காணாமல் போன தோப்பு

காணிநிலம் வேண்டும் – பராசக்தி
காணிநிலம் வேண்டும்
………………………………-அந்தக்
காணிநிலத்திடையே ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் ; அங்குக்
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப்பனிரெண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும்..

பாரதி என்னை மன்னித்துவிடு…
என் கிராமத்தின் எல்லை வந்தவுடன் காற்றில் கலந்து வந்த உன் பாடல்
இன்று ?
பாரதி, காணாமல் போனது உன் காணிநிலமா?
உன் கவிதை மாடமா?
அந்தத் தென்னை மரங்களா?
தெரியவில்லை.

திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்தோ /நாகர்கோவில் ரயில் சந்திப்பிலிருந்தோ மகிழூர்தியில் வரும்போது என் கிராமம் வந்துவிட்டது என்பதற்கு அந்த தென்னந்தோப்பே சில வருடங்களுக்கு முன் அடையாளம். அடர்த்தியான தோப்பு. ரோட்டோரம். கிணற்றுப்பாசனத்தில் முருங்கைக்காயிலிருந்து கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, தென்னை என்று பூமி எங்கும் செழித்து நிற்கும் தோப்பு. அந்தக் காட்சியே மனதைக் கொள்ளைக் கொள்ளும். எப்போதாவது தென்னந்தோப்புக்குள் நுழைந்துவிட்டால் இளநீருடன் வரவேற்பு, சாம்பாரில் போட்டால் நாலு ஊருக்கு மணக்கிற மாதிரி முருங்கைக் காயும் கருவேப்பிலையும், வேண்டாம் என்று சொன்னாலும் ‘வச்சுக்கோமா, இந்த மண்ணு ருசி வேறு எங்கும் கிடைக்காது’ என்பார் தோட்டத்துக்காரர். (நான் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஏதொ இந்த தோட்டத்தின் காவலாளியாக இருப்பாராக்கும் என்று. அப்படி இல்லை , அவரே தான் தோட்டத்தின் உரிமையாளரும் என்பதைக் கூட பல வருடங்கள் கழித்து தான் நான் தெரிந்துக் கொண்டேன்!)

கடந்த வருடம் ஜனவரியில் ஊருக்குப் போயிருந்தப் போது தோட்டம் வாடிப் போயிருந்தது. பார்த்தவுடன் அழுகையே வந்துவிட்டது. வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றானே என் பாட்டன், அந்த வேதனை என்னவென்று எனக்கும் புரிந்தது. ஏன், என்ன என்று தெரிந்துக் கொள்ளவில்லை என்றால் தலை வெடித்துவிடும் போலிருந்தது. அந்த தோட்டம் குறித்த சில நினைவுகள் மனதில் ஓடியது. அந்தக் கிராமம், கிராமத்தின் மனிதர்கள், நான் கண்டு அதிசயித்த அவர்களின் வாழ்வியல் என்று ஒவ்வொன்றாக நினைவில் வந்தது.

எனக்கு விவசாயம் குறித்து அதிகமாகத் தெரியாது. என் பிறந்த வீட்டில் கடல் கடந்து வணிகம் செய்தவர்கள். நிரந்தரமாகிவிட்ட மும்பை பெருநகர வாழ்க்கையில் என் கணவரின் கிராமமும் அந்த மனிதர்களும் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள். அந்த ஊரில் தினமும் தோட்டத்திற்கும் வயலுக்கும் வீட்டிலிருக்கும் எல்லோரும் போய் வருவது சகஜம். குளிப்பதில் இருந்து காலைக் கடன் கழிப்பதுவரை அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்டது அவர்களின் நஞ்சையும் புஞ்சையும். அவர்கள் தங்கள் வயலின் வரப்போரத்தில் கூட காலில் செருப்பணிந்து நடக்க மாட்டார்கள். அட.. வயலில் விளைந்த கத்தரிக்காயை குறுக்காக வெட்டக்கூடாது, நீளவாக்கில் தான் வெட்ட வேண்டும் என்பார்கள்!

இதை எல்லாம் விட இன்னொரு மிகப்பெரிய அதிசயம்… அந்த ஊரில் இருக்கும் எங்கள் அம்மன் கோவில். அந்தக் கோவிலில் பூஜை முடிந்தவுடன் வெறி ஏறிய சாமியாடியிடம் என்ன கேட்பார்கள் தெரியுமா அந்த மக்கள்? எனக்கு இதைத் தா, அதைத் தா, என் பிள்ளைக்கு வேலைக் கிடைக்குமா, பிள்ளைப் பிறக்குமா..? இப்படி எதையும் கேட்க மாட்டார்கள்… அவர்கள் கேட்பதெல்லாம்… “மழைப் பெய்யுமா, நம்ம குளம் நிறையுமா? ‘ என்பது மட்டும் தான்! அவர்கள் வாழ்க்கையுடன் அவ்வளவு நெருக்கமானவை அந்த மண்ணும் மண்ணின் செடிக் கொடிகளும் நீர்நிலைகளும்.

இன்று?

தென்னைந்தோப்பைக் காணவில்லை. 25 வருடங்களுக்கு முன் ரூபாய் 37000/க்கு வாங்கச் சொல்லி என்னிடம் தான் முதலில் விலைக்கு வந்தது அந்த தென்னந்தோப்பு. “மண்ணில் போட்டதும் பொன்னில் போட்டதும் வீணாகது தாயே, வாங்கிப்போடு” என்றார்கள் என் குடும்பத்தினர். அன்றைக்கு அந்த தென்னந்தோப்பை வாங்கி நம்மால் என்ன செய்ய முடியும்? என்று பின்வாங்கினேன். கையில் ரொக்கமாக பணமிருந்தப்போதும் வாங்கவில்லை. அதே தென்னந்தோப்புத்தான் இன்றைக்கு சில கோடிகளுக்கு விலைப் பேசி விற்கப்பட்டிருக்கிறது! வீட்டுமனைகளாக. !! மீண்டும் என்னிடம் வாங்கச் சொன்னார்கள். விற்காதீர்கள் அய்யா, உங்கள் உழைப்பாக்கும் இந்த மரங்களும் செடிகளும் என்றேன் தென்னந்தோப்புக்காரரிடம். அவர் வறண்ட புன்னகையைப் பதிலாகத் தந்தார்.

“நீயே வாங்கிக்காம்மா, உனக்கு வேணும்னா ரண்டு மூணு லட்சம் குறைச்சு தர்றேன்” என்றார்.

இப்போது என் தென்னைகளைக் காக்கும் பண வலிமை என்னிடம் இல்லை. மாதச்சம்பளம் வாங்கி வாங்கிய சம்பளத்திற்கும் ஒழுங்காக வருமான வரிக் கட்டும் என் போன்றவர்களிடம் அவ்வளவு பணமிருக்க சாத்தியமே இல்லை. வாங்கியவர் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி வீட்டு மனைகளாக பட்டா போட்டிருக்கிறார். அதிலும் பலகோடிகளை அவர் லாபம் ஈட்டி இருப்பார்!

மொட்டையாக காட்சியளிக்கும் அந்த மண்ணைப் பார்க்கும் போது வயிறு’ பகீர் என்கிறது. இது எல்லாவற்றையும் விட மனசை அரித்த இன்னொரு நிகழ்வு… வயல் வரப்பில் செருப்புக்கூட போடாமல் நடந்த என் கிராமத்து மக்களை வெட்டி வீழ்த்தப்பட்ட தென்னை மரங்கள் சங்கடப்படுத்தவில்லை. யாருக்கும் அதைப் பற்றிய கவலை இருப்பதாகவே தெரியவில்லை. எல்லோருக்கும் தென்னந்தோப்புக்காரருக்கு தோப்பை விற்றதில் கிடைத்த லாபமும் பிள்ளைகளுக்கு அவர் அதைப் பகிர்ந்து கொடுத்தக் கதையும் தான் இரவும் பகலும் சுவராஸ்யமாக. என்னைப் பார்த்து சிலர் பாவப்பட்டார்கள் ‘உங்கக்கிட்டே தானே முதல்லே வந்துச்சு விலைக்கு, வாங்கிப் போட்டிருந்த இன்னிக்கு..” என்றார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் பெரிசுகளும் பெரிசுகளின் வாரிசுகளும் அவரவர் நிலபுலன்களை விற்றால் இன்றைய விலையில் எவ்வளவுக்குப் போகும்? என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில வீடுகளில் அண்ணன் தம்பி சண்டைகள் கூட ஆரம்பித்துவிட்டது.

————
(2)
நேற்று ரூபாய் 15க்கு வாங்கிக்கொண்டிருந்த தேங்காய் ரூபாய் 20 என்றார் கடைக்காரர். அவரிடம் ஒன்றுமே சொல்லாமல் வாங்கிக் கொண்டு வந்தேன். மருத்துவர் தேங்காய் அதிகம் சாப்பிடாதீர்கள், கொழுப்பு ஏறிவிடும் என்கிறாரே! மருத்துவர் சொல்வதைக் கேட்போம். போகிற போக்கில் திருமணம், கோவில் பூசை, தைப் பொங்கல் என்று சில முக்கியமான நாட்களில் மட்டும் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்தப்’ பொருளாக தேங்காய் ஆகிவிட்டாலும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

————

(3)

அரசு அறிக்கை ஒன்று 21 இலட்சம் ஹெக்டர் விளை நிலம் கையகப்படுத்தப் பட்டிருப்பதை ஒத்துக்கொள்கிறது. இதைவிட பலமடங்கு அதிகம் இருக்கலாம் என்பதை நாமே ஊகித்துக் கொள்ள முடியும். கையகப்படுத்தப்பட்ட 21 இலட்சம் ஹெக்டர் நிலத்தின் விளைப்பொருள் கிட்டத்தட்ட தமிழகம் மாதிரி ஒரு மாநிலத்து மக்கள் அனைவருக்குமே மூன்று வேளை பசி ஆற்றி இருக்கும் என்று சொல்கிறார்கள். சரி விட்டுத்தள்ளுங்கள் .. இந்தச் சாப்பாட்டுக்கு இல்லாதப் பஞ்சைப் பரதேசிகளைப் பற்றி யாருக்கு கவலை?

Addressing a National Development Council meeting on December 23, 2006, Prime Minister Manmohan Singh said: “I agree that we must minimise the diversion of agricultural land and, given the choice, must opt for using wasteland for non-agricultural purposes. However, it must be kept in mind that industrialisation is a national necessity if we have to reduce the pressure on agriculture and provide gainful, productive employment to millions of our youth who see no future in agriculture.”
அவர் சொன்னது சரிதான். தடுக்கி விழுந்தால் எஞ்சினியரிங் காலேஜ். பல இலட்சம் எஞ்சினியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் வருவதைத் தடுக்க இந்தியாவைத் தொழில் மயமாக்குவது கட்டாயம் தான்.! இந்தியாவை வல்லரசாக்கும் கனவுகளில் இது முதல் கட்டம். வாழ்க!

பொருளாதர வளர்ச்சியில் இரண்டாவது இடத்தை இந்தியா எட்டிப்பிடித்துவிட்டதாக பாராளுமன்றத்திலிருந்து பல்வேறு புள்ளிவிவரங்கள் வந்துக் குவிகின்றன. ஆனால் அதே இந்தியாவின் வறுமை நிலை, அதிலும் குறிப்பாக சில எட்டு மாநிலங்களில் வறுமை நிலை 26 ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை’ விட அதிகமாக இருக்கிறது . (Jason Buke, “More of world’s poor live in India than in all sub-sahara Africa, says study – The Guardian (London) 14, Julyu 2010)

உலகத்திலேயே பெரும்பாணக்காரர்கள் 100 பேர் இந்தியர்கள் தான்! அவர்களின் வருமானம் கடந்த ஆண்டு 276 பில்லியன் டாலராக இருந்தது இந்த ஆண்டு 300 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். கேட்கவே பெருமையாகத்தான் இருக்கிறது… ஆமாம் பில்லியனுக்கு எத்தனைப் பூஜ்யங்கள்?

———————-

புதியமாதவி, மும்பை

Series Navigationகுரூரம்நினைத்த விதத்தில்