கவிதைகள்

Spread the love

1.பாழ் 

இந்தக் கதவுகள் தாமாகத் திறந்து 

தாமாக மூடிக் கொள்வன.

வெட்ட வெளியில் அலையும் காற்று 

கதவின் மீது மோதி

போர் தொடுப்பதில்லை.

தானாகத் திறக்கும் போது

சுதந்தரமாய் நுழைந்தால் போச்சு 

என்ற திடத்துடன்.

இந்தக் கதவுகளுக்குப் பின்னால் 

விரிந்து கிடக்கின்றன   

பெரிய கூடமும் அகலமான 

அறைகளும். 

அன்றொருநாள் தவழ்ந்த 

குழந்தையின் உடல் மென்மை 

கூடத்துத் தரையில் 

படுத்து கிடக்கிறது.

சுவர்களைத் தட்டினால் 

முன்னர் 

மாலைகளில் பரவிய  

பெண்களின் கீச்சொலியும் சிரிப்பும் 

சத்தத்துடன் வருகின்றன.

இரவென்றால் 

மகிழ்ச்சி நிரம்பிய அல்லது வலி ஊறிய 

முனகல்கள்.

நினைவுகளில் தோய்ந்து 

கனவுகளில் தேய்ந்து 

திரிசங்காய்த் திரிந்த 

நடமாட்டம். 

வியக்தியை மறந்து 

தடுமாறிய தருணங்கள்.

பாழடைந்த வீடு என்று 

சொல்லிச் செல்கிறார்கள் 

கண்ணும் காதும் மனமும் கேட்காத 

துரதிர்ஷ்டசாலிகள். 

2. நட்பு 

நேற்று உங்களுடன் கை குலுக்குகையில் தெரிந்தது.

உங்கள் கையில் ஒட்டியிருந்த

பொய் நேசம்.

பழசை எல்லாம் மறந்து விட்டதாய் 

ஆரத் தழுவிக் கொண்ட போது

முதுகில் கத்தி வைத்து

எச்சரிக்கை செய்வது போல்

உணர்ந்தேன்.

உங்களைச் சுற்றி எங்கும்

சுத்தம் என்றறிவித்தன

இறுகச் சார்த்திய

கதவுகளுடனே

வாழ்க்கை நடத்திய

வீடும் வாசலும்.

அச்சமயம் 

குதித்து என் மேல்

புரண்டு ஆடிய நாய்க்குட்டியை

அடித்து விரட்ட

எழுந்து வந்தீர்.

இருந்து விட்டுப்

போகட்டும் என்றேன்

அதன் கண்களில் தெரிந்த

பேதமை நிறைந்த 

நட்பைப் பார்த்து.

Series Navigationபைபிள் அழுகிறதுஒரு நாளைய படகு