கவிதை

மு.கோபி சரபோஜி

வெட்கமின்றி

நீரையெல்லாம்

அம்மணத்தால்

அலசி கழுவும்

சாண் பிள்ளைகள்……..

 

அம்மாவின் சேலைதுணியை

வலையாய் சுமந்து

கெரண்டைக்கால்

நீரில் தாவித்திரியும்

கருவாச்சி தேவதைகள்…..

 

காற்று கூட

விதேசியாய்

வேண்டாமென

கரையில் வந்துறங்கும்

தலைமுறை கண்டவர்கள்….

 

இரை வரத்துக்காக

ஒரு காலூன்றி

மறுகால் மடக்கி

தவம் கிடக்கும்

வள்ளுவ கொக்குகள்…..

 

புறம் சென்று

பொழுது சாய

அகம் திரும்புகையில்

தன்னழகு காண

கரை இறங்கும் வாயில்லா ஜீவன்கள்…

 

கரை மீது நின்று

சுள்ளி குச்சியும்

கரகரத்த குரலுமாய்

வீடு வந்து சேர் – என

எச்சரிக்கும் அம்மாக்கள்……..

 

இப்படியான

தன் சுயத்தை

நகரம் நுகர்ந்த

நம்மைப் போலவே

புறம் தள்ளி கிடக்கிறது

நம்மூர் கண்மாய்களும்!

 

மு.கோபி சரபோஜி

சிங்கப்பூர்.

Series Navigation7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்விசரி