கலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து


மீனாட்சி சுந்தரமூர்த்தி


துறை: அதுவே,(வரைவு கடாயது,–மணம் புரிந்து கொள்). களவொழுக்கம் நயந்தவனுக்கு நடந்ததாய்
பொய் நிகழ்வு ஒன்று சொல்லி தோழி அறிவுறுத்துவது.

இரவில் வந்து சந்திப்பதை வழக்கமாக
வைத்திருந்தான். தலைவன். ஒருநாள் அவன் தலைவியின் மனையின் பின்புறத்தில் காத்திருக்க அறியாதவர் போன்று தலைவி கேட்டிருக்கத் தோழி கூறுவது.(தலைவன் காதில் விழுமாறு)
அதாவது இரவுக்குறி மறுப்பது.(இரவில் வந்து சந்திப்பதற்கு உடன்படாமை)

“திருந்திழாய் கேளாய், நம் ஊர்க்கெல்லாம்
          சாலும்
பெருநகை  அல்கல் நிகழ்ந்தது
        ஒருநிலையே;
பொருள்: திருத்தமுற இழைத்துச் செய்த 
அணிகளை அணிந்தவளே , கேள்! நமது
ஊராரெல்லாம் எள்ளி நகையாடும்படி
நிகழ்வு ஒன்று நேற்றிரவு நடந்தது.

” மன்பதை எல்லாம் மடிந்த இருங்கங்குல்
அந்துகில் போர்வை அணிபெறத் தைஇநம்
இன்சாயல் மார்பன் குறிநின்றேன் 
     யானாக,”
உலகமெலாம்(மன்பதை) உறங்கிப் போன
நள்ளிரவில் ,அழகிய போர்வை ஒன்று போர்த்து தலைவன் வரக் குறித்த இடத்தில்
நின்றிருந்தேன். (தோழியே முதலில் தலைவனைச் சந்தித்து வீட்டின் நிலைமைக்கு ஏற்ப சந்திப்புக்கு ஏற்பாடு
செய்வாள்.)

“தீரக்குறைந்த தலையும்,தன்கம்பலும்
காரக்குறைந்து கரைபட்டு வந்துநம்
சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத்
‘தோழி நீ போற்றுதி’ என்றி; அவனாங்கே”
பொருள்:
தொழுநோயாற் பிணிக்கப்பட்டு,கையும் காலும் குறைந்து,மொட்டைத் தலையனாய்
கம்பளம் போர்த்துக் கொண்டு நம் சேரியை
விட்டு அகலாது சுற்றிவரும் முடமான வயது முதிர்ந்த அந்தணன் ஒருவனிடம்
‘விழிப்பாயிரு’ என்று பலமுறை நீ சொன்னது உண்டு.அவன் அங்கு வந்து,

‘மக்கள் நடமாட்டம் இல்லாத இந்த
இடத்தில்
வந்து நிற்கும் நீ யார் ?’எனக் கேட்டு வைக்கோலை விட்டு அகலாத கிழட்டு
எருது போல்  அங்கேயே நின்றான். பின்னர்,
“தையால் தம்பலம் தின்றியோ ?என்றுதன்
பக்கழித்துக்,’ கொண்டீ’ எனத்தரலும் 
  யாதொன்றும் வாய்வாளேன் நிற்ப”
பொருள்:
பெண்ணே, வெற்றிலை போட்டுக்கொள்(தின் என்பதே சரி ஆனால் நம் வழக்கில் போடுதல் என்றானது) என்று
தனது பாக்குப்பையைத் திறந்து எடுத்துக் கொள் (கொள்+ நீ- கொண்டீ) என நீட்டிட 
நான் ஏதும் பேசாமல் நின்றேனாக,

“கைப்படுக்கப் பட்டாய் சிறுமி நீ ,மற்றுயான்
ஏனைப் பிசாசு, அருள் ,என்னை நலிதரின்
இவ்வூர்ப் பலிநீ பெறாமல் கொள்வேன்
   எனப்
பலவும் தாங்காது வாய்பாடி நிற்ப”

பொருள்:  ‘சிறியவளே நீ இன்று என்னிடம்
பிடிபட்டாய், நான் இவ்வூரில் வாழும் ஆண்
பிசாசு அறிவாயா? என்னிடம் அன்பு கொள்ளமல் துன்புறுத்தினால்  இவ்வூர் வாழும் மக்கள் உனக்குப் பலியிட்டு வணங்காது  (தேவதைகளுக்குப் படையலிட்டு 
வணங்குவது) தடுத்து விடுவேன்’
என்று உளறலானான்.(அவளை அணங்கு
(மோகினி –சிறு தெய்வம்) என நினைத்து அஞ்சி விட்டான்.

“முதுபார்ப்பான் அஞ்சினனாதல் அறிந்து
             யான்,
எஞ்சாது ஒருகை மணல்கொண்டு
      மேல்தூவக் கண்டே
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன்”

பொருள்:
அதையறிந்த நான் ஒரு கை மணலெடுத்து
அவன்மீது தூவினேன்,அலறிக் கொண்டு ஓடி மறைந்தான் அவன்.

“இரும்புலி கொண்மார் நிறுத்த வலையுள்
          ஓர்
ஏதில் குறுநரி பட்டற்றால் ,காதலர்
காட்சி அழுங்க, நம் ஊர்க்கெலாஅம்
ஆகுலமாகி விளைந்ததை;”
பொருள்:
புலிக்காக விரித்த வலையில் சிறுநரி
சிக்கியது போல், தலைவன் வரவிற்காக
நின்றது  இவன் வந்திடத் துன்பமானது.
இதுவே நேற்று இரவு
நங்கையர்
தனித்திருந்தால்  மையலுற்றுப் பேசுவதே
வழக்கமாகக் கொண்ட  கிழட்டு அந்தணன்
நடத்திய நாடகம்.
“………முதுபார்ப்பான்
வீழ்க்கைப் பெருங் கருங்கூத்து”.அறிவதும்:
  ‘இரவில் இத்தனை இடர்ப்பாடுகள் எங்களுக்கு உள்ளது.
வயது முதிர்ந்து தீராத நோய் பெற்று
முடமானவனும் வாளாயிரான்.(சும்மாயிருக்க மாட்டான்) பெண்டிர் என்றால்,
அதோடு பிசாசுகளும், கண்டார்ப் பிணித்துப் பின் செல்லும் மோகினித் தேவதைகளும் உலவும் வேளையிது.
பிசாசுகள் பெண்களையும், அணங்குகள் ஆடவரையும் பற்றும்.
உனக்கும் நன்மையன்று,உன்வரவு பார்த்திருக்கும் எமக்கும் நன்மையன்று.
உணர்ந்து வதுவை கொள்,’ என்றதாம்.

புலிக்கு விரித்த வலை இங்கு தலைவனுக்குத் தலைவியின் அன்புவலை.

நேற்று  முதுபார்ப்பானின் பெருங்கூச்சல்
கேட்டு உறங்கிய ஊரவர் விழித்தெழுந்து
வந்து என்னவென அவனை வினவினர்
நான் மறைந்தோடி வந்து இல்லிற் புகுந்தேன். அதனால் இனி இரவில் ஊர்க்காவல் இடுவர் நீ வர இயலாது
என்பதாம்.
அதனால் வம்பெதற்கு ஊரவர் வாழ்த்திட
மணம் புரிந்து கொள் என்றதுமாம்.

மூடநம்பிக்கைகள் இடம்பெறத் தொடங்கி
விட்ட  காலம் எனவும், அவை உண்மையில்
இல்லை அவரவருக்காக உருவாக்கப்பட்டவை எனவும் உணர்த்தும்
பாடல் இது.
பிசாசானது மண்ணைத் தூவினால் அஞ்சி
நடுங்கி ஓடிப்போகும் என்ற  செய்தி காணக் கிடைக்கிறது.
‘வேப்பமர உச்சியில் நிண்ணு பேயொண்ணு
ஆடுதுண்ணு’ என்ற பாடல்
நினைவிலாடும்

Series Navigationநீ நீயாக இல்லை …பிச்சை