கவிதை

This entry is part 26 of 41 in the series 23 செப்டம்பர் 2012

மு.கோபி சரபோஜி

வெட்கமின்றி

நீரையெல்லாம்

அம்மணத்தால்

அலசி கழுவும்

சாண் பிள்ளைகள்……..

 

அம்மாவின் சேலைதுணியை

வலையாய் சுமந்து

கெரண்டைக்கால்

நீரில் தாவித்திரியும்

கருவாச்சி தேவதைகள்…..

 

காற்று கூட

விதேசியாய்

வேண்டாமென

கரையில் வந்துறங்கும்

தலைமுறை கண்டவர்கள்….

 

இரை வரத்துக்காக

ஒரு காலூன்றி

மறுகால் மடக்கி

தவம் கிடக்கும்

வள்ளுவ கொக்குகள்…..

 

புறம் சென்று

பொழுது சாய

அகம் திரும்புகையில்

தன்னழகு காண

கரை இறங்கும் வாயில்லா ஜீவன்கள்…

 

கரை மீது நின்று

சுள்ளி குச்சியும்

கரகரத்த குரலுமாய்

வீடு வந்து சேர் – என

எச்சரிக்கும் அம்மாக்கள்……..

 

இப்படியான

தன் சுயத்தை

நகரம் நுகர்ந்த

நம்மைப் போலவே

புறம் தள்ளி கிடக்கிறது

நம்மூர் கண்மாய்களும்!

 

மு.கோபி சரபோஜி

சிங்கப்பூர்.

Series Navigation7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்விசரி

4 Comments

  1. Avatar ruthraa

    வரிகள்
    நாலாய் எட்டாய்
    மடக்கி
    வந்தாலும்
    உள்ளே தெரியும்
    அழகு.
    உள்ளே எரியும்
    ஒரு வெளிச்சம்.

    கெர‌ண்டைக்கால் அளவின்
    நீர்ப்பிம்ப‌ம்
    நெளிய‌லாய்
    சொற்க‌ளில் இழையாடுவ‌து
    அருமை.

    “குத்தொக்க”நிமிடத்துக்கு
    ஹடயோகியாய்
    ஒரு கொக்கின் தவம்.
    அந்த‌ கூர்மையில்
    க‌ழுவேறி நிற்கும்
    மௌன‌த்தின் வ‌லி
    சொற்க‌ளின் குருதிச்சொட்டுக‌ள்.
    அற்புத‌ உண‌ர்வு.

    என் இத‌ய‌ம் க‌ல‌ந்த‌
    பாராட்டுக‌ள்..
    க‌விஞ‌ரே!

    மெல்லிய‌
    பட்டாம்பூச்சி போன்ற‌
    இக்கவிதையை
    கூழாக்க‌
    பேனாவையே
    சம்மடியாக்கி
    அதை தூக்கமுடியாமல்
    தூக்கிக்கொண்டு
    சிலர் வந்தாலும் வருவார்கள்.

    எச்ச‌ரிக்கை க‌விஞ‌ரே
    எச்ச‌ரிக்கை.

    அன்புட‌ன்
    ருத்ரா

  2. Avatar Kavya

    இதோ நான் வந்துட்டேன்.
    கவிதைக்குத் தலைப்பு ‘கவிதை’யாம்!

    ஒருமுறை தன் நாடகத்தைக் காண இங்கிலாந்து ராணி எலிசபெத்தை செகப்பிரியர் அழைத்திருந்தார். அந்நாடகம் ”லியர் அரசன்”. ஒரு. துன்பவியல் நாடகம். நாடகம் முடிந்தவுடன் அரசியார், ”அடுத்த தடவை ஒரு இன்பவியல் போடும்; நான் வருகிறேன்” என்றார்.
    அப்படியே இன்பவியல் நாடகம் போட்டார் செகப்பிரியர். அரசியார் வந்தார். அந்தோ! செகப்பிரியர் நாடகத்துக்குத் தலைப்பை வைக்க மறந்து போனார்.

    நாடகம் முடிந்ததும், ”நன்றாக இருந்த்து. மிகவும் இரசித்தேன்! ஆனால் நாடகத்தின் பெயரென்ன?” என அரசியார் வினவ, செகப்பிரியர் சமாளித்தார் இப்படி:
    ‘உங்களுக்கு எது பிடிக்குதோ அதுவே”
    பின்னரென்ன? நாடகத்தின் தலைப்பு செகப்பிரியர் சொன்ன அச்சொற்களே.
    As You Like It. (or What You Will)

    நம் கவிதாயினி எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம்.
    கவிதையின் தலைப்பென்ன? As You Like Itஆ?

  3. Avatar Kavya

    கவிதை நன்றாகயிருக்கிறதென்பதைவிட கவித்துவம் நிறைந்த கவிதை எனச்சொல்வதே சாலப்பொருத்தம். சும்மா மெட்டாஃபார் (metaphor) மேலே மெட்டாஃபாரை அடுக்கி வைத்து எரிச்சலூட்டும் கவிதைகளைவிட இது தாவலை. ப்ளேயினா அடுக்குகிறார் இயற்கை நிகழ்ச்சிகளை.
    முதல் ஸ்டான்சா (stanza) நீரில் கால் அலம்பும் சிறுவர்களைப்பற்றி. கால் அலம்புதல் தமிழில் ஒரு ஈஃபிமிசம் (euphemism) என்று உங்களுக்குத் தெரியும். அதை பெரிசுகளும் செய்யும் என்பது கவிஞருக்குத் தெரியாதா?
    சரி, நீரில் அலம்புவர். அல்லது நீரை வைத்து அலம்புவர். நீரையெல்லாம் எப்படிமா அலம்புவார்கள்? எனக்குத் தெரியல. சொல்லுங்க!

    கருவாச்சி என்பது வோக் வேர்ட். (vogue word) ஒராள் எழுதிட்டா எல்லாரும் புடிச்சிப்பாங்க. தவிர்த்து விடுங்க தாயே.
    ’தவங்கிடக்கும் கொக்குகள்” இப்படி எழுதாக்கவிஞர்களை நான் பார்த்ததில்லை. Stale metaphor! Overused cliché !! அவை தவமிருப்பதைப்போல் தெரியாமல் வேறொரு விதமாக எந்த கவிஞருக்கும் தெரியமாட்டுக்குது. புதிதாக ஏதாவது?
    எனக்கு, அம்மாக்களை வைத்துப்பாடிய ஸ்டான்சா நல்லாயிருக்கு.

    சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டின் இயற்கை நிகழ்வுகளைப்பற்றி பாடுகிறாரென்றால் ஒரு சபாஷ் போடலாம்.

  4. Avatar மு.கோபி சரபோஜி

    காவ்யா உங்கள் விமர்சனத்திற்கு என் முதல் நன்றி.
    ஆடுதல்,துள்ளி குதித்தல் என்பதை குறிக்கும் எங்கள் வட்டார வழக்குச் சொல் தான்”அலசுதல்”.”அலம்புதல் என்றால் ”கழுவுதல்” என் பொருள்.அதனால் தான் அலசி கழுவுதல் என்ற பதத்தைப் பயன் படுத்தியுள்ளேன்.
    கருவாச்சி என்பது வைரமுத்து பயன் படுத்திய புதிய சொல் அல்ல.பல ஆண்டுகளாக கருவாப்பயலே,கருவாச்செருக்கி என்ற கேலிச் சொற்கள் கிராமப் புறங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவரால் அந்த சொல் பரவலாக தெரிய ஆரம்பித்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
    தவங்கிடக்கும் கொக்குகள் – ஒரு வாசிப்பாளனாய் கேட்டு பழகிய சொல்.ஒரு படைப்பளியாய் வேறு விதமாய் யோசிக்க முயல்கிறேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி காவ்யா.

Leave a Reply to ruthraa Cancel reply

Your email address will not be published. Required fields are marked *