கவிதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 14 in the series 3 ஜூலை 2022

 

 

ப.அ.ஈ.ஈ.அய்யனார்

ஈமக்குரல்களோடு

பீய்ச்சியடித்தது உதிரம்

கடன் தொல்லையால்

பெத்த மகனையும்

முந்தி விரித்தவளையும்

கீற்றொலியாய் பரவும்

சங்கினை

ரம்பத்தால்

வேரறுக்கும்

கொடிய மானுடனுக்கு

எங்கிருந்து

வந்ததோர்

தீராத நோய்

கடனெனும்

பணநோயால்…

நாற்றம் வீசும்

கடனென்ற

கொடுஞ்சொற்களால்

கரைபடிந்தது

இவனின் இரத்தமும்…

 

************

 

 

விடுதித் தட்டில்

ஒட்டியிருந்தன

நண்பனின் எச்சில்கள்…

 

துடைக்கிறது

காட்டுமழை

பால் சிந்தும் செவ்வரளி…

 

பகையைத் தூண்டுகிறது

உறிஞ்சிக்குடிக்கும் டம்ளர்

அம்மாச்சி வீடு..

 

தாகந்தணித்த வெள்ளரிக்கூடை

தெருவில் கேட்கிறது

ஒரு சொம்பு தண்ணீர்…

 

*************

 

 

காக்கைக் பயணம்

 

கசாப்புக் கடையில்

வெட்டிக் கூறுபோடும்

வெள்ளாட்டின்

இளந்துண்டிற்காக

முகங்குராவியிருக்கும்

காக்கைக் கூட்டங்களுக்கு

எதிர் வீட்டு

மொட்டை மாடியில்

காயும் வத்தல்கறி

என்னவோ

நஞ்சாக தெரிகிறது

 

ஊர் கடந்து

வான் முழங்கும்

வேட்டுச் சத்தம்

ஒன்றும் புதிதல்ல

காக்கைளுக்கு

 

ஞாயிறு பிறப்பில்

துவைத்துப் போட்ட

கொடிச்சீலையில்

இருந்து வருகிறது

வெள்ளாட்டின் வாசம்

காக்கைப் பயணமாய்…

 

**********

 

 

அறுபட்ட நூல்

 

தொலைதூரத்தில் பூத்திருக்கும்

வானவில்களை

மூழ்கடித்துச் செல்லும்

விமானங்களுக்கு

ஏதும் உண்டோ விதிகள்

 

சிறுபிள்ளையென

தெருவுகள் கடந்து

ஓடிக்கொண்டிருக்கிறேன்

வானவில்லை பார்ப்பதற்கு

ஆனாலும் பிடிக்க முடியவில்லை

 

அறுபட்ட நூலில்

விடுபட்ட பட்டமாய்

பறக்கிறேன் அப்போதும்

ஆனாலும் பிடிக்க முடியவில்லை

 

விதிகளும்

வீதிகளும்

திருப்பி அனுப்புகின்றன

என் வெற்று ஆசைகளாய்…

 

***********

 

 

கறவைக்காரர் வருகிறார்

முண்டியடித்துக் குடிக்கும் இளங்கன்று

வத்து பால் மாடு…

 

அத்தை குடமுடைத்தாள் முச்சந்தியில்

அப்பா குடமுடைத்தார் சுடுகாட்டில்

முகம் பார்க்கும் பாட்டியின் உடல்…

 

நடுத்தெருவில் இருந்து வந்தது

தூக்குச்சட்டியில் சோறு

உறங்கும் இழவு வீடு…

 

***********

 

 

அடைக்கட்டி வைத்த

முட்டைக் கோழியை

நிதம் நிதம்

திறந்துபார்க்கும்

சிறு குழந்தையென

திறந்து பார்க்கிறேன்

மடிக்கணினியை

கல்லூரி தேர்வு முடிவிற்காக…

 

**************

 

 

கிளை முத்தங்கள்

 

எதிர்வீட்டு

நிலைக்கண்ணாடியில்

தொங்கிய சாவிக்கொத்து

கூடவே வந்தது

என்வீட்டு வாசல்வரை

யதார்த்தமாக திரும்புகையில்

ஈர உதட்டோடு வந்த அவள்

என் சாம்பல் முகத்தினை

நனைத்துவிட்டுச் சென்றாள்

சாவிக்கொத்தைப் போலதொரு

கிளை முத்தங்களை …

 

**************

 

 

மோதிக்கொண்டன

பெருநகரத்து பசுங்கன்றுகள்

சாப்பிட்டு போடும் இலைக்காக…

 

ஆப்பக்கடையில்

நிரம்பி வழிந்தன கூட்டம்

ருசி அதிகம்…

 

கலைஞர்நகர் வழித்தட பேருந்தில்

பயணித்து வந்தார் எம்ஜிஆரும்

இன்பச் சுற்றுலா…

 

**************

 

 

இளமங்கையரின் கொடியறுந்து

குருதி யோடியது

முத்துநகர் வானவேடிக்கையில்…

 

வேர்வைபடிந்த முகத்தோடு

யாசிக்கிறாள் திருநங்கை

திரைச்சீலையை மூடும் மகிழுந்து ஓட்டுநர்…

 

பங்கு போடுகின்றன

இலையும் சூரியனும்

உச்சநீதி மன்றத்தின் நீதியை…

 

நெடுஞ்சாலையில்

சிதறிக் கிடந்தது உடல்

தாயோடு சேர்ந்து குட்டிநாயும்..

 

************

 

கல்குவாரியில்

வேட்டுச் சத்தம்

நிதம் தீபாவளி…

 

சிலந்தி புகுந்த வீட்டை

வாரமொருமுறை தட்டுகிறது

தூது அஞ்சல்…

 

வெடித்து சிதறியது

சிவகாசி வேட்டு

முச்சந்தியில் சவம்…

 

 

நிர்வாண‌ ஆற்றினை

மூடி மறைக்கிறது

துவைத்து காயும் சேலை…

 

மேம்பாலத்தில்

ஆயிரங்கால் பூச்சி

நகரும் தொடர்வண்டி…

 

பூவிறங்கிய புளியமரத்தின்

உடல் வத்திக் காய்கிறது

காய்ப்பு குறைவு…

 

சாக்கடை நீரில்

நுரைப் பூக்கள்

ஏந்தும் நெகிழிப்பைகள்…

 

************

 

 

அடுப்படியில் அடங்கமறுக்கும் பசி

 

அலமாரியில் அரிசி

எடுத்து வருமுன்னே

பொங்கி வழிந்தது

கொதியும் உலை

செங்கனல்களை

தின்றுவிட்ட

வெண்ணீர்த்துளிகள்

உமிழ்ந்து தள்ளியது

கருஞ்சாம்பல்களை

 

மீண்டும் அடுப்பை

பற்ற வைத்து

அரிசியை போடுகையில்

சருகடித்து பறந்துவிடுகிறது பசி

 

வீட்டின் மையத்தில்

அழுது ஆர்பரிக்கும்

தொட்டில் குழந்தை

மார்வத்திய மடியில்

முண்டியடித்து குடித்தும்

அடங்க மறுக்கிறது பசி…

 

********

 

 

பறித்திடாத பிரபஞ்சம்

 

இருளைக் குடித்து

கொண்டிருக்கும்

மாடத் தீபத்தில்

வத்தும் எண்ணெய்யாய்

திரியேறிக் கொண்டேன்

பிரபஞ்சத்தின் மேனியை

அணைத்துக் கொண்டேன்

சவக்குழியின்

மேற்பாதையில்

முளைத் தெழும்

நவ தானியங்களானேன்

கொடுஞ் சொற்கள்

நாற்றம் வீசும்

குளத்துக் கரையின்

அடிப்பரப்பில் பரப்பும்

கிளை வேர்களானேன்

யாரும் பறிக்கா திருக்க…

 

*********

 

 

மேலத்தெருவில் விழுந்த இழவில்

துக்கமேந்திக் கொண்டன கீழத்தெருவும்

ஆனாலும் இனம் பிரித்தது குழாயடி..

 

விறகு வெட்டியானுக்கு

உடம்பெல்லாம் அச்சுக்கள்

முள் படுக்கை…

 

தலையை வெட்டுகிறது

பக்கத்து வீட்டு தடுப்புச்சுவர்

பிஞ்சிறங்கிய மாமரம்…

 

********

 

 

வெய்யில் சுமை

 

முள் தைத்த சாலை

மீண்டும் செல்கிறேன்

அதே பாதையில்

 

கூட நெறைய வெள்ளரிப் பழம்

கூப்பிடத்தான் யாருமில்லை

வெய்யில் நுகர்ந்த

உச்சி முடி

வெந் திருச்சு

சோளக் கஞ்சியாய்

 

தந்தக் கழுத்து

ஒடிஞ்சிருச்சு

சிறகொடிந்த தும்பியாய்

 

காட்டுக் குருவிகள்

களம்வந்திறங்க

இரைத்து வந்தேன்

வெறுங் கையோடு…

 

******************

Series Navigationஇது என்ன பார்வை?கவிதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *