கவிமுகில் – தாராபாரதி விருது வழங்கும் விழா

 

சிறகு இரவிச்சந்திரன்.

பத்தாண்டுகளுக்கு முன்னர், கவிஞர் தாராபாரதி பெயரால், விழா எடுத்து, விருது வழங்கியவர்களில் முன்னோடி, இலக்கியவீதி இனியவன். அப்போது அவருடன் துணை நின்றவர் தாராபாரதியின் அண்ணன் கவிஞர் மலர்மகன். முதுமை காரணமாக இனியவன் செயல்பட இயலாததால், கடந்த சில வருடங்களாக, ஆண்டு தோறும் அமரரான தம்பிக்கு விழா எடுத்து, சிறந்த நூல்களுக்குப் பரிசும் பாராட்டுப்பத்திரமும் கொடுக்கிறார் மலர்மகன்.
வெறுங்கை என்பது மூடத்தனம் / விரல்கள் பத்தும் உன் மூலதனம் என்ற நம்பிக்கை வரிகளை எழுதிய தாராபாரதி அறக்கட்டளையின் 12வது ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில், கன்னிமரா நூலக அரங்கத்தில் செப். 1 மாலை நடைபெற்றது. ஈரோடு தமிழன்பன் தலைமையில், மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா. மோகன், இலக்கிய வீதி இனியவன் போன்றவர்கள் கலந்து கொண்ட விழா இது.
கவிமுகில், தாராபாரதியின் கவிதைகள் பால் மாறா அன்பு கொண்டவர். 24 ஆண்டுகளாக எழுதி வரும் இவரது 17வது நூல் “ சொக்கப்பனை “ என்கிற கவிதை நூல். ஓவியர் சிபியின் கருப்பு வெள்ளை ஓவியங்களுடன் நேர்த்தியாக அச்சிட்ப்பட்ட இந்த நூல் விழாவில் வெளியிடப்பட்டது.
புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ, நாவல், சிறுகதை, கட்டுரை எனப் பல பிரிவுகளில் மொத்தம் 39 படைப்பாளர்களுக்கு விருதும் பத்திரமும் வழங்கப்பட்டன. அன்பாதவன் எழுதிய ‘ பம்பாய் கதைகள் ‘, வளவ. துரையன் எழுதிய புதுக்கவிதை நூலான ‘ விடாத தூறலில் ‘, பிச்சினிக்காடு இளங்கோவின் சிறுகதை நூல், புலம் பெயர்ந்த எழுத்தாளர் அகில் எழுதிய ‘ கூடுகள் சிதைந்தபோது ‘ திருச்சி தனலட்சுமி பாஸ்கரனின் சிறுகதை நூல் ஆகியவை பரிசு பெற்ற சில.. மூத்த எழுத்தாளர் தமிழண்ணல் முதல் இளம் எழுத்தாளர் கன்னிக்கோயில் ராஜா வரை எல்லோருக்கும் பரிசு வழங்கியது நிறைவாக இருந்தது. படைப்புக்கான விருது தகுதியின் அடிப்படையிலேயே தவிர, அகவையின் அடிப்படையில் அல்ல என்பது கால மாற்றத்திற்கான சான்று.
இரா. மோகன் பேச்சில் யதார்த்த நகைச்சுவை அதிகம். “ நான் என் மனைவியுடன் இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன். இப்போதெல்லாம் யாராவது ‘நீங்க மதுரையா? சிதம்பரமா? ‘ என்று கேட்டால் தஞ்சாவூர் என்று சொல்லி விடுகிறேன். அம்மாவுக்கு, இந்த அம்மாவோ இல்லை அந்த அம்மாவோ, தலையாட்டி விட்டால் எங்களுக்கெல்லாம் நல்லது. “
ஈரோடு தமிழன்பன் போகிற போக்கில் பல தகவல்களைத் தந்தார் தன் உரையில்:
“ கவிமுகில் எழுதுகிறார் ‘ கறுப்பு நந்தவனத்தில் வெள்ளை ரோமங்கள் ‘ என்று. கறுப்பு என்பது ஒரு நிறமே அல்ல. வானவில்லில் கறுப்பு இருக்கிறதா? அதனால்தான் பாரதி கூட குயிலை கானத்தை வைத்துச் சுட்டுகிறான். ஒரு கவிஞன் எழுதுகிறான் ‘ இளம் வயதில் நீ சாப்பிட்ட பால்தான், வயதான பின் வெள்ளை மயிராக வெளியே வருகிறது‘ என்று. அதையும் மறைக்க மை அடித்தால், அதையும் கூட கவிதையாக்குகிறான் இன்னொருவன். இளமை போனதே என்கிற துக்கத்தைக் காட்டும் கறுப்புக் கொடியாம் மையடித்த ரோமம். “
விழா மேடைப் பிரபலங்களுக்கு அவர்கள் படங்களையே வரைந்து, சட்டமிட்டுப் பரிசாகக் கொடுத்தது, புதுமையாக இருந்தது.
தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைத்தது நிகழ்வுக்கு முழுமையைக் கொடுத்ததை மறுப்பதற்கில்லை. நிகழ்வு மாலை ஆறு மணிக்குத் தொடங்கி எட்டு மணிக்கு முடிந்தது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய விசயம். அதற்கப்புறம் இனிப்போடு இரவு சிற்றுண்டியைக் கொடுத்தது கவிமுகிலின் தாராளம்.
0

Series Navigationஆற்றங்கரைப் பிள்ளையார்2014 ஆண்டில் ஏவப்படும் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 வக்கிரக்கோள் மண்ணெடுத்துப் பூமிக்கு மீளும்