காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

Spread the love

”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
தண்டாயுதபாணிக்கு அரோகரா
பழனி மலை முருகனுக்கு அரோகரா
அன்னதானப் பிரபுவுக்கு அரோகரா.”

இதுதான் கார்த்திகை மாத வேல் பூசையில் காரைக்குடி எங்கும் கேட்கும் கோஷம்.

கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதம். அரனுடைய நெற்றியில் அறுபொறிகளாக ஆங்காரமாக உதித்த முருகப்பெருமானின் வேலையும் தண்டாயுதத்தையும் பூசையிட்டு அன்னம் படைத்து ஊரோடு உணவிடும் திருவிழா இது.

வெளிநாடுகளுக்குக் கொண்டுவிக்கச் சென்ற நகரத்தார் தம் வருவாயில் ஒரு பகுதியை கோயில் கட்டவும், குளங்கள் வெட்டவும்,  வேத பாடசாலைகள் நிர்மாணிக்கவும், கலா சாலைகளை  உருவாக்கவும் முனைந்தனர். அதன்படி ஆன்மீகம், கல்வியறிவு  ஆகியற்றுக்காகப் பணிபுரிந்த நகரத்தார்  அடிப்படையில் சிவ கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சிலர் கார்த்திகை மாதம் முருகனுக்காக விரதம்  அனுஷ்டிப்பவர்கள். சிலர் புரட்டாசி மாதம் பெருமாளுக்காக விரதம் அனுஷ்டிப்பவர்கள்.

கார்த்திகை மாதம் விரதம் இருப்பவர்கள் கார்த்திகை மாதம் மட்டும் விரதமிருந்து அன்னதானமிடுவர் . சிலர் தைப்பூசம் வரை விரதமிருந்து பழனி பாத யாத்திரை சென்று அல்லது காவடி எடுத்து பூர்த்தி செய்வார்கள்.

மழையும் காற்றும் குளிரும் நிறைந்த இந்தக் கார்காலத்தில் பயிர் விளைவிக்கும் மக்களுக்கு சரியான வேலை கிடைக்காமல் உணவு கிடைக்காமல் போகலாம் என்பதால் அந்த சமயம் அவர்களுக்கு தங்கள் வருவாயில் ஒரு பங்கை ஒதுக்கி உணவு சமைத்து முருகனுக்குப்படைத்து ஊரோடு உணவிட்டு மகிழ்வது நகரத்தார் மக்களின் வழக்கம்.

இதன்படி இந்த வருடமும் காரைக்குடி எங்கும் “முத்தான முத்துக் குமரா முருகையா வா வா. “எனப் பாடி அழைத்து  கார்த்திகை சோம வாரங்களில் வேல் பூசை சிறப்பாக நடைபெற்றது. மூன்றாம் வாரம் விஷேஷம் என்பதால் காரைக்குடி ஆவுடையான் செட்டியார் வீட்டில் நடைபெற்ற கார்த்திகை வேல் பூசையில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தது.

முதல் நாளே சாமி வீடு மெழுகிக் கழுவி நடுவீட்டுக் கோலமிட்டு நடையிலும் கோலமிட்டு வைக்கிறார்கள். மறுநாள் விடியற்காலையில் விநாயகப் பெருமானை வணங்கி கோலமிடப்பட்ட விநாயகப் பானையில்  கோலமிடப்பட்ட அடுப்பில் வெள்ளைப் பொங்கல் வைக்கப்படுகிறது.

காலையிலிருந்து முருக பக்தர்கள் வர ஆரம்பிக்கிறார்கள்.  சக்தியிடம் வேல் வாங்கிய முருகனின் வேலும், தண்டாயுதமும் கொண்டு வரப்பட்டு பண்டாரத்தால் நானாவித பரிமள கந்தங்களால் அபிஷேகிக்கப்படுகிறது.யார் காலிலும் படக்கூடாது என்பதால் ஒரு அண்டாவில்  அபிஷேக நீர் பிடிக்கப்பட்டு சேமத்தில் சேர்க்கப்படுகிறது. பால் , பஞ்சாமிர்தம் போன்றவை மட்டும் தனியாகப் பிடிக்கப்பட்டு பூஜைக்குப் பின் விநியோகிக்கப்படுகின்றன.

நல்லன பெருகவும் , அல்லன தொலையவும்  வடிவேலன் வழிகாட்டுவான். வேலும் தண்டமும் நம்மைக் காப்பாற்றும் வேலனின் ஆயுதமென்பதால் அவற்றுக்கு விஷேஷ பூசை. வேல் மாறல், வேல் வகுப்பு, குமாரத்தவம், அறுபடை முருகன் கவசங்கள், சண்முகக் கவசம், வெள்ளிமலைக் கந்தர் விளக்கம், ஸ்கந்த குரு கவசம்  போன்ற பாடல்களும் பாடப்படுகின்றன.

வேலையும் தண்டாயுதத்தையும் ஒரு ஆவுடை போன்ற தட்டில் மேலே ஒரு பீடம் வைத்து நிறுத்திப் பிடித்துக்கொள்கிறார்கள். தைலம், வாசனைப் பொடி, பால், தயிர், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுச் சாறு, சாத்துக்குடிச் சாறு, இளநீர், பஞ்சமிர்தம், விபூதி போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு அபிஷேகத்தின் பின்னும் சந்தனம்,குங்குமம்,  பூ வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.

பின் வெள்ளி மயிலில் ( கிட்டத்தட்ட 3 1/2 கிலோ வெள்ளியில் செய்தது ) வெள்ளி முருகனை ஆவாகனம் செய்து வலது புறம் வேலும் இடது புறம் தண்டமும் வைக்கப்பட்டு பட்டும் பூக்களும் வைத்து அலங்காரம் செய்யப்படுகிறது. இரு புறமும் விளக்குகள் வைத்து ஏற்றப்படுகின்றன. சீரியல் லைட்டுக்களும் ஒளிபரப்பத்துவங்குகின்றன.

இதன் நடுவில் பொரியல், கூட்டு, மசியல், பச்சடி, சாம்பார், குழம்பு, ரசம், அப்பளம்,வடை,சாதம் , பாயாசம் போன்றவை மிகப் பெரிய அண்டாக்களில் சமையற்காரர்களால் தயாரிக்கப்படுகிறது. சாதம் சமைத்தவுடன்  கோலமிடப்பட்ட தரையில் பெரிய பாய்களை விரித்து சோற்றைக் கொட்டுகிறார்கள்.
இதன் நடுவில் இன்னொரு பானையை சாமியின் முன் வைத்து சர்க்கரைப் பொங்கல் செய்யப்படுகிறது. பால் பொங்கியதும் ஒவ்வொருவராக வந்து இரு கைப்பிடி அளவு அரிசி போடுகிறார்கள். வெந்ததும் வெல்லம்,ஏலம், நெய் , முந்திரி  சேர்க்கப்பட்டு பொங்கல் தயாராகிறது.

வெள்ளைப் பொங்கலையும் சர்க்கரைப் பொங்கலையும்  தீப தூபம் காட்டிப்  அடுப்பருகில் படைத்தவுடன் எடுத்துச் சென்று படைத்து வெள்ளைப் பொங்கலை மட்டும் பாயில் கொட்டிய சாதத்தோடு சேர்க்கிறார்கள்.

பாயில் கொட்டிய சாத மலையின் மேல்  பண்டாரம் மாலையிட்டு சங்கு சேகண்டி முழங்க  தீப தூபங்கள் காட்டுகிறார். வியஞ்சனங்களுக்கும் தீபம் தூபம் காட்டப் படுகிறது. அனைத்திலும் முருகனின் திருநீற்றைத் தூவிப் பரிசுத்தமாக்குகிறார். சோத்து அன்ன வட்டியால் ஒவ்வொருவரும் சோற்றை எடுத்து அங்கே வைக்கப்பட்டிருக்கும்  பெரிய கூடையில் ஆளுக்கு ஒரு கரண்டி போடுகிறார்கள்.

அந்தக் கூடை நிரம்பியதும் அதை எடுத்துச் சென்று  அலங்கரித்த வேல் முருகன் முன் நிறைய வாழை இலைகளைப் பரப்பிக் கொட்டுகிறார்கள். அதன் நடுவில் ஒரு லிங்கம் போலப் பிடிக்கிறார் பண்டாரம். சுற்றிலும் சமைத்த எல்லாக் காய்கறிகளும் அப்பளமும், வடையும் பாயாசமும் பரிமாறப்படுகின்றன.

இந்த நிகழ்வில் இந்த முறை ஒரு பெண் சங்கு சேகண்டியை ஒலித்தார். பண்டாரம் படைக்கும் வேலையில் ஈடுபட்டபோது எல்லாம் இந்தப் பெண்ணே சங்கையும் சேகண்டியையும் ஒலித்தார்.படைக்கத் துவங்கியதும் எல்லாப் பெண்டிரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மாவிளக்கை முருகக் கடவுள் முன் ஏற்றத்துவங்கினர்.

எங்கும் நெய்யின் மனமும் வெல்ல மணமும், பூக்கள் , தீப தூபத்தின் மணமும், உணவின் மணமும் கமழ்ந்து உண்ணும் வேட்கையைக் கிளப்பியது. தீபங்கள்  மாவிளக்கிலிருந்து ஒளிரத் துவங்கியதும் அங்கே ஒரு வெம்மைச்சக்தி பரவியது போலிருந்தது.

இதன் நடுவில் வந்த அனைவரும் அமர்ந்து முருகன் பாமாலைகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அர்ச்சனைக்காக அனைவரும் கொண்டுவந்திருந்த தேங்காயும், மாவிளக்குக்கான தேங்காயும் உடைக்கப்பட்டது. வேலுக்கும், தண்டத்துக்கும் , மயில்மேல் அமர்ந்த சண்முகக் கடவுளுக்கும்  தீப தூபங்கள் காண்பித்தது விபூதி பிரசாதங்கள் வழங்கியதும் அனைவரும் உணவருந்தத் துவங்குகிறார்கள். பெண்கள் மாவிளக்குகளை எடுத்து அனைவருக்கும் தேங்காயோடு வழங்குகிறார்கள்.

முருகன் பக்தர்கள் முதலில் உணவருந்த வேண்டும். அதிலும் ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகன் உணவுண்ண பக்தர்களோடு வருவார் என்பதால் ஆண்டிகளுக்கு முதலில் உணவிடுவது விசேஷம். எனவே பண்டாரம் அவர்களே முதலில் அமர்ந்து இந்த பூசையை ஏற்று நடத்துபவரின் குடும்பத்தினரின் பெயர் சொல்லி முருகன் பெயரால் வாழ்த்தி, அன்னதானப் பிரபுவாம் முருகனை வாழ்த்தி உண்ணத்துவங்குகிறார். அவர் உண்ண ஆரம்பித்ததும் மற்றவர்களும் உண்ணத் துவங்குகிறார்கள்.

மிச்சமாகும் உணவை அடுத்து அடுத்து அவர்களே இல்லங்களுக்கு எடுத்துச் செல்லவும் கொடுக்கப்படுகிறது. அதன் பின் அனைவரும் தங்கள் அர்ச்சனைப் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். அன்னதானம் ஒன்றுதான் போதும் என்ற நிறைவை உண்டாக்குகிறது. ஆதிரையின் பிச்சைப் பாத்திரத்தில் அன்னமிட்டு அனைவரின்  பசிப்பிணியையும்  போக்கிய மணிமேகலை நினைவு வந்தது.

உணவிடுதல் முடிந்ததும் வீட்டைக் கழுவி விட்டு பானகப் பூசை செய்கிறார்கள். எலுமிச்சை, வெல்லம், சுக்கு. ஏலம் கலந்த இந்தப் பானகம் முருகனுக்குப்படைக்கப்படும் விஷேஷமான ஒன்றாகும்.  பானகப் பூசையுடன் வேல் பூசை நிறைவடையும். அது வரை விளக்குகளில் நெய்விட்டு தீபத்தை ஒளிரச் செய்து கொண்டிருப்பார்கள்.

குன்றுதோறாடி வரும் குமரனோட வேலு இது
கூடி வரும் பக்தர்களின் குறை தீர்க்கும் வேலு இது.

என்ற பாடல் கோஷமாக மனதுள் ஒலிக்க அங்கிருந்து கிளம்பும்போது இறைவனின் வேலும் மயிலும் தண்டமும் நமக்குத் துணைவருவது போலிருந்தது.

 

Series Navigationஒரு தாயின் கீதா உபதேசம் ..!