கானல் வரிகள்

 

அழகர்சாமி சக்திவேல்

 

கோவலனும் மாதவனும்

கடைசியில் பிரிந்தே போனார்கள்…

அவர்தம் கானல் வரிகளால்

காதல்…கானல் நீர் ஆனது

 

கடலை ஒட்டிய ஹோட்டல் அறை…

அலைகள் ஆர்ப்பரித்தது..

கோவலன் மாதவன் ஆசை மனங்களைப்போல..

முரட்டுத்தனமாய்..

ஒரு பேரலை இன்னொரு பேரலையை ஆரத் தழுவியது…

ஒன்றை ஒன்று கடுமையாய் மோதிக் கொண்டன..

ஆவேச முத்தங்கள்…சொச்சங்கள்…

எல்லாம் முடிந்தது..அலைகள் அடங்கியது…

கடல் கடைசியில் அமைதியானது…

 

மாதவன் இன்னும் படுக்கையில்..

கோவலன் எழுந்தான்… கடல் அலைகளைப் பார்த்தான்..

நெஞ்சில் இப்போது அலைகள் இல்லை…

ஆனால் அலையில் அலையும் மீனகள் இருந்தது..

கோவலனின் நெஞ்சில் கண்ணகி மீன்…

 

அலைகளில் பலவகை

அவை  நான் ரசிக்கலாம்

ஆனாலும் ஆண்  அலைகளின் ஆர்ப்பாட்டம்

அத்தனையும் அன்போடு சகிக்கும் பெண் மீன்கள்

கற்பு மீன்களைத் தன்னுள் கொண்ட கடலே வாழி.

மீன் காதல் வாழி.

 

கோவலன் கண்ணகியுள் உருகினான்.

மாதவனோ மறுகினான்.

கண்ணீர் பெருக்கினான்.

 

அலைகளிலும் மென்மை உண்டு..

அதற்கும் குடும்பம் உண்டு

கரை அண்ணன், மீன் தங்கை

அத்தனை பேர் பாசமும் உண்டு

அலைகள் மோதி மோகம் கொள்ளும்

அழகிய அலையாய் எனைப் படைத்த

கடலே வாழி..

உன் அலைகளின் ஓர் காதல் வாழி.

மாதவனின் கண்ணீர்க் கானல்வரி.

 

அலைகளுக்குள் காமம் வரலாம்..

ஆனால் காதல் வராது…

பெண்ணில் மட்டுமே காதல்..

பூக்கள் கொண்டே பூஜை..

கோவலன் உறுமினான்..

 

மென்மை என்பதால் பூக்கள்

பெண்ணாய்த் தெரிந்தாலும்

ஆண் மகரந்தமும், பெண் சூல் வித்தும் கொண்ட

பூக்கள் ஒரு திரு நங்கை.

மாதவன் பொருமினான்

 

பூவைச் சூடிக்கொடுத்த நாச்சியின்

காதலே புனிதம்

கோவலன்  கனன்றான்.

 

கண்ணனை காதலனாக்கி ஓர் காதல் காதலித்த

பாரதியின் கவிதையிலும் புனிதம்

கன்னியாய் மாறி கிருஷ்ணனோடு மோகம் செய்த

பரமஹம்சர் கதையிலும் புனிதம்.

மாதவன் பகன்றான்.

 

உன்னில் இருக்கும் அலை

உண்மையில் நான் இல்லை

கோவலன் பிரிந்தான்.

என்னில் நீ மட்டும்..அது புத்தருக்குத் தெரியும்..

மாதவன் கரைந்தான்.

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

 

 

Series Navigationஅ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்