கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

பெரியவர் நீலமணி 1936 – இல் பிறந்தவர். 57 ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வருகிறார். 1970 -இல் இருந்து புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் Second
thoughts என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளன. ‘ நனையும் ஆம்பல் ‘ என்ற தொகுப்பில் உள்ள
நீள்கவிதைதான் ‘ உப்பு நதிகள் ‘ ! இந்த ஒரே கவிதை 29 பக்கங்கள் — 693 வரிகள் கொண்டதால் குறுங்காவியமாக அமைந்துள்ளது. நீலமணிக்கு ‘ உருவகக் கடல் ‘ மற்றும் ‘ கவியரசு ‘ ஆகிய அடைமொழிகள் உண்டு. இக்குறுங்காவியத்தைப் படித்து முடித்தவுடன் அவருக்கு இந்த அடைமொழிகள்
சரியாகத்தான் தரப்பட்டுள்ளன என வாசகர்கள் உணரலாம்.
கவிஞர் சுரதாவைத் தொடரும் சொல்லாட்சி இவருக்கு வாய்த்திருக்கிறது. ‘ உப்பு நதிகள் ‘ நிறைவேறாத காதலை ஆண் குரலில் பேசுகிறது. கவிஞரின் மொழிநடை மிகவும் சரளமானது. புத்தம்
புதிய சிந்தனைகள் வரிசைகட்டி நிற்கின்றன. அதனாலேயே படிமங்கள் பஞ்சமில்லாமல் விரவிக்கிடக்கின்றன. இக்கவிதை வாசிப்பு நல்லதோர் இலக்கிய அனுபவமாக அமைகிறது.
நீ நீர்க்குடமெடுத்துச் செல்கிறாய்
நான் தளும்பிக்கொண்டிருக்கிறேன்
— என்ற கவிதையின் தொடக்கமே கவித்துவ மணம் வீசத்தொடங்குகிறது. ஒரே ஒரு கருத்தை விதவிதமாகச் சொல்லும் பரிமாண வேறுபாடு கவிஞரின் சொல்லாட்சிக்குச் சிறப்புச் சேர்க்கிறது.
நீ கோயிலுக்குப் போகிறாய்
நான் பூசிக்கிறேன்
— என்பது போன்ற பிசிறு தட்டாத கருத்து வெளிப்பாடு கவிதைக்கு அழகு சேர்க்கிறது. ‘ கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை .ஓடிவந்தேன் இங்கே நீ இருந்தாய் . ‘ என்று கண்ணதாசன் சொன்னதும்
நினைவில் வருகிறது.
கண்ணீர்த்துளிகள் பொழியட்டும்
உட்கொண்ட உன் உருவத்தை
இப்படித் துப்புகிறது கண்
— ‘ கண் துப்புகிறது ‘ என்பது வித்தியாசமான அரிய சொற்றொடர். தொடர்ந்து கண்ணீர் வழிவதால்தான் இக்கவிதைக்கு ‘ உப்பு நதிகள் ‘ எனப் பெயரிட்டார் போலும்.
காதல் மனத்தின் ஈரத்தைச் சில வரிகள் பேசுகின்றன.
நான் ஒரு வீணையாக இருந்தால்
நீ தொடாமலே இசைப்பேன்
— என்ற வரிகள் சுயம் இழந்த ஒரு முழுமையான ஒப்படைத்தலைச் சுட்டுகிறது. இதே கருத்தை வேறு
மாதிரி எப்படிச் சொல்லலாம் ?
நான் ஒரு மரமாக இருந்தால்
பன்னிரு மாதமும் உனக்காகப் பழுப்பேன்
— என்கிறார் நீலமணி .
ஓரிடத்தில் மிரட்டல் தொனியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.மிகவும் ரசிக்க முடிகிறது. புதுமையாகவும்
இருக்கிறது.
பார்க்காமலே போகிறாயே —
சந்தையா இது , கூவி விற்க … ?
— நேசிக்கும் பெண்ணை வளைக்க இப்படியும் பேச முடியுமா என்ற வியப்பை இக்கேள்வி உண்டாக்கு
கிறது.
துயரத்தை விளக்க , உச்சநிலை தொடுகின்றன கீழ்க்காணும் வரிகள்…
அழுகையே ராகமென்றால்
இந்த ஊரில்
சிறந்த பாடகன் நான் தான்
— தன் காதல் நினைவுகளை மிகவும் போற்றுகிறார் கவிஞர். அவளை இழக்க மனம் ஒப்பவில்லை.
நினைவு என்ன
உறவு இல்லாத கிளியா
திறந்துவிட்டதும் பறந்துபோக ?
அந்தப் பெண் அவர் மனத்தை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்துள்ளாள் என்பதை விளக்குகின்றன
கீழ்க்காணும் வரிகள்…
நான் குடிக்கமாட்டேன்
உன்னைவிட போதை எது?
உயர்வுநவிற்சி அணி வசனகவிதையில் அமைந்தால்தான் கவிதை வெற்றி பெறும். அந்த அணி படிப்பவர்கள் மனத்தில் பளிச்சென்று பதியும்.
ஓலையைச் செல்லரித்தால்
கவிதைக்கு வலிக்காதா?
— கவலைப்பட்டுக்கொண்டால் இருந்தால் எப்படி ? கவிஞர் ஒரு முடிவிற்கு வருகிறார்.
இரவு என்ற சுமைதாங்கி மேல்
இறக்கி வைத்துவிடுவோம் நம்மை
— புதிய படிமம் அழகாகப் பதிவாகியுள்ளது. சொற்கள் சிறகு முளைத்து வாசகன் மனத்தில் ரீங்காரம்
செய்யத் தொடங்கிவிடுகின்றன.
” கிட்டாதாயின் வெட்டென மற ” என்பதெல்லாம் காதலில் செல்லுபடி ஆகாது போலும் !
உன் சித்திரத்தை அழிக்க முயன்றால்
மனமே ரணமாகிறது
— காதல் ஊற்று பொங்கிப் பொங்கி கவிதை ரசமாய்ப் பெருக்கெடுக்கிறது.
நடனத்தை வகுத்தவன்
ஆணாகத்தான் இருக்கவேண்டும்
அழகின் நெளிவுகளை
விழிக்குவளை மொண்டருந்தப்
பேராசை அவனுக்கு.
— சொற்கள் திறந்துபோடும் படிமம் புதியது ; மிகவும் அழகானது.
அவள் கோலம் போடுவதை ரசிக்கிறார் கவிஞர். தரையில் முளைத்த வெள்ளைக் கவிதையாய்க் கோலம் சிரிக்கிறது.
நீ கோலம் போடுகிறாய்
உன் விரல்களிலிருந்து உதிர்வது
என் உயிர்ப்பொடி
— உயிரைப் பார்க்க முடியாது என்பது இங்கே உண்மையில்லை. அது திட உருவம் என்கிறார்.
தவிப்பு மேலிடுகிறது. மனம் கட்டுக்குள் இல்லை.
துருவமே , எனக்குத் திசை சொல்
துடுப்பே , என்னை நகர்த்து
நங்கூரமே , என்னை நிறுத்து
— நகர்த்தவும் சொல்கிறது . நங்கூரமிடவும் சொல்கிறது காதல் மனம்.
தன் கம்பீரத்தை இழந்து அஃறிணைப் பொருளாகிறார் கவிஞர்.
அகராதியைவிட அதிகம் தெரிந்த நான்
உன்னைப் பார்த்த போது
வெள்ளைத்தாள் ஆனேன்.
அவளுக்காக எதுவாகவும் மாறத் தயாராகிறார்.
விடிவிளக்காய் இல்லாது போனேனே
துயிலும் உன் அழகை இரவெல்லாம்
பார்த்திருக்க
— திடீரென இயற்கை பற்றிய கவலை ஒன்று தோன்றுகிறது.
மரங்களுக்குப்
பயணமேது ?
— குறியீடு அர்த்தமுள்ளதாகிறது. மனம் ஒன்றாகிப் போனது. ஆனால் திருமணம் தடைப்படது . காரணம் ?
ஜாதகக் காடுகளில்
மூக்குக் கண்ணாடி தொலைத்தவர்களுக்கு
நம் முகங்களா தெரியப் போகிறது.
— என்கிறார்.
நாம் மாலை மாற்றிக்கொள்ளவில்லைதான்
கைகளே மாலையாய்க் கலந்து கொண்டோமே
— என்ற வரிகள் காதல் நாட்களை நகர்த்தவில்லை. அப்படியே நிறுத்திவிட்டுப் போயிருக்கின்றன.
பொன்மாலை ஆயிரம் தீபங்களேற்றும்
என்னுடைய இருட்டை அதில் எது தீர்க்கும்?
— துயரம் ஓய்ந்தபாடில்லை. எங்கும் எதிலும் அவள்தான் என்ற நிலை.
ரசத்தில் உன் முகம்
எப்படிக் குடிப்பது ?
பழத்தில் உன் முகம்
எப்படிக் கடிப்பது ?
— இனி அவள் இல்லை என்ற நிலை தோன்றிவிட்டது. நெருங்க முடியாதவளாகிவிட்டாள்.
உன் கோட்டையில்
கதவுகளைவிடப் பெரிய பூட்டுகள்
— என்கிறார் நீலமணி !
கடவுளை முன் வைத்து ‘ கீதாஞ்சலி ‘ எழுதினார் தாகூர். நம் தாகூர் நீலமணி காதலை முன் வைத்து
1987 – இல் ‘ உப்பு நதிகள் ‘ தந்துள்ளார். இதன் மூலம் மிகப்பெரும் கவியாளுமையாக நீலமணி கம்பீரமாக நிற்கிறார். குறுங்காவியங்கள் பெரும்பாலும் படைக்கப்படாத இக்காலத்தில் இக்கவிதை
காலத்தை வென்று நிற்கும் என்பது என் நம்பிக்கை !

Series Navigationகாத்திரு ! வருகிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்இலங்கைப் பயணம் சில குறிப்புகள்