கவிதைகள்

தாமரைபாரதி

அதீதன் சயனம்

அதீதனுக்கென்று இருந்த
அத்தனை உறவுகளையும் அள்ளிக் கொண்டு போனது மரணம்
அழுதவர்களை புன்னகை
மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்
விம்மும் நெஞ்சோடு
மலர் மாலைகளை தன்
நெஞ்சோடு போரத்தியவர்களிடம்
தனது துர்மரணத்தை எண்ணி
அழாதீர்
மரணம் முடிவல்ல
ஒரு பயணம்
வேறொன்றை நோக்கிய பாய்ச்சல்
சிறு மாற்றம் என்றெல்லாம் தேற்றினான்
யாரும் அமைதியுற வில்லை
அவனுடைய
சின்னஞ்சிறு ஒரே ஒரு சகோதரி
அவனுடைய மருத்துவ உடைமைகளை
ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள்
பல்லக்கு தூக்கிகள் வந்தனர்
அழகிய சவப் பெட்டி
தயாராயிற்று
தாய் மாமன்
நமசிவாயம் வாழ்க வென்று
சிவபுராணம் பாடினான்
குளிப்பாட்டுவதற்காக
குளிரூட்டப் பட்ட கண்ணாடிப் பேழையினின்றும்
அவனை வெளியே கொண்டுவர யாரையும்
அனுமதிக்காத
அவனது தாய்
தன் மடியிலேயே
கண்ணீராலேயே
குளிப்பாட்டி
இடுகாட்டுக்கு அவனது
தந்தையுடன் அனுப்பி வைத்தாள்
அதுவரை அமைதியாக இருந்த
தந்தையோ
சவப்பெட்டியை மூடும் முன்
கதறியழும் மிருகம் போல
அவனது நெற்றியில்
முத்தமிட்டான்.

இவை அனைத்தையும்
இவ்வளவு காலமாக
நோயுற்றுப் படுத்தேயிருந்ந
அந்த அறையிலிருந்து பார்த்துக் கொண்டே யிருக்கிறான்
அதீதன்.

பாசாங்கு

மெல்ல மெல்லக் கொல்லும்
ஆலகாலம்
தீக் கொன்றையின் வண்ணமேந்திய
திருகுக் கள்ளிப்பாலின்
வெண்மை மேவிய தேவியுன்
முத்தம்.
நூறு நூறு ராஜ சர்ப்ப ராக்‌ஷஸர்களின்
சீறல்களில் தெறிக்கும்
ஒரு சொட்டு அமுதம்
உன்
ஒரு சொல்.
பாதாதிகேசம் பரவி
தேசாதி தேசம் விரவி
திக்கெங்கிலும் எண்
திசையெங்கிலும்
நீளும்
நீலக் கூந்தலின்
கயமை உன்
பிரிவுக்குப் பின்னான
பெரு மௌனம்.

நீ…………நான்!

பிரம்மாண்டம் தெறிக்கும்
மாளிகை ஒன்றினுள்
உருகி ஒளிரும்
ஒரே
ஒற்றைச் செஞ்சுடர் நீ

காற்று வெளியில்
நெளிந்தோடும்
செந்தழலில்
நீளும்
நீள நிழல் நீ

கவர்தலுக்காய்
வலிய இரையின்
உயிரையும் மாய்க்கும்
விடம் உமிழும்
நாகம் நீ

தேயிலைத் தோட்டங்களைப்
போல
பசுமை விரித்து
அடரும் நினைவு வனத்தில்
நீண்டு தவழும்
கருநாகமும் நீ

உன் அன்பில் முகிழ்த்துப் பின்
அன்பின்மையின்
வெம்மையால் தகிக்கும்
கானலும் நீ

உன் நினைவின்
கர்ப்பத்தில்
அவயமடைந்து பொரிந்த
குஞ்சொன்றின்
முதல்
கண்ணீர்த் துளி
நான்.

Series Navigation2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்