காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா

 karumalai

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

காதலர்கள்   நாளென்றால்   கடற்க   ரையில்

கரம்கோர்த்து   உடலுரசித்   திரிவ   தன்று

காதலர்கள்   நாளென்றால்   சாலை   தன்னில்

காண்பவர்கள்   முகம்சுளிக்க   நடப்ப   தன்று

காதலர்கள்   நாளென்றால்   சோலைக்   குள்ளே

கள்ளத்தில்   முத்தமிட்டு   அணைப்ப   தன்று

காதலர்கள்   நாளென்றால்   காத   லித்தோர்

கடிமணம்தான்   புரியும்நா   ளாக   வேண்டும் !

 

மலர்கொடுத்து   புன்னகைத்து   மகிழ்வ   தோடு

மணப்பதற்கு   நாள்குறிக்க   வேண்டும்   அன்று

பலர்பார்க்க   வாழ்த்துகளைச்   சொல்வ   தோடு

பலர்வாழ்த்த   நாள்குறிக்க   வேண்டும்   அன்று

அலரெழுந்து   பழியுரைகள்   பிறக்கு   முன்னர்

அரும்மன்றல்   நாள்குறிக்க   வேண்டும்   அன்று

நலமாக   இருவீட்டார்   கலந்து   பேசி

நற்காதல்   வெற்றிபெற   வேண்டும்   அன்று !

 

உளம்இணைந்த   போல்சாதி   மதமி   ணைந்தே

உறவாகி   வேறுபாடு   மறைய   வேண்டும்

குலப்பெருமை   பேசிமனம்   பிரிக்க   எண்ணும்

குறுமனங்கள்   மாறிஇசை   வளிக்க   வேண்டும்

களவொழுக்கம்   கற்பொழுக்கம்   ஆக   வேண்டும்

கனவெல்லாம்   நனவாகக்   காண   வேண்டும்

வளமான   வாழ்வமைய   காத   லர்நாள்

வழிகாட்ட   வேண்டுமென   வாழ்த்து   வோம்வா !

( காதலர்நாள் பிப்ரவரி 14   அன்றைய நாள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவாவில் எழுதப்பட்ட கவிதை )

Series Navigationஉதிராதபூக்கள் – அத்தியாயம் 2ஆம் ஆத்மி கெஜ்ரிவால்