காத்திருப்பு

Spread the love

காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய
தூசுப் படலத்தினுள்
சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும்
அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன
பகல் முழுதும் தீக் கண்களால்
பார்த்திருந்த வெயில்
மேகக் கூட்டத்துக்கு
மேலும் நீர் கோர்த்தது

கதவுகளைத் திறந்தேதான்
வைத்திருக்கிறேன்
எந்த ஓவியனாவது வந்து
வெயிலைப்போல
அல்லது சாரலைப்போல
ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும்
ஒரு தபால்காரனாவது வந்து
ஏதேனும் தந்துசெல்லட்டும்
ஒரு வண்ணத்துப்பூச்சி
பூக்களின் வாசனைகளோடு
வந்துசெல்லட்டும்
அன்றேல்
மெதுநடைப் பூனையொன்றேனும்

– எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

Series Navigationலாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)என் காவல் சுவடுகள் – புத்தக மதிப்புரை.