கவிதை நாற்றுகள்

வளவ. துரையன்

[’தச்சன்’ இராநாகராஜன் எழுதிய “நீரில் நிழலாய் மரம்” ஹைக்கூ கவிதைத்தொகுப்பை முன்வைத்து]

      புதுச்சேரியில் நடந்த தமிழ்ச் சிற்றிதழ்கள் மாநாட்டில்தான் நான் முதன்முதலாய் நாகராஜனைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் ‘தச்சன்’ சிற்றிதழை நடத்தி வந்தார். சிறிதுநேரம்தான் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவரின் குடும்பம், மற்றும் இலக்கிய ஆர்வம் போன்றவற்றை அறிந்து மகிழ்ந்தேன்.

      அண்மையில் வெளிவந்துள்ள அவரின் ஹைக்கூத் தொகுப்பு நீரில் நிழலாய் மரம்” முக்கியமான ஒன்று. புத்தகம் என்பது ஒரு படிப்பினைத் தரக்கூடியது. அது கவலைப்படும் மனத்தின் தோளில் கை போட்டு ஆறுதல் தரும். துன்பத்தில் துவளும்போதில் தோள் கொடுக்கும். தளரும்போது கைபிடித்துப் பயணத்தில் கூட வந்து துணையாய் நிற்கும். சில நேரங்களில் ஆசிரியனாய் வழிகாட்டும். காதலியாய் இருந்து மகிழ்வூட்டும். எனவேதான் புத்தக  வாசிப்பு இந்தக் கணினி யுகத்திலும் வற்புறுத்தப்படுகிறது.

      மனம் ஏதோ காரணத்தினால் அலைந்து கொண்டுள்ளது. அது மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். தோல்வி அல்லது துன்பமாகவும் இருக்கலாம். அந்த நேரத்தில் நூல்கள் வைத்திருக்கும் புத்தக அலாமரியைக்  கண்கள் வழி காண்கிறது. “ஓ. நம் மன அலைச்சலுக்கு மருந்து இதனுள் இருக்கிறதன்றோ?” என எண்ணி அங்கேயே நின்று விடுகிறது. இதைத்தான், “அலைந்த மனசு/நின்றுவிட்டது ஒரே இடத்தில்/ புத்தக அலமாரி” என்னும் கவிதை காட்டுகிறது. பிரச்சார நெடி இல்லாத அருமையான கவிதை இது.

      எல்லாத் துறைகளிலுமே இன்று போலிகளுக்குத்தாம் மகுடம் சூட்டப்படுகிறது. பொன்னாடை போர்த்தப்படுகிறது. அவை அசலினை விடத் தன்னைச் சிறப்பாகச் சிங்காரித்துக்  கொண்டு மனத்தை ஆக்கிரமிக்கின்றன. அது உண்மையன்று; போலி என்று உணர்த்த வேண்டியது படைப்பாளனின் பணியாகும். கிராமத்துத் திருவிழாக்களில் பார்க்கும் பொய்க்கால் குதிரையாட்டம் நிஜக்குதிரை மீது அமர்ந்து ஆடும் ஆட்டதை விட அழகாய் இருக்கும். ஆனால் அதை உண்மையென நம்பக்கூடாது என இந்த ஹைக்கூ உணர்த்துகிறது.

””நிஜக்கால்கள்தான்/வேடமிட்டுக் கொண்டன/பொய்க்கால் குதிரை”

இதே கவிதையை, “மதிப்பு/அசலுக்கு இல்லை/ஒப்பனைகளோடு நகல்”என்னும் கவிதையுடனும் ஒப்பிட்டுப் பார்க்க்கலாம்.

இன்றைக்கு மழைக்காலங்களில் வெள்ளம் போல மழைநீர் பெருகி வந்து கிராமங்களை நகரங்களை மூழ்கடிக்கிறது. யானகள் தம் இருப்பிடமான காட்டைவிட்டு வெளியில் வந்து மக்களை அச்சுறுத்தி விளைநிலங்களையும் பாழ்படுத்துகிறது. இவையெல்லாம் மனிதர்களின் ஆக்கிரமிப்புகளால் விளைந்தவைதானே? நீர்ப்பிடிப்புகளான ஏரி, குளங்கள் போன்றவை தூர்க்கப்பட்டு வீட்டுமனைகளாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. யானைகளின் வழித்தடங்கள் மற்றும் காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய அரசின் பல்வேறு துறையினரும் கைகள் கட்டப்பட்டு வாளாவிருக்கின்றனர். காரணம் அச்செயல்களைச் செய்பவர் பெரும் வசதி படைத்தோரும் அரசியல் வாதிகளும்தான். சட்டம் தங்கள் கையிலிருந்தும் அவர்களால் அவற்றைப் பயன்படுத்த முடிவதில்லை. காவல் தெய்வங்களான அவர்களே மௌனமாக ஆக்கிரமிப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “ஆக்கிரமிப்பில்/வயல்வெளிகள்/ ஊர்க்கோடியில் அய்யனார்” என்னும் கவிதை இதை உணர்த்துகிறது.

      அந்த அய்யனார் முன்பெல்லாம் வந்து தீமையைக் காணின் நடவடிக்கை எடுப்பார் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும். ஆனால் அவர் ஊர்க்கோடியில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. எப்படி அரசுத்துறையின் சட்டவிதிகள் பணத்தாலும் பயமுறுத்தலாலும் முடக்கப்பட்டு விட்டனவோ அதேமாதிரி  அவரது ஆயுதமான அரிவாள் திட்டமிட்டுக் களவாடப்பட்டு விட்டது. நீதியை வழங்க வேண்டியவர்களே தவறு செய்தால் யாரிடம் சென்று முறையிடுவது என்பதைத்தான் இக்கவிதை உணர்த்துகிறது.

    ”காணவில்லை அரிவாள்/யாரிடம்/முறையிடுவார்….?/ அய்யனார்”

 “விளைநிலமெங்கும்/கான்கிரீட் காடுகள்/ஏக்கத்துடன் மாடுகள் என்ன்னும் கவிதையும் இதையே மறைமுகமாய்க் காட்டும்.

காற்று என்றால் வீசிக்கொண்டே இருக்க வேண்டும்.  மரம் என்றால் அசைந்து கொண்டிருக்க வேண்டும். நதியென்றால் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். இவை இயற்கையின் நெறிமுறைகள். ஆனால் மனிதன் ஓடிவரும் நதிநீரை அணைகட்டித் தேக்கி பிறருக்குத் தர மறுக்கிறான். இதனால் நதிக்கே பசிக்கிறது என்கிறார் கவிஞர். இது இதுவரை யாரும் பார்க்காத புதுச்சிந்தனை.

”காவிரி/வாடுகிறாள்…./நதியின் பசி” என்னும் கவிதை இன்றையப் பிரச்சனையைப் பேசுகிறது. நதியின் பசி தீர்க்க ஒரே வழி அதில் நீர் வருவதுதானே? அப்படி நீர் வரவில்லையெனில் நல்ல விளைநிலங்கள் வறண்டு போகின்றன. அதில் பயிர் விளைந்தால்தான் ஏழை விவசாயி முகம் மகிழ்ச்சி பொங்கும். ஆற்றில் நீர் வரவில்லையெனில் அவன் எப்படிச் சிரிப்பான்? என்னும் கேள்விவியைக் காட்டுகிறது இந்தக் கவிதை.

”சிரிச்சு/ரொம்ப நாளாச்சு/வறண்ட நிலம்”

சில கவிதைகள் வெறும் செய்திகளாக நிற்கின்றன. எடுத்துக் காட்டுகளாக, “அழகான படிகள்/ மூங்கிலில்/ஏணி” மற்றும் ”மலர்கிறேன்/நித்தம்/அவள்புன்னகையில்”போன்றவற்றைச் சொல்லலாம்.

இயல்பானவற்றை மாற்ற முடியாது என்பது விதி. அவ்வகையில், “காலத்தாயின்/குறைப்பிரசவக்குழந்தை/பிப்ரவரி” என்னும் கவிதையும், வானம் அனுசரிக்கும்/துக்கமோ…./அமாவாசை” என்னும் கவிதையும் வெறும் உவமைகளாக நிற்கின்றன.

தொகுப்பு கையடக்கமாக இருப்பதும் அச்சு நேர்த்தியாக அமைந்திருப்பதும் பாராட்டுக்குரியது. இக்கவிதை  நாற்றுகள் படிக்கும் வாசகன் மனத்தில் பதிக்கப்பட்டுப் பலன் கொடுக்கும் என உறுதியாகக் கூறலாம்.

[நீரில் நிழலாய் மரம்” –ஹைக்கூ கவிதைகள்—’தச்சன்’ இரா. நாகராஜன்—தச்சன் வெளியீடு—430, டி.என்.எச்.பி,  4-ஆவது பிளாக்,. முகப்பேர் மேற்கு சென்னை-600005—பக்-64; விலை; ரூ30]

====================================================================================

Series Navigationஊனம்கஸ்வா ஈ ஹிந்த் – கம்யூனிஸ்டுகள்