கவிதைகள்

Spread the love

இருப்பிடம் – கவிதை

நான்
நான் தானா என்பதற்கு
சான்றிதழ்கள் கேட்கிறார்கள்,
வளர்ச்சியை அளவிடுகிறார்கள்,
ஏணியில் ஏறச்சொல்கிறார்கள்…

யாரேனும் சொல்லுங்கள்..

ஒரு மனிதன்
தனது பெயரால் மட்டுமே
அறியப்பட விரும்பினால்
அவன் எங்குதான் போகவேண்டும்?

– ராம்ப்ரசாத் சென்னை

************************************

அந்த கைப்பை – கவிதை

அன்றொரு நாள்
வீடு திரும்புகையில்
மல்லிச்சரத்தை
கூந்தலிலிருந்து
அவசரமாக‌ விடுவித்து
தனது கைப்பையில்
அவள் திணிக்கையில்
நான் கவனித்துவிட்டேன்…

அன்றிலிருந்து
ஒவ்வொரு நாளும்
நான் பார்க்கையிலெல்லாம்
குற்ற உணர்வு கொள்கிறது
அந்த கைப்பை…
– ராம்ப்ரசாத் சென்னை

************************************

அரங்கேற்றம் – கவிதை

பேருந்து பயணம்..

நான்..
சற்று தள்ளி அவள்..

வீசிய காற்றில் அவளின்
மேலாடை விலக‌
அவள்
சட்டென என்னைப் பார்த்தாள்…

நான்
வேறெங்கோ பார்த்தேன்…

எங்களுக்கு புரிந்துவிட்டது…

அத்தனை கச்சிதமாக…
அவள் ஒரு கவனச்சிதறலை அரங்கேற்றியதும்,
நான் ஒரு கண்ணியத்தை அரங்கேற்றியதும்..

– ராம்ப்ரசாத் சென்னை

************************************

நடிப்பு – கவிதை

அவள் என்னிடம்,
பேசுவாள்..
சிரிப்பாள்…
விளையாடுவாள்…
சீண்டுவாள்…
எப்போதும்போல…

ஒரு நாள்
ஒரு பெண்ணை
வசை பாடிய
என் கவிதையொன்றை
அவள் வாசிக்க நேரிட்டது…

அதிலிருந்து
அவள் என்னிடம்
பேசுவாள்..
சிரிப்பாள்…
விளையாடுவாள்…
சீண்டுவாள்…
அந்த ஒரு நாளுக்கு
முன்பிருந்தது போல‌…

– ராம்ப்ரசாத் சென்னை

************************************

ஆக்ரமிப்பு – கவிதை

எப்போதும் அவளை
பேரழகாகவே
பார்த்திருந்தேன்…

அன்றொரு நாள்
அவளை
கிட்டத்தில் பார்த்தேன்…

அவள்
முற்றிலும் எதிர்பாராத கணமொன்றில்
நிகழ்ந்திருந்தது
அந்த சந்திப்பு…

அப்போது தான்
குளித்திருந்தாள்…

முகப்பூச்சு இல்லை..
இமைகளில் மையில்லை…
உதட்டுச்சாயம் இல்லை…
புருவங்கள் செப்பனிடப்படவில்லை…
கூந்தல் தொகுக்கப்படவில்லை…

தன்னை
எவரும் அடையாளம் கண்டுவிடக்கூடாதென‌
அவள் உளமார‌
விரும்பிய கணங்களுள் ஒன்றை
நான்
ஆக்ரமிப்பேன் என்று
அவள் கனவிலும் நினைத்திருக்கமாட்டாள்…

Series Navigation2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.குற்றமே தண்டனை – விமர்சனம்