கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)

This entry is part 13 of 15 in the series 23 ஜூலை 2017

அட்டை
சமகாலக் கவிதைகளை முன்வைத்து,சமகாலக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு எழுதிவரும்,’கவிநுகர்பொழுது’, தொடரில் இதுவரை பதினேழு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பதினெட்டாவதாக எழுதும் இக்கட்டுரை முற்றிலும் வித்தியாசமானது. ஆமாம். இதுவரை எழுதிய அனைத்து நூல்களுமே பதுக்கவிதை,நவீன கவிதை நூல்கள். இது மரபுக்கவிதை நூல்.
தமிழின், கடந்த ஐம்பது ஆண்டுக்கால கவிதைப் போக்கில் கவிதையின் வடிவம் மரபுக்கவிதையில் இருந்து மாறிவந்திருப்பதன் போக்கை நாம் அறிவோம்.
நான் என்னுடைய இளம் வயதில் மரபுக்கவிதைகள் எழுதியவன். எண்சீர் விருத்தங்களையும் அறுசீர் விருத்தங்களையும் எழுதிடும் பயிற்சி பெற்றவன் . பாரத ஸ்டேட்வங்கி- எழுத்தாளர் சங்க ப் பரிசு பெற்ற என்னுடைய முதல் கவிதை நூல் அநேகமாய் மரபுக்கவிதைகள் கொண்ட நூல்தான். எனவே மரபுக்கவிதை எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. தோழி ஈழவாணி, ‘சுவரெழுத்து’, என்னும் இந்நூலினை அனுப்பிய போது எனக்கு மிகுந்த மகிழ்வைத்தந்தது. அதற்கு பிறிதொரு காரணமும் உண்டு. இந்த நூலுக்கு எனக்கு மிஅகவும் நெருக்கமான நண்பரும் கவிஞருமான துரை.வசந்தராசன் முன்னுரை வழங்கியிருக்கிறார். “சுவரெழுத்தில்” உள்ள பெரும்பான்மையான கவிதைகள் நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடு என்று தன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார். நன்றிதானே மானுடத்தின் ஊற்று அன்புக்கு அடுத்தபடி.
இத்தொகுப்பில் பல்வேறு தலைப்புகளில் ஆன கவிதைகள் அடங்கியிருக்கின்றன. மரபு என்பது இலக்கணத்தில் எழுதுவது என்பது மட்டுமல்ல. பழைய மரபு சார் பழக்க வழக்கத்தைப் பேணுவதும் போற்றுவதும் தான் என்னும் அடிப்படையில் தமிழ்வாழ்த்தோடு தொடங்குகிறது தொகுப்பு.
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
என்று பாவேந்தர் பாடுவார். பாரதியார் தன் பாடல்கள் வாயிலாக அந்நியரிடமிருந்து தேசம் விடுதலை பெற வேண்டும் என்னும் கனவோடு பாடினார். பாவேந்தர் இந்தி மொழியாதிக்கப் பிரச்சனை முதன்மையாக இருந்ததன் விளைவாக தமிழ், தமிழின் சிறப்பு, தமிழை வணங்குவது போன்ற நிலையில் மிகுந்த அக்கறை கொண்டவராய் இருந்தார்.

கவின் முருகு

கவின்முருகு, தமிழிடத்தில் தெவிட்டாத சொல்கேட்கிறார். மொழியிடத்தில் சொல்கேட்டு விண்ணப்பது கூட ஒரு புனைவுதானே. இவர், புனைவதற்கு தமிழிடத்தில் சொல் கேட்கிறார்.
தமிழ்மொழிமட்டுமல்ல. நம்மை ஆளும் சக்தி என்னும் எண்ணத்தோடு,
தனித்தமிழின் ஆட்சியிங்கு வேண்டும், எல்லாம்
தமிழென்ப தாகிடவே வேண்டும், இன்பம்
இனித்தமிழ்த்தாய் பேசிடவே தமிழும் ஓங்கும்
இன்பமாகித் திளைத்திடவே இனிது காண்போம்
தனியாட்சி செய்திடவே மொழியும் உண்டு
தழின்றி நமக்கென்று என்ன உண்டு
என்னும் வரிகள் பாவேந்தரின் அடியொற்றியத் தமிழ்த்தாகம் கொண்டவையாக அமைந்திருப்பதை அறிய முடிகிறது.

அப்பா, அம்மா, ஆசான்,தம்பி,தங்கை,நண்பர் என உறவின் பாற்பட்டு தன்னின் உணர்வுகளைச் சொல்லி,’எப்படி மறப்பேன்” என்பது கடந்த காலத்தை மறவாத உள்ளக்கிடக்கையை உறுதி செய்கிறது.

சமூகத்தில் நிலவும் சங்கடங்கள் தானே எழுதத் தூண்டுகிறது. சாதியின் பேரால் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படையாகச் சாடுகிறார்.
சாதிமதப் பிரிவினைகள் தகர்ந்து தேசம்
சமத்துவத்தில் சிறந்திடவே கனவும் உண்டு
என்பதும்
இன்னல்கள் தோற்றிவிடும் சாதி வேண்டாம்
அழிகின்ற உடல்தானே என்றும் ஈதாம்
அதிலென்ன சாதியென்றும் மதங்களென்றும்
என்று இவர் எழுப்பும் வினா சமூகத்தில் நிலவும் சாதி மத உணர்வின் மீது வினா எழுப்புவதோடு வேண்டாம் என்கிற கவியுள்ளத்தின் தெளிந்த உணர்வினையும் பதிவு செய்கிறார்.சாதி மதங்களால் நிஅழும் மானுட எதிர்ப்பு குறித்த நுட்பமான விவரணகள் விசாரிப்புகள் இல்லாது நேரடியாகச் சொல்லி உள்ளக்கிடக்கையையும் உறுதி செய்கிறார். சாதியத்தின் பேரால் நடக்கும் வன்கொடுமைகள் பல்வேறு தருணங்களில் பல்வேறுகவிஞர்களால் எழுதப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக அறிய முடியும்.

கண்ணனைத் தோழனாய் தாயாய் அரசனாய் சேவகனாய் சீடனாய் சற்குருவாய் காதலனாய் கணம்மாவாக மாற்றிக் காதலியாய்ப் பாடியவன் பாரதி.
சுட்டும் விழிச்சுடர் தான், – கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, – கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் – புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் – தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!

சோலை மல ரொளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே – உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை – உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ, – கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
என்று கண்ணம்மாவைக் காதலியாகப் பாடினான் பாரதி.

கவின்முருகு பாரதியையே காதலியாக்கிப் பாடுகிறார். பாரதிமீது பற்றுக் கொண்ட கவிஞர் அவனைக் காதலியாக பாவிக்கிறார். எப்படி?
பார்போற்ற வந்தவனே காதல் கொண்டேன்
பைந்தமிழால் நீயெந்தன் காதல் பெண்ணே!
கார்மேக நிறத்தவளே!கண்ணில் தீயாய்க்
காரியத்தை வென்றவளே! கன்னிப் பாவே!
வேர்நட்டாய் என்னுள்ளே புரட்சி சொல்லி
வீணாக அஞ்சிடாத வீரம் தந்தாய்!
பாரதியைக் காதலியாகப் பாடும் கவிஞர் கவின்முருகு அதற்கானக் காரணம் சொல்வதைப் பாருங்கள்.
“தமிழால் எனக்கு வாய்த்த காதல் பெண்ணான பாரதியே ! அப்படி நீ காதல் பெண்ணாக மாறுவதற்கான கரணம் என்ன தெரியுமா? புரட்சியென்னும் எண்ணத்தை நீதான் எனக்குள்ளே வேரூன்றி நட்டாய்”, என்கிறார்.

மேலும் இவர் சொல்லும் காரணங்கள் மானுடத்தின் மீதான இவரின் காதலே பாரதியின் மீதான காதலாக புனைவு கொண்டிருக்கிறது எனலாம்.
சாதிகளைப் புறந்தள்ளிப் பாடி வந்தாய்!
சாத்திரங்கள் மடமையென்றே சாடி விட்டய்!
வாடிட்ட எல்லோரும் ஓட்டம் கண்டார்!
மடமையில்லா மானிடமே வேண்டும் என்றாய்!
மடமையில்லா மானிடத்தை பாரதி கோரியதால் தான் பாரதியைக் காதலியாக்கிக் கொள்ள இவரின் மனம் முனைகிறது. கண்ணனைக் காதலனாகக் கொண்டவனை கண்ணம்மாவைக் காதலியாகக் கொண்டவனை ,’னீ தான் இனி என் கண்ணம்மா’, என்று காதல் பொழிவு நிகழ்த்துகிறார்.

அறிஞர் அண்ணா குறித்த கவிதையில்,
பண்பட்ட தமிழினத்தைத் தழைக்கச் செய்தாய்
பண்பாளன் இவனெனவே விளங்கி ந்ன்றாய்!
துண்டாடத்திராவிடமோ யென்றே சாற்றி
தோள்கொடுத்தே ஒருங்கிணைத்தாய் தமிழர் நாடாய்
என்னும் வரிகளில் திராவிடத்தின் மீதும் தமிழர்க்கான நாடு என்பதன் உணர்வின் மீதும் இவர் கொண்டிருக்கும் நிலைப்பாடு வெளிப்படை.

தூர தேசத்தில் வாழும் போது நேரும் மனநிலையென்பது பல்வேறு தன்மைகள் கொண்டது.நன்மைகளும் சந்தோஷங்களும் வாய்க்கலாம் தான். என்றாலும் மண்ணை விட்டு நீங்கிடும் வாழ்வென்பது பெரும் சோகம்.
தூர தேசம் சென்றபோது கண்ணீர் சொட்டி
தொலைத்துவிட்ட மண்ணையெண்ணி நனைந்த நேரம்!
பாரமாகிப் போனமந்த் தினுள்ளே சோகம்
பத்திரமா யிருக்கிறதே யென்ன சொல்ல!
சாரமற்ற நினைவுகளால் வாழ வந்தும்
தாய்மண்ணை விடுத்த சோகம் தாக்கு திங்கே!
இத்தனை சோகம் அப்பிக்கிடக்கும் தூர தேசத்து வாழ்வில்.
தாரமொடு பிள்ளைகளும் சேர்ந்தே ஆடி
சகிதமாக இழந்துவிட்ட பொழுது மெஙே?
இழந்து விட்ட பொழுதென்று குறிப்பீட்ட கவிமனம் அத்தோடு நிற்காமல் எங்கே?எங்கே? என்னும் முடிவற்ற க் கேள்வியை எழுப்பிய வண்ணமே இருக்கிறது.

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்
என்று பாடுவான் பாரதி. ஆனால் இன்றைக்கு இருக்கிரா சூழல் என்ன? மரங்கள் அழிக்கப் படுகின்றன. காடுகள் அழிக்கப் படுகின்றன. விளை நிலங்கள் வீடுகளாகிவிட்டன. மனித நேயமே அற்றுப் போன சூழலில் மர நேயத்தை எதிர்பார்க்க முடியாது தானே. அறிவியல் பூர்வமாகப் பார்த்தாலும் அழிக்கப்பட்ட மரங்களால் தட்ப வெப்பம் மாறிப் போய் உலகம் மிக்கபெரும் இயற்கைச் சீற்றத்தை எதிர் கொள்ள வேண்டிய சவால் நம் முன் இருப்பதை அறிய முடிகிறது.அது குறித்த அக்கறை எந்தப் படைப்பு மனத்த்ற்கும் எழுவது இயல்பானது தான். கவின்முருகு , ”மரங்களே பேசுங்கள்” என்று மரங்களைப் பேசச் சொல்கிறார்.மரங்களை அழித்துவிட்டு என்ன செய்யப்போகிறோம்?

யாரிடம் தான் யாசிப்பீர் நிழலை!இன்றி
ஈந்திடவே யாருளரோ மொழிவீர்!நீங்கள்
பாரிடரில் ஞாயிற்றின் வெம்மை தீர்க்க
பைம்பொழிலாயத் தந்திடுவேன் நிழலை!தன்மை
குளிர்தந்து குலஞ்செழிக்க வளமும் தந்து
கோடையிலே காற்றுடனே நிழலும் நல்கி
தளிரிலைய்யல் சாமரங்கள் வீசும் நாங்கள்
சாயாது வளர்ந்துவாழ வெட்டாதீர்கள்
மனிதர்களே! உங்களின் சுய லாபத்திற்காக இயற்கையின் கொடையாய் உங்களுக்கு தரு நிழல் தருகிற எங்களை வெட்டுகிறீர்களே? நியாயமாவென மரங்கள் கேட்கின்றன. நாற்கரச் சாலை போடுவதற்காக வெட்டப்பட்ட மரங்கள் எவ்வளவு. கொடையில் பயணம் செய்தால் இடையில் இளைப்பாற மரங்கள் இருக்கின்றனவா?மிகப் பெரிய இன்னலை நாமே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தானே உண்மை.
பிறிதொரு இடத்தில்,
மரமழிக்கும் மனிதர்களைச் சாடு
மாமழையின் பெருமைகளைப் பேணு
என்னும் கவிஞனின் குரல் மரத்தின் குரலில் இருந்து உருவாகிறது.

நல்லார் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும் ந்ன்மை கிட்டும் என்பது நம் முதுமொழி. நல்லார் என்போர் யார்? பலரும் அதற்கான வரையறையை வகுத்திருக்கிறார்கள். கவின்முருகு ஒரு வரையறை சொல்கிறார்.
தானங்கள் தர்மங்கள் செய்யும்கைகள்
சாட்சியங்கள் இல்லாதே செய்யும் காணாய்
வானம்போல் உயர்ந்துநிற்பர் மானங் காத்து
மாட்சிமையில் செறிந்தவரே நல்லார் என்பர்
என்கிறார்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
என்பான் வள்ளுவன். அன்புதான் மனித நேயத்தின் வேர். மனிதநேயமென்ன உயிர்களின் ஒட்டுமொத்த நேயத்தின் வேர்.தனங்கள் தருகின்ற உள்ளம் வாய்க்க வேண்டும். கொடுப்பதில் இருக்குமின்பத்தை அனுபவிக்கிற மனமே குதூகலத்தைத் தக்க வைக்கிற மனம். அந்த மனம் வாய்க்க வேண்டும். உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அப்படிக் கொடுப்பது மட்டுமல்ல. வலதுகையால் கொடுப்பது இடதுகைக்குத் தெரியக் கூடது. விளம்பரத்துக்காகச் செய்வது வீண். அவ்வாறு சாட்சியங்கள் இல்லாதூதவிசெய்கிற மனம் உள்ளவரே நல்லார் என்கிறார்.
சாதிக்க தூரங்களில்லை
எட்டிவிடும் தூரம் தான் வானம்
என்று நம்பிக்கைக் கிற்றுகளை உடய ஞாய்றின் கிழக்காய் வெளிச்சமிடுகிறார்.
சமூகத்தின் அவலங்கள் மனத்தை எப்படியெல்லாம் பாடு படுத்துகின்றன என்பதை இவரின் பாடுபொருள்களின் மூலமாக அறிய முடிகிறது. மரபின் வீச்சு துள்ளியமாய்த் துலங்குவதை வாசிப்பின் மூலம் நம்மால் உணர முடிகிறது. எண்ண வகைப்பா என்பதை அந்த இடத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார்.

மொழியின் மீதும் உயிர்களின் மீதும் மானுடத்தின் மீதும் மண்ணின் மீதும் தீராத பற்றுக் கொண்ட ஒரு கவிமனத்தின் சொற்களால் கட்டமைக்கப்பட்ட மரபுக்கவிதைகளை வாசிக்கிற வாய்ப்பு, வெகு நாட்களுக்குப் பின் கிட்டியது பெரு மகிழ்ச்சி.

கவிஞர் கு.நா.கவின்முருகு, கருத்தாலும் கவிதையாலும் நிலைத்த பெயர் பெற வாழ்த்துகிறேன்.

Series Navigationமொழிவது சுகம் 23 ஜூலை 2017இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *