந்த நிகழ்வின்போது ஸ்டாலின் சந்தோஷமாகவே இருந்தார், நாங்களும் அவருடன் மகிழ்ச்சியாக சந்திப்பைக் கழித்தபின் வீடு திரும்பினோம் என்றார் பின்னொருநாளில் குருஷ்சேவ். ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக ஸ்டாலின் கட்சி பொறுப்பில் இருக்கிற சகாக்களுடன் தொலைபேசியில் நிர்வாகம் சம்பந்தமாக உரையாடுவது வழக்கம். ஆனால் இன்றென்னவோ அந்த நிமிடம்வரை அழைப்பில்லை. திங்கட்கிழமைகளில் அவசியம் இருந்தாலொழிய மாஸ்க்கோவில் ஸ்டாலினை சந்திப்பதில்லை. தொலைபேசி உரையாடலுக்கும் வாய்ப்புகளில்லை. ஆனால் இன்று அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலினிடமிருந்து வரவேண்டிய தொலைபேசி அழைப்பு வராதது ஏன் என்றகேள்வி அவர் மனைதைப்போட்டு குடைந்தது.

எத்தனை நேரம் குருஷ்சேவ் யோசனையில் ஆழ்ந்திருப்பாரோ திடீரென தொலைபேசியின் அலறல் கேட்டு திடுக்கிட்டவராய் வேகமாய்ச்சென்று எடுத்த குருஷ்சேவ் மறுமுனையில் யாரென்று தெரிந்துவிட்டது. தோழர் ஜோசெப் ஸ்டாலினுடைய தலைமைப் பாதுகாவலர்.

– நீங்க உடனே புறப்பட்டு தோழர் ஸ்டாலினுடைய தாட்சா (Datcha-பண்ணை வீடு)வுக்கு வரவேண்டுமென்று கட்டளை – என்கிறது மறுமுனையின் குரல்.

இவர் பதில் தேவையில்லை என்பதுபோல மறுமுனையில் உரையாடல் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவில் கடுங்குளிரில் மாஸ்க்கோவிற்கு வெளியே தொண்ணூறு கி.மீ தூரம் பயணம் செய்வது அவ்வளவு எளிதல்லவென்று குருஷ்சேவுக்குத் தெரியும் தொலைபேசி மணியின் அழைப்பொலிகேட்டு விழித்திருந்த திருமதி குருஷ்சேவ் அவரை பார்த்தாள். நீனாபெட் ரோவ்னா ஓரளவு நிலமையைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அவளுக்கு இது முதல் அனுபவமல்ல. இதற்குமுன்பும் ஸ்டாலினிடமிருந்து நேரங்கெட்ட நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அவரும் புறப்பட்டு போயிருக்கிறார். குருஷ்சேவ் மறுமுறையும் தொலைபேசியை எடுத்து வாகனத்திற்கும் ஓட்டுனருக்கும் ஏற்பாடு செய்துவிட்டு உடையை அணிந்தார். உறைபனிகுளிருக்கு வேண்டிய ஆடைகளையும் கையுறைகளையும் மறக்காமல் கணவர் அணிகிறாரா என்று பார்த்தார். ஆடையை அணிந்து முடித்ததும் குளிரைச்சமாளிக்க அப்பெண்மணியே சென்று வோட்கா பாட்டிலை எடுத்துவந்து கோப்பையை நிரப்பினார். இன்னொரு கோப்பை குடிக்கவும் வற்புறுத்தினார். குருஷ்சேவ் மறுத்தார்.

– நாயைக்கூட வெளியில்விட பலமுறை யோசிக்க வேண்டும் என்பது போல குளிர் இருப்பதால் ஒருகோப்பை கூடுதலாக வோட்கா எடுப்பது நல்லதென்றாள்.

அவர் மறுத்தார். புறப்படுவதற்கு முன் மனைவியை பலமுறை தழுவி முத்தமிட்டார். ஸ்டாலின் நள்ளிரவில் அழைக்கிறபோதெல்லாம் இதை நடமுறை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது சகாக்களில் பலர் ஸ்டாலின் அழைத்தார் என்று புறப்பட்டுபோனவர்கள் திரும்பவந்து மனைவியைப் பார்த்தவர்களில்லை. குருஷ்சேவும் தான் திரும்புவதற்கு வாய்ப்பில்லாமலே போகலாமென்று நம்பினார்.

” அவளிடம் பதில் ஏதுமின்றி முத்தமிட்டேன். ஸ்டாலின் அழைக்கிறபோதெல்லாம் உயிரோடு திரும்பமுடியாமற்போகலாம் என நானும் என் மனைவியும் நம்பினோம், அதற்கு வலுவூட்டும் சாட்சியங்கள் ஏற்கனவே உண்டென்பதை இருவரும் அறிவோம்”, என்கிறார் குருஷ்சேவ்.

(தொடரும்)

நாகரத்தினம் கிருஷ்ணா

Series Navigationதொலைத்துஎது உயர்ந்தது?