காப்பியக் காட்சிகள் 6.வீடு​பேற​டையும் வழி

 

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலையாகி முக்தியடையும் வழியாகிய இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையையே வீடுபேறு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வுயிர் பிறவிப் பிணிகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதற்கு நற்காட்சி, சீலம், தானம் ஆகியவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் வேண்டும். இம்மூன்றையும் சமணசமயம் வீடுபேறு அடைவதற்கான வழிமுறைகளாக எடுத்துரைக்கின்றது.

நற்காட்சி

நற்காட்சி என்பது அருகப்பெருமானின் தாமரை     மலர் போன்ற பொன்னடிகளைப் பணிந்து அவன் இன்னருள் பெறச் செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகளைப் பற்றி அறிவதாகும். இந்நெறியைப் பற்றி அறிந்தவர்கள், பேரின்பப் பேறு பெற்ற இந்திரனும் தான் விரும்பியவற்றைச் செய்யும் குரங்கும் ஒன்று என்பதை உணர்வர்(2815). நல்வினை, தீவினை ஆகியவற்றிற்கேற்ப அவற்றின் பயனைப் பிறவியில் அடைகின்றனர் என்பதை அறிவர். இந்திரனின் உயர்வைக் கண்டு புகழாமலும் குரங்கின் குறையைக் கண்டு இகழாமலும் இவை வினையின் பயன்கள் என்பதை அறிந்து தெளிவடைவர்.

நல்வினை தீவினைகளின் பயனைத் தெளிந்தவர்கள் தவத்தால் உயர்ந்தோரை உபசரித்தல், பிறரிடம் பகையின்றிப் பழகுதல், பேரின்ப வீடடையும் கருத்தில் மாறுபடாமல் இருத்தல், அருகனின் வழிபாட்டில் விருப்பம் கொள்ளுதல், தீயோரை நன்னெறிக்கண் செலுத்துதல், உண்மையை உரைத்தல், கீழோருடன் சேராமலிருத்தல், சினத்தைக் கைவிடுதல், ஆணவத்தை விட்டொழித்தல், அருகனின் அடியவரிடம் அன்போடு இருத்தல் ஆகியவற்றை நன்கு உணர்ந்து தெளிய வேண்டும். இந்நெறிகளை நன்கு அறிந்தவர்கள் விலங்காகவோ பெண்ணாகவோ பிறக்க மாட்டார்கள். பாழான நரகம் ஏழும் சென்றடைகின்ற துன்பத்தை ஏற்க மாட்டார்கள்(2817). கீழான தேவர்களின் பின்னே செல்லமாட்டார்கள் என்ற நற்காட்சியையும், அந்நற்காட்சியின் பயன்களையும் சிந்தாமணியில் திருத்தக்கதேவர்  தெளிவுபடுத்துகின்றார்.

சீலம்

ஒழுக்க நெறியைச் சீலம் என்று குறிப்பிடுவர். நூறுகோடி மகாவிரதங்களும், பதினெண்ணாயிரம் ஒழுக்கங்களும் பகுத்துரைக்க முடியா குண விரதங்களும், துறவியர்களால் கடைபிடிக்கக் கூடியவை(2818). இவை உயிருக்குப் பொன்னாலாகிய கவசத்தைப் போன்று பாதுகாக்கக் கூடியவையாகும். விரதங்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களின் வழியே தோன்றும் அவாவினை வெறுத்துத் தீவினையைக் குறைக்க வல்லவையாகும்(2819). நீலமணி போன்ற கூந்தலைத் தம் கையாலேயே நீக்கிக் கொண்ட பொறுமையைக் கைக்கொள்வது இவ்விரதங்களையெல்லாம் விட மேலான விரதம் எனும் பெருமை வாய்ந்தது(2820). பிறர் மனைவியை விரும்புதல், மது, தேன், பிற உயிர்களின் இறைச்சி ஆகியவற்றை உண்டு வாழ்வோர் பிறவிப்பயனை அடையும் வாய்ப்பை இழப்பார்கள்(2822). அதனால் பிறர் மனையை நோக்காத பேராண்மை சிறந்த ஒழுக்க நெறியாகும்(2821). முடி களைதல் சீலங்களுக்கெல்லாம் உயர்ந்த சீலமாகும். இத்தகைய உயர்ந்த சீலத்தைப் பின்பற்ற தானம் செய்ய வேண்டும்.

தானம்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளையும் அடக்கி ஒழுக்க நெறியைச் சுடர விடடு பொய், கொலை, களவு, கள், காமம், ஆசை என்னும் ஆறையும் தானமானது நெருங்கவிடாது. இத்தானமானது சீலத்தையும் தரும்(2824). தம்மை இழிந்தவர்களையும் போற்றிப் புகழ்ந்தவர்களையும் சரிசமமாகவே நோக்கும் தன்மையைத் தரும்(2825). இத்தகைய தானத்தை உத்தம தானம், இடைப்பட்ட தானம், கடைப்பட்ட தானம் என்று மூன்று வகையாகப் பகுத்துரைக்கின்றது.

உத்தம தானம்    

உத்தமதானம் என்பது வேதாகம நெறியைக் கற்றுத் தேர்ந்தவர்கள் தம் வீட்டை நோக்கி வருவதை அறிந்தவுடன் அவர்களைப் பணிந்து வணங்கிக் கைகூப்பி வரவேற்க வேண்டும்(2826). அவர்களைத் தம் இல்லத்தில் உயர்ந்த இருக்கையில் அமரச் செய்தல் வேண்டும். பின்னர் தூய ஆடையால் அவர் பாதங்களில் இருக்கும் தூசுகளைத் துடைத்து நீர்விட்டுக் கழுவவேண்டும். பின்னர் வாசம் மிகுந்த சந்தனம், அகில் ஆகிய நறும்புகையிட்டு, நறுமலர் தூவி வழிபடவேண்டும். அவர்கள் உண்பதற்கு உண்பன, உறிஞ்சுவன, தின்பன, பருகுவன என்ற நான்கு வகையான அமிழ்தத்தை மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றின் தூய்மையோடு நற்பண்புடை அத்தவசீலர்களுக்குத் தந்து மகிழ்தல் வேண்டும்(2827). இதுவே உத்தம தானம் என்று சிந்தாமணியில் குறிப்பிடப்படுகின்றது.

இடை,கடைப்பட்ட தானங்கள்

இடைப்பட்ட தானம் என்பது வந்த விருந்தை வாங்கி, வாழ்த்தி எதிர்கொண்டு துதித்து உள்ளிட்ட செயல்களைச் செய்யாது அவர்களுக்கு அதிகளவு சோற்றை மட்டும் இடுவது ஆகும்(2828).

கடைப்பட்ட தானம் என்பது விலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைச் சோற்றுடன் கலந்து தருவதும், பெரும் பொருளைத் தானமாகத் தருவதும் ஆகும்(2828). இம்மூன்று தானங்களில் உத்தமதானத்தைச் செய்தவர்களின் உயிர் அவர்கள் செய்த தானத்திற்கு ஏற்றளவு புண்ணியத்தை அடையும். அவ்வுயிரும் வாழ்நாள் முடிந்தவுடன் சொர்க்கம் சென்று சேரும். பின்னர் முறைப்படி ஒரு வயிற்றை அடையும். வயிற்றையடைந்த உயிர் ஒன்பது மாதங்கள் அங்கே இருந்து பின் இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும். அக்குழந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண் குழந்தையாகும்(2829-2831)

இக்குழந்தைகள் பிறந்தவுடன் அக்குழந்தைகளின் தாய், தந்தையர் தம் பூத உடலை நீத்துத் தேவர்களாகப் பிறக்க வானில் சென்று மறைந்து விடுவர்(2832). அக்குழந்தைகள் யாருடைய ஆதரவும் இன்றி வளர்ந்து நாற்பத்தொன்பது நாட்களில் அறிவு, குணம், உடல் ஆகிய மூன்றிலும் முழுமையாக வளர்ந்து விளங்கும்(2834). இவர்கள் இருவரும் வளர்ந்து வனப்புடம் இருக்கும்போது காம இன்பம் தாக்க இருவரும் ஓருயிராவர். கற்பக மரம் இவர்களுக்கு வேண்டிய பொருள்களைத் தந்துதவும்(2835,2837,2838,2840). இவ்வாறு உத்தமதானம் செய்தவர்கள் பேரின்ப வாழ்க்கையில் இன்பமடைந்து மகிழ்ந்திருப்பர்.

இபைடப்ட்ட தானத்தைச் செய்தவர்கள் கரும பூமியில் செல்வச் செருக்கிலே மயங்கி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்(2841). கடைப்பட்ட தானமான ஐம்புலன்களை அடக்கி ஆளாமல் அவற்றைத் தீய வழியில் செல்ல விட்டவர்களுக்குத் தானம் கொடுத்தோர் கடல் நடுவே உள்ள தீவுகளில் மனித உடலும், விலங்கு முகமாகவும் தோன்றுவர்(2842). அங்கே பழுத்து உதிர்ந்த பழங்களை உண்டு வாழ்ந்து கொண்டிருப்பர்(2842). இவ்வாறு தானத்தின் வகைகளும் அதைச் செய்தோர் பெறும் பயன்களையும் திருத்தக்கதேவர் சிந்தாமணியில் விளக்கிக் கூறுகின்றார்.

சீவகசிந்தமாணியில் மண்ணுலகில் சீலததைக் கடைபிடித்தவர்கள் பதினாறு வகையான கற்பகலேகத்திற்குத் தேவர்களாகத் திகழ்வர்(2843) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பேரின்பக் காட்சிப் பயனைத் துய்த்தவர்கள் உலகெல்லாவற்றையும் ஒரு குடைக்கீழ் ஆளும் இன்பத்தையடைந்து பேரரசர்களாக வாழ்வாகர்கள் என்றும் தெளிவுறுத்துகிறது.

வீடுபேறடைதல்

பொருள்களில் உண்மைப் பொருள் அறிதல் ஞானம். அப்பொருளின் தன்மை இது எனத் தெளிதல் காட்சி. ஞானம், காட்சி இரண்டையும் நீக்கமற விளங்குமாறு தன் உள்ளத்தேன வைத்தல் ஒழுக்மாகும்(2845). இங்ஙனம் கூடிய மூன்றும் சுடர் விட்டு எரிந்த பேரழல் நீண்ட காலமாக வளர்ந்த இருவினையாகிய மரத்தைச் சுட்டெரிக்க இருவினைகளும் கெட்டு விழுதல் வீடுபேறு(2845). இத்தகைய வீடுபேற்றைப் பெற்றவர்கள் இந்நிலையில் முன்னர் பெற்ற அளவற்ற ஞானம், அளவற்ற காட்சி, அளவற்ற ஒழுக்கம் அளவற்ற வீடு ஆகிய பெரும்பயனை அடைவர் இதன்பிறகு வீடு பெற்றவர் தம்முடைய உயர்ந்த நற்குணங்களால் சிறந்து விளங்கும் வீட்டுலகம் அடைவர் என்று சாரணர்கள் குறிப்பிடுவதாக சிந்தாமணி காட்சிப்படுத்துகிறது.

இவற்றையெல்லாம் உணர்ந்த சீவகன் இல்லறத்தைத் துறந்து மேலான வீடுபேற்றை நோக்கித் தவ வாழ்க்கையை மேற்கொண்டு வீடுபேறடைகிறான். நற்காட்சி, சீலம், தானம் உள்ளிட்டவை வீடுபேறடைவதற்குரிய வழிகளாகும் என்று சிந்தாமணி குறிப்பிடுகிறது.(தொடரும்..7)

 

Series Navigationவீண்மழைவாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்