கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்

குருசு.சாக்ரடீஸ்

பிரார்த்தனைகூடத்தின் பாடல் அலையில்
போன்சாய்களாய் உருமாறும்
கன்னியாஸ்திரிகள்

ரோமபுரியின் கனவில்
வார்த்தெடுக்கப்பட்ட
போன்சாய்களின் பாடல்

திணறும் சுவாசத்தில்
உயிர்க்கின்றன பறவைகள்

போன்சாய்கள் முணுமுணுக்கும்
வெதுவெதுப்பான காலையை
வரவேற்க காத்திருக்கின்றன
போக்கிடமற்ற பறவைகள்

பிரார்த்தனைக்கான பாடல்கள்
கை தவறிய
நாணயத்தைப் போல
கூடத்தில் உருள்கின்றன

வெளியேறும் வழியற்ற
உலகத்தின் அறைக்குள்
தண்ணீர் சிற்பங்களை
செதுக்கும் போன்சாய்கள்
திராட்சை ரசத்தில் கரைக்கின்றன
ஹிருதயங்களை

பெருமூச்சில்
கருத்தரிக்கின்றன

பூக்கின்றன

வண்ணத்துபூச்சிகள் அமர
இலை விரிக்கின்றன

கனவுகளை குவளையில்
பருக தருகின்றன

வண்ணங்களை குழைத்து
வானத்தை ரகசியவெளியில்
வரைகின்றன

யகோவாவின் கடவுளோடு
யாத்திரையின் விவரணைகளை
பகிர்கின்றன

போன்சாய்களே
வரைகின்றன
விழித்தெழ இயலா நித்தரைகளை

ஆன்மாவின் பெருமூச்சில்
சாராளின் உப்புத்தூண்
உதிர துவங்கியது

அறையெங்கும் நிரம்பிய
கதகதப்பில்
தவறவிட்ட பாடலை
தேட துவங்கின
தொங்கும் சிலுவைகளின் கண்கள்

தனிமையின் ஞாபகவடுக்கள்
பெருவெள்ளத்து தடங்களைப்போல
பிரார்த்தனைகூடத்து சுவர்களை
அலங்கரித்திருந்தன

போன்சாய் பூக்களின் மணம்
வனாந்திரத்தின் கேவலாய்
எதிரொலிக்கிறது
பிரார்த்தனைகளில்

வானமற்றுப்போன
போன்சாய்மரங்களில்
வந்தமர
ஒரு கானான்தேசத்து பறவை
பறந்தபடியிருந்தது

பிரார்த்தனையின் கடைசியில்
பலியிட இருப்பதெல்லாம்
ஒரு பறவை
ஒரு போன்சாய்
மற்றும் சில பிரார்த்தனைகள்.

Series Navigationவழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்பிரேதம்